Trending

Sunday, 23 June 2013

தாலியின் வரலாறுதாலி என்னும் வார்த்தை தாள-தாழ என்னும் சொல்லிலிருந்து வந்தது. தாளம் என்றால் பனை. (தாளவாடி - பனைமரங்கள் அதிகம் உள்ள பகுதி; திருப்'பனங்காடு' -தாளவனம்,தெய்வம் தாளபுரீஸ்வரர்; தாள விலாசம் என்னும் பழமையான நூல் பனையை பற்றிய செய்திகளை சொல்லும் நூல்.Toddy ~ தாடி - கள்ளு. தாடிக்கொம்பு திண்டுக்கல் அருகே உள்ள ஊர். Talipot Palm என்று ஒரு வகை பனையை வெள்ளையர்களும் குறிக்கிறார்கள். சங்க கால கன்னட மொழியிலும் தாழம் என்றால் பனைமரமே.)

பனைக்கும் தாலிக்கும் என்ன தொடர்பு?

கொங்கு திருமணம் என்பது சொந்தங்களுக்காக-ஊருக்காக செய்யபடுவது மட்டுமே அல்ல. கொங்கதேச அன்றைய அரசனான சேரனிடம் அங்கீகாரம் பெறவே திருமணம். கொங்க தேசத்தில் 24 நாடுகள் உண்டு. இருபத்திநாலு நாட்டுக்கும் சித்ரமேழி சபையில் அங்கம் வகிக்கும் பதவி பெற்ற நாட்டார் (நாட்டின் பிரதிநிதி) உண்டு. (குடியானவர்களில் நல்லோர் நாட்டின் பிரதிநிதியாக ஜாதி நிர்வாக சபையான சித்ரமேழி சபையில் அங்கம் வகிப்பர். ஒழுக்கம்-தர்மம் தவறினால் பதவி பறிக்கப்படும். அரசு நிர்வாகப் பதவி வகிக்கும் பட்டக்காரர்களும் நாட்டாராக இருப்பதுண்டு). சேரனின் பிரதிநிதிகளாக 24 நாட்டாரும் வந்திருந்து திருமணத்தை நடத்தி வைப்பார்கள். இன்றும் அதன் அடையாளமாகத்தான் நாட்டு கற்களை திருமண சடங்கில் வைப்பார்கள். ஆனால், பின்னாளில் பல பட்டக்காரர்கள் செய்த அக்கிரமங்கள் இந்த மரியாதைக்கு அவர்கள் தகுதியுடையவர்களா என்ற கேள்வியை எழுப்பிவிட்டது.

சரி, விஷயத்துக்கு வருவோம். ஒரு பனையோலையில் இன்னாருக்கு இன்னார் முன்னிலையில் திருமணம் நடந்தது என்பதை எழுதி அதில் சேரனின் பிரதிநிதிகள் கையெழுத்திடுவர். அதை மடித்து இப்போது உள்ள தாலி வடிவில் ஒரு மஞ்சள் கயிற்றில் மாப்பிள்ளை கட்டிவிடுவார். பனை ஓலை நீரில் நனைய இற்று விடுவதால் அதை பின்னர் அரக்கிலும், குயவன் செய்து தந்த தட்டானிலும் (சுட்ட மண்) செய்து பின்னர் தங்கத்திற்கு மாறினர். எனவே தாலி என்பது வெறும் திருமண அடையாளம் என்பதை தாண்டி பாரம்பரியத்தின் அடையாளம்-வரலாற்று சின்னம்-புராதனத்தின் நினைவு. நம் நாட்டின் கற்பு நெறிக்கும் ஒழுக்க வாழ்வுக்கும் ஒரு முத்திரை. திருமாங்கல்யம் என்பது காலத்தில் மாறியதுண்டு, ஆனால் மஞ்சள் நிற பருத்தி நூலே காலம் காலமாக திருமண அடையாளமாக இருந்து வருகிறது. பாரத நாடு முழுக்க சாமானிய குடிமகனின் மனைவி முதல் அரசனின் மனைவி வரை அனைவருக்கும் பொதுவான பெருமைமிகு மங்கள அடையாளம் தாலி. ஏன், தெய்வங்களுக்கும் இது பொருந்தும். தாலி அணியாத மணமான பெண் தெய்வம் எதுவும் கிடையாது.

பிராமணர்களும் இன்னும் சில சாதிகளும் பூநூலுக்கு பருத்தியையே பயன்படுத்துவதை போல தாலியும் பருத்தி நூலிலேயே கட்டப்படும். இது பணக்காரன் ஏழை என்ற வித்தியாசம் தாண்டி அனைவராலும் அணிய கூடியது.

மண அடையாளம் என்பது எல்லா மதத்திலும் எல்லா நாட்டிலும் உண்டு. தாலியை மண அடையாளம் என்பதை தாண்டி பாரம்பரியத்தின்/கலாசாரத்தின் அடையாளம். தாலியை அழிக்க வேண்டுமெனில் அனைத்து புராதன சின்னங்களையும் கட்டிடங்களையும் அழிக்க வேண்டும். இதெல்லாம் பாரத பாரம்பரியத்தை அழித்து தங்கள் மதம் பரப்ப - ஆட்சியை நிறுவ வெளிநாட்டு மதமாற்ற சக்திகள் செய்யும் கட்டமைக்கப்பட்ட சதியில் ஒன்று. இதற்க்கு பெண் விடுதலை-இந்து மத எதிர்ப்பு என்ற முகமூடி மாட்டி பெண்களை ஏமாளிகள் என்று நினைத்துவிட்டனர். மெக்ஸிகோ போல நாட்டின் கலாசாரத்தை பூர்வகுடிகளை அடையாளமற்றவர்களாக்கி ஆள்வது வேரில் இருந்து விஷத்தை வைப்பது போல.

மற்றவர்களை விட, கொங்கதேச மக்களுக்கு தாலி மேல் அதிக உரிமை உண்டு.

ஏனெனில் பனை கொங்க(சேர) தேசத்தின் தேசிய மரம்! நீர்வளம் குறைவான நம் கொங்க தேசத்தின் பெரும்பகுதிகளில் பனை மரமே தகுந்தது! எனவே பெண்ணியம் என்ற மாய வலையில் சிக்கி நம் பெருமையை நாமே அழித்துகொள்ளாமல் குலம் காக்கும் கொங்கு பெண்கள் அனைவரும் தாலியை அணிந்து வெளிநாட்டு மத மாற்றிகளின் கைக்கூலிகளான திராவிட-முற்போக்கு கிறுக்கர்கள் முகத்தில் கரி பூச வேண்டும்!

இதன் பின்னணி சுவையானது. மேற்கு கலாச்சார மோகமும, கால் சென்டரிலும், மென்பொருள் நிறுவன பணிகளிலும் திருமணம் முடிந்துவிட்டதை மறைக்கும் போக்கு தான் இதன் அடித்தளம். அந்த புற்று நோய் இப்போது மெதுவாக அனைத்து தரப்பையும் சீண்டி பார்க்க துவங்கியுள்ளது. திருமணம் முடிந்துவிட்டது அறிந்தால் சமூகத்தில தங்களுக்கான ஈர்ப்பு/கவர்ச்சி குறைவதாக நவீன யுவதிகள் எண்ணுகிறார்கள் என்று சமீப ஆய்வும் கூறுகிறது. அது மாநகரங்களில் வசிக்கும் நம் கொங்கு பெண்கள் மூலமாக பரவ துவங்கியுள்ளது. அப்படி முதிர்கன்னிகளாக காட்டிகொள்வதில் என்ன கவர்ச்சி என்று தெரியவில்லை. அதையே நம் வீட்டு மூத்த பெண்களும் பின்பற்ற துவங்குவது ஒரு அவலம்.

இதற்கு சிலர் ஆணாதிக்கம் என்னும் சாயம் பூசுகிறார்கள். ஈ.வெ.ரா பல காலமாக தாலி அகற்ற வேண்டும் என்றபோது கேட்காது, இப்போது மட்டும் எப்படி இந்த 'புற்ச்சி' வந்தது..? சிலர் கழுத்து அரிப்பு, ஒவ்வாமை என்கிறார்கள். பல ஆயிரம் வருடமாக அணியபட்டது, வெயிலில் விவசாய வேலை பார்த்தவர்களுக்கு வராத சிரமம் இப்பொது வந்துவிட்டது என்பது நொண்டி சாக்கு.

என் வகுப்புதோழி (கொங்கு-பங்காளி) சொன்னாள், “தாலி கயிரையே மதிக்காதவள் கணவனை எப்படி மதிப்பாள்; இவளுக்கெல்லாம் இனிசியளுக்கு புருசனா மிச்சர் திங்கறதுக்கு, தூக்குல தொங்கலாம்”. நியாயமான வார்த்தை!பல பாரம்பரியம் மிக்க குடும்பங்களில் தாலிக்கயிறு அணியவில்லைஎனில் சீர் செய்ய அனுமதிக்க மாட்டார்கள். ஏன், சொந்த மகளானாலும் வீட்டுக்குள்ளேயே விட மாட்டார்கள். ஆடம்பரத்தை காட்டும் செயினை விட தெய்வ முறையும், அடையாளத்தையும், மரபையும் காட்டும் மங்கள சரடுக்கு முக்கியத்துவம் தருவோம்.

தாலியை முன்னிறுத்தி காராள வம்ச குடியானவர் சீர்களில் இரண்டு முக்கியமானவை உள்ளன.

உள்கழுத்து நூலணிதல்:

கல்யானத்தன்றே உள்கழுத்து சரடணிதல் என்னும் சடங்கு நடைபெறும். கல்யாணம் முடித்து சீர்கள் எல்லாம் நிறைவுற்ற பின், மணவறையிலேயே விநாயகப் பெருமானுக்கு குழைய வடித்த சாதம் மற்றும் மஞ்சள் நூலை வைத்து பூஜித்து அந்த நூலை அருமைக்காரியோ அல்லது (வட்டாரத்துக்கு தகுந்தது போல) எழுதிங்கள் சீர் செய்துகொண்ட சீர்காரியோ பூஜை செய்து மணமகனிடம் கொடுக்க மாப்பிள்ளை அதை பெண்ணின் கழுத்தில் கட்டுவார். இந்த சடங்கு சத்தியவானை மீட்க சாவித்திரி மேற்கொண்ட விரதத்தை நினைவூட்டுவது என்று கூற்றுண்டு. இங்கே நூலணிதல் என்பதிலேயே, தாலி என்பது மஞ்சள் கயிர்தானேயன்றி தங்கச் செயின் அல்ல என்பது திண்ணம். சுமங்கலியான கொங்கு குடியான பெண்கள் எந்த காலத்திலும் மாங்கல்ய நூலின்றி மட்டும் இருக்கவே மாட்டார்கள். இது கொங்கு காராள வம்ச பெண்களுக்கே உரிய சிறப்பாகும்.

மாங்கல்ய நோம்பி (மார்கழி திருவாதிரை)


பாவை நோன்பு என்றும் ஆருத்ர தரிசனம் என்றும் பிற வட்டாரங்களில் கொண்டாடப்படும் மார்கழி திருவாதிரை கொங்கதேசத்தில் கூடுதலாக மாங்கல்ய நோம்பி என்றும் வணங்கப்படும். புதிதாகக் கல்யாணமான பெண்கள் அவர்களின் முதல் மாங்கல்ய நோம்பியை மிக விசேஷமாக கொண்டாடுவர். வீடு வாசல் சுத்தம் செய்து, நாள் முழுதும் நோன்பிருந்து மாலை சந்ரோதயத்தின் பின் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து மஞ்சள் கயிறு வைத்து அதற்கு பூஜைகள் செய்து வழிபடுவர். பின்னர் நன்கு வாழ்ந்த சுமங்கலிப் பெண்கள் (எழுதிங்கள் சீர் செய்துகொண்டிருக்க வேண்டும்) மூலமாக மஞ்சள் நூல் கட்டிக் கொள்வர். ஆண்களும் கைகளில் கட்டுவதுண்டு. சில ஊர்களில் இந்த பூஜையில் பெண்கள் மட்டுமே பங்கேற்கிறார்கள். ஆண்களுக்கு அனுமதியில்லை. மாங்கல்ய பூஜைக்கு சிவனுக்கு ஆருத்ர தரிசனத்தின் போது படைக்கும் திருவாதிரைக்களி படைக்கபடுவதும் உண்டு. கணவனின் ஆயுள் ஆரோக்கியம் நல்வாழ்வு, குடும்ப சுபிட்சம், தம்பதிகள் அன்யோன்யம் போன்ற கற்புநிறை பெண்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் தினமாகும். நோன்பில் பங்கேற்பவர்களுக்கும் மஞ்சள் நூலும் மஞ்சள் குங்குமமும் வழங்கப்படும்.
மேலும் படிக்க,
௧. கொங்கு மக்களின் பெண்ணியம்
௨. தேசத்தை மூளை சலவை செய்வது
௩. பெரியார் என்பது ஈவேராவுக்கு பொருந்துமா?
௪. அழகுக்கலையா? அசிங்கப் பிழையா? - நவீன அழகுசாதன பொருட்களின் நிஜமுகம் மற்றும் அதற்கு மாற்று 
௫. பருவத்தில் கல்யாணம் அவசியமென்ன?
௬.கவர்ச்சியா கண்ணியமா?

இந்திய பெண்ணியம், சமூகம் உட்பட பல விஷயங்களைப் பற்றி ராஜஸ்ரீ பிர்லா, பிரேமா பாண்டுரங், பத்மா சுப்பிரமணியம், குருமூர்த்தி போன்றோரின் அற்புதமான உரைகள். தற்காலத்தில் அனைவரும் அறிய வேண்டிய பல செய்திகள். 

1 comment:

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates