Trending

Sunday, 29 September 2013

அங்கப்பன் - அருக்காணி தங்கம் கொங்கு நாட்டுபற கதைப்பாடல்
வெள்ளை மனங்கொண்ட கொங்குச் சொந்தங்ளே!!


உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.இப்பகுதியில் நம் கொங்கு பழக்க வழக்கங்கள் தொடர்பாக,நான் பார்த்த,படித்த,கேட்ட சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.


நம் கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்துள்ளது இசை.நம் அசைவு ஒவ்வொன்றிலும் இசையும் இணைந்தே வருகிறது.அந்த இசையில் ஒருவகை தான் நாட்டுப்புறப் பாடல்கள்.ஒரு கவுண்டன் வாழ்வில்,தொடக்கம் முதல் அடக்கம் வரை நாட்டுப்புறப் பாடலில்லாத நிகழ்வே இல்லை எனலாம்.நாட்டுப் புறப்பாடல்கள் நம் ஆத்தாவும்,அப்பச்சியும் பாடிவைத்த பாடல்களே!!

நான் என் தாயிடமும்,என் ஆத்தா அய்யனிடமும் சிறுவயதில் கற்றுக் கொண்ட சில நாட்டுப்புறப் பாடல்களை உங்களுக்கு இங்கே பந்தி வைக்கிறேன்.வெறும் பாடலாகச் சொல்வதைவிட ஒரு கதைப்பின்னனியோடு சொன்னால் சுவையாக இருக்குமல்லவா! எனவே என் கற்பனையில் உதித்த ஒரு கதையோடு தொடங்குகிறேன்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால்:...... கொங்கு நாட்டின் புராதன ஊர்களில் சிறந்து விளங்கியது சின்னக் கவுண்டன் பட்டி.அந்த ஊரில் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வந்தனர் முத்துச்சாமிக் கவுண்டரும்,அவர் மனைவி செல்லாத்தாவும். அவர்களின் இன்பமான இல்லறத்தின் இனிய விளைச்சல் அங்கப்பன்,அருக்காணி.

பத்து வயது அருக்காணியையும் பதினைந்து வயது அங்கப்பனையும் அனாதையாக தவிக்கவிட்டு விட்டு அப்பனையும் ஆத்தாளையும் காலன் ஒரு சேரக் கவர்ந்து சென்றது பெரிய கொடுமை.

பெற்றோர்களை இழந்த அங்கப்பனும் அருக்காணியும் பெரியவர்களாக வளர்ந்து விட்டார்கள்.இருவரும் தங்களின் வயல்களில் பாடுபட்டு வசதியாகவே வாழ்ந்து வருகின்றனர்.

பாசமுள்ள தன் தங்கை அருக்காணி பருவமடைந்ததும் நல்லவன் ஒருவனுக்கு மணம்முடித்துக் கொடுக்க எண்ணுகிறான் பாசக்கார அண்ணன் அங்கப்பன்.தன் தங்கையிடம் தன் எண்ணத்தைச் சொல்கிறான்:

“கண்ணு அருக்காத்தா,நா ஒரு சமாச்சாரம் சொல்றேன்.நீ நல்லா ரோசன பண்ணி ஒரு நல்ல பதிலச் சொல்லு அம்மணி.

நீ வயசுக்கு வநத புள்ள, ஒனக்கு காலாகாலத்தில ஒரு கண்ணாலத்தப் பண்ணிப் போடலாமுனு எம்பட மனசில ஒரு நெனப்புடா தங்கம்.நீ என்ன அருக்காத்தா சொல்ற?” மனதில் உள்ளதை மறைக்காமல் தங்கையிடம் சொன்னான் அங்கப்பன்.

“ஏனுங்ணா தாய்,தகப்பனில்லாத இந்த அநாதிப் புள்ளய ஒரு தாய்க்குத் தாயாக இருந்து வளத்துனீங்க,உங்க பேச்சுக்கு மறுபேச்சு என்னிக்காச்சும் நா பேசியிருக்கனுங்களா?இந்த ஆளுக்கு கழுத்த நீட்டு அருக்காத்தான்னு சொல்லுங்க,உடனே நீட்றே”

தங்கையின் பாச வார்த்தை கேட்டு ஆனந்தமடைந்த அண்ணன் மாப்பிள்ளை தேடத் தொடங்குகிறான்.தரகர் தங்கானிடமிருந்து தகவல் வ்ருகிறது.

“ஏனுங்கோ,சின்னக்கவுண்ரே,நம்ம முத்துக் கவுண்டவலசில மாப்பிள்ளை துப்புங்க சாமி. தம்பி பேரு அவனாசியப்பன். நல்லா ராசா
மாதிரி இருப்பாருங்க. என்ன ஒண்ணு நம்மளவுக்கு வசதி இல்ல.ஆனா தங்கமான குடும்பம். பாக்கலாமுனு சொன்னீங்கனா நாளைக்கே மாப்பிள்ள வீட்டுக் காரங்களை வரச்சொல்லலாமுங்க”!

பழனிச்சாமிக் கவுண்டர்,தன் மனைவி கருப்பாத்தாள்,மகன் அவினாசியப்பன் மற்றும் ஊர் பெரியர்களோடு அங்கப்பன் வீடு வந்தார்.பழனிச்சாமிக் கவுண்டர் அங்கப்பனுக்கு தூரத்து உறவு.

”வாங்க மாமா,வாங்க அத்தே,மாப்ளே வாங்க,வாங்க” முறையோடு மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்கிறான் அங்கப்பன்.

“அம்ணீ,அருக்காத்தா,இதப் பாரு சாமி! மாமே,அத்தே,மாப்ள எல்லாருக்கும் காப்பித் தண்ணி குடு கண்ணு”
மாப்பிள்ளை வீட்டாருக்கும்,பெண் வீட்டாருக்கும் பரிபூரண சம்மதம். இருமனம் ஒத்த திருமணம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது........

அருக்காணிக்கும்,அவினாசியப்பனுக்கும் திருமணம் இனிதே முடிந்து விட்டது அல்லவா? இனி.................

கல்யாணவிருந்து முடிந்து உறவினர்கள் அவரவர் இல்லங்களுக்குச் செல்கின்றனர். பொண்ணும் மாப்பிள்ளையும் முத்துக்கவுண்டன் வலசு செல்ல மாட்டுவண்டி தயாராக நிற்கிறது

“அம்ணீ அருக்காத்தா! அட,இதென்ன இப்டி அழுவ்ரே! நம்ம மசக்கவுண்டன் வாய்க்கா தண்ணி பூரா உம்பட கண்ணுக்குள்ளதே இருக்குமாட்ட தெரியுது! ஏஞ்சாமி, புருச வூட்டுக்குப் போறப்ப இப்டியா அழுவாங்க!, அழுவக்கூடாது தங்கா! கண்ணத் தொடச்சுக்க.

நீ எங்கடா கங்காணாத சீமைக்கா போகப்போறே? இதே இவெடதால இருக்ற முத்துக் கவுண்டன் வலசுக்குதே! எட்டி நடந்தா எட்டு கெசம் தூரங்கூட இல்லியேடா கண்ணு! அட சாமி இதுக்குப் போயி யாராச்சும் இப்புடி அழுவாங்களா? அழுவாத அருக்காத்தா, எங்கண்ணல்ல. அண்ணன் நானிருக்கேஞ் சாமி,கவலப்படாதே! அடிக்கடி நா வந்து உன்னப் பாத்துக்குறே! சரியா?அழுவாத, அழுவாத, ச்ச்சேரிச்சேரி அழுவாச்ச நிறுத்து தங்கம்மா. இதே,இங்க பாரு,கண்ணத் தொடச்சுப்போட்டு போயி நம்ம பொடக்காலீல நீ வெச்ச ரோசாப் பூச்செடி சும்மா செவயோன்னு பூத்திருக்கு அருக்காத்தா,அதுல ரண்டு பூப் பொருச்சாந்து நம்ம அம்மா அய்ய படத்தில சொருவி,அவிய ரண்டு பேர்த்தையும் நல்லா கும்புட்டுப்போட்டு பெறப்படு சாமி.அய்யேய்,இதப் பார்ரா நம்ம பொட்டி வண்டி பெறப்பட்டு ரெடியாயிருச்சு!!!ஒடியா,ஒடியா! டேய் முத்தா வண்டிய மெதுவா ஓட்டோணு தெரிஞ்சுதா?”

தன் தங்கையை அழக்கூடாது என்று சொன்ன அண்ணன் கண்ணில் ஆறாக ஓடுகிறது கண்ணீர். பாகப் பிரிவினைக்கு வரும் கண்ணீரை விட பாசப்பிரிவினைக்கு வரும் கண்ணீருக்கு அடர்த்தி அதிகமோ?யாருக்கும் தெரியாமல் தன் மேல் துண்டால் முகத்தை மறைத்துக் கொள்கிறான் அந்தப் பாசக்கார அண்ணன்.இருமனம் இணைந்த திருமணம் ஒருமனதாக முடிந்தது. தீரன் சின்னமலை மன்னரின் கொங்குப்படை போல் மணமகன் வீடு நோக்கி புறப்பட்டது அங்கப்பனின் மாட்டுவண்டிகளும் கூட்டு வண்டிகளும்.வண்டி நிறைய வண்டிவண்டியாகச் சீதனங்கள்.பங்காளிகள்,மாமன் மைத்துனர்கள் ஒன்றாகச் சேர்ந்து போனால் கேலியும் கிண்டலும் தனியாகவா இருக்கும்.அதுகளும் வண்டியேறி வக்கணையாக உடன் வருகின்றன்.“ஏப்பா,அங்கப்பா நீ உம்பட தங்கச்சிக்கு என்ன பெருசா சீர் செஞ்சு போட்டே?” வாயக் கிளறியது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வாலிபனாக இருந்த அங்கப்பனின் மாமன் முறை கொண்ட இன்றும் கோலூன்றும் குப்புசாமிக் கவுண்டர்.பெரிசு கேட்ட கேள்விக்கு அருக்காணி பதில் சொல்கிறாள்.

இந்தப் பதில் அந்த முன்னாள் வாலிபருக்கல்ல. தன் பின்னால் அமர்ந்திருக்கும் தன்னோடு பிறந்த மன்னன், தன் அண்ணன், தனக்குக் கொடுத்த சீர்வரிசை பற்றி தனக்குப் பிறக்கப் போகும் தன் குழந்தக்கு!


“வாங்கிவந்த பால் பசுவு...என் கண்ணே

வாலெல்லாம் தங்கநிறம்
கொண்டுவநத பால்பசுவு ...என் கண்ணே
கொம்பெல்லாம் தங்கநிறம
அணைச்சுப் பால்கறக்க என் கண்ணே
அணைகயிறும் பொன்னாலே
பிடிச்சுப் பால்கறக்க ....என் கண்ணே
பிடிகயிறும் பொன்னாலே”


வண்டிக்கு வெளியே மாட்டின் சலங்கை சத்தத்தைவிட வண்டிக்கு உள்ளே பாட்டின் சந்தச் சத்தமே சங்கீதமாக இருந்தது! காட்டு விலங்குகளும் அருக்காணியின் பாட்டு சத்தம் கேட்டு நின்று நிதானித்துச் சென்றன.சொந்தங்களுடனும் மணமக்களுடனும் வரிசை வரிசையாகச் செல்கின்றன வண்டிகள்.பாட்டுச் சத்தம் பல மைல்களுக்குக் கேட்கிறது.“ஏப்பா சின்னக் கோமாளி,சும்மா வர்ரியே!ஒனக்குத்தான் நெறய பாட்டுத்தெரியுமே,அதுல ரண்டு எடுத்து விடப்பா கேப்போம்”

ஊர்க்கவுண்டரே சொன்ன பிறகு சும்மா இருப்பானா அந்தக் கோமாளி.பாடுகிறான்.பாட்டும் அவனைப் போலவே கோமாளித் தனமா இருந்தது.பாட்டை கேட்டுத்தான் பாருங்களே!!!


”முள்ளு முனையிலே மூணுகொளம் வெட்டிவச்சேன்

ரண்டுகொளம் பாழு ஒன்னு தண்ணியே இல்லே
தண்ணியில்லா கொளத்துக்கு மண்ணுவெட்ட மூணுபேரு
ரண்டுபேரு மொண்டி ஒருத்தன் கையே இல்லே
கையில்லாக் கொசவன் செஞ்சபானை மூணுபானை
ரண்டுபானை பச்சை ஒன்னு வேகவே இல்லே
வேகாத பானையில போட்டரிசி மூனரிசி
ரண்டரிசி நறுக்கு ஒன்னு வேகவே இல்லே
வேகாத சோத்துக்கு மோர் கொடுத்தது மூனெருமை
ரண்டெருமை மலடு ஒன்னு ஈனவே இல்லே
ஈனாத எருமைக்கு விட்டகாடு மூனுகாடு
ரண்டுகாடு சொட்டை ஒன்னு புல்லே இல்லே
புல்லில்லாக் காட்டுக்கு கந்தாயம் மூனுபணம்
ரண்டுபணம் கள்ளவெள்ளி ஒன்னு செல்லவே இல்லே
செல்லாத பணத்துக்கு தோட்டக்காரர் மூனுபேரு
ரண்டுபேரு குருடு ஒருத்தன் கண்ணே இல்லே
கண்ணில்லாக் கணக்குப்பிள்ளைக்கு விட்ட ஊரு மூனு ஊரு
ரண்டு ஊரு பாழு ஒன்னு குடியே இல்லே
குடியில்லா ஊரிலே குமரிப்பொண்ணு மூனுபேரு
ரண்டுபேரு மொட்டை ஒருத்திக்கு மயிரே இல்லே
மயிரில்லாப் பெண்ணுக்கு வந்த மாப்பிள்ளை மூனுபேரு
ரண்டுபேரு பொக்கை ஒருத்தனுக்குப் பல்லே இல்லே”


”அப்பா கோமாளி நா என்ன்மோனு நெனச்சே!அட உங்கிட்டயும் நெறய விசியமிருக்குத்ப்போவ்” ஊர்க்கவுண்டர் கோமாளியை மனதாரப் பாராட்டினார். திருமணம் முடிந்து மணமகன் வீடு வந்த உறவினர்கள் விருந்து முடிந்து தமது ஊர் திரும்பினர். அங்கப்பன் மட்டும் அன்று அங்கேயே தங்கிவிட்டான்.மறுநாள் காலை அங்கப்பன் தன் அத்தை,மாமாவிடம்,”மாமா,அத்தே,அப்ப நா கெளம்ரணுங்க.மாப்ள, நா போயிட்டு வரணுங்க.அப்பறம் மாமா, எம்பட தங்கா அருக்காத்தால நா நெம்பச் செல்லமா வளத்துப் போட்டேனுங்க.அவளுக்கு வெவரம் பத்தாதுங்க,நீங்க ஒங்க புள்ள மாதிரிப் பாத்துக்கோணுங்க மாமா” சொல்லும்போதே அங்கப்பனால் அழுகையை நிறுத்த முடியவில்லை.“இதப் பாரு அங்கப்பா நீ வெசனப்படாமா போயிட்டு வா.அருக்காத்தா இனி எங்க புள்ள.நாங்க நல்லா பாத்துக்றோம்.” பழனிச்சாமிக் கவுண்டரின் ஆறுதல் வார்த்தை கேட்டுத் திரும்பிய அங்கப்பன் தன் தங்கையிடம் செல்கிறான்.“அம்ணீ அருக்காத்தா! நா போயிட்டு வரேங் கண்ணு! மாமா,அத்தே,மாப்ள அல்லாரும் ஒன்ன நல்லா பாத்துக்குவாங்க,நீ கவலப் படாமே தகிரீமா இருகோணுங் கண்ணு.அண்ணன் எட்டுக்கொரு விச ஒன்ன வந்து பாக்கரண்டா சாமி,வரட்டுமா?”“அண்ணா நா தகிரீமா இருந்துக்குவேணுங்க,நீங்க என்ன நெனச்சுக்கிட்டு சும்மா கவலப்பட்டுக்கிட்டே இருக்காதீங்கோ.இந்தாங்கோ:” பாலன்னம் கிண்ணியிலே

பாயாசம் தட்டத்திலே
பாலு குடியுங்களண்ணா
பாயாசம் உண்ணுங்குளண்ணா”


ஆசையோடு தங்கை அருக்காணி கொடுத்த பாலை அன்போடு பருகிய அண்ணன் அங்கப்பன் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு ஊர் திரும்மினான்.தன் தங்கை அருக்காணியிடம் விடை பெற்று ஊர் வந்த அங்கப்பன் தங்கை நினைவாகவே இருக்கிறான்.

ஏனுங்கோ வட்டல்ல போட்ட சோறு ஆறிப்போச்சு.திங்காம விட்டத்த
பாத்துக்கிட்டே உக்காந்திருக்கீங்க.எப்பவும் அருக்காத்தா நெனப்பு தானா?சோத்த பாத்து தின்னுங்க மாமாதன் மனைவி சின்னமணி குரல் கேட்டு திரும்பினான் அங்கப்பன்.

இல்ல சின்னமணி,கைக்குள்ளய இருந்த புள்ள,இப்போ அவளப் பிரிஞ்சு இருக்க முடியல,எந்நேரமும் அருக்காத்தா நெனப்பாவே இருக்கு. நா சோறூட்னாத்தா திம்பா,இப்ப சோறு தின்னாளோ இல்லியோ.கையில் சாதம் கண்களில் கண்ணீர். அங்கப்பனால் சாப்பிடவும் முடியவில்லை. அழுகையையும் நிறுத்தவும் முடியவில்லை.

ஏனுங்க, நம்ம அருக்காத்தால நல்ல எடத்திலதே குடுத்திருக்கோம்.அவளுக்கு ஒரு கொறயும் இல்ல.அவ நல்லா இருப்பாங்க.நீங்க தகிரீமா இருங்கோ.என்னங்க இது சின்னப் புள்ள மாதிரி இப்புடி அழுவுறீங்கோ.ச்சேரி,ச்சேரி கண்ணத் தொடச்சுப்போட்டு பேசாம சோத்த தின்னுங்க.சின்னமணியின் ஆறுதல் வார்த்தையால் சற்று அமைதியானான் அங்கப்பன்.

அங்கப்பன் நிலை இதுவென்றால் அங்கே அருக்காணியின் நிலை என்ன?

ஏனம்மணி அருக்காத்தா, அட இதன்ன வட்டல்ல போட்ட சோறு அப்பிடியே இருக்குது.திங்காமே செவுத்த பாத்துக்கிட்டே இருக்கியே,என்னாச்சு அருக்காத்தாபழனிச்சாமிக் கவுண்டரின் அன்பு மொழி கேட்ட அருக்காணி் தன் மாமாவிடம்:

ஒன்னுமில்லீங்க மாமா,எம்பட அண்ணன் நெனப்பாவே இருக்குதுங்க.அண்ணன பாக்கோணும் போலிருக்குங்கோ.ஏனுங்க மாமா நம்ம மாரீக்கால அனுப்புச்சு அண்ணன கூட்டிக்கிட்டு வரச்சொல்றீங்களா?”

அருக்காத்தா நாளக்கி நாத்து வாங்க நா புள்ளாச்சி போறேன்.வரும்போது அப்பிடியே ஒங்கண்ணன பாத்து சொல்லீட்டு வாரேன்.நீ கவலப்படாமே சாப்புடு அருக்காத்தா”. தன் கணவனின் குரல் தன் கவலைக்கு சற்று ஆறுதலாக இருந்தது அருக்காணிக்கு.

அங்கப்பன் வீட்டிற்கு வருகிறான் அவிநாசியப்பன்.

அவிநாசியப்பனைக் கண்ட அங்கப்பன்,”வாங்க.வாங்க மாப்ள வூடல் அம்மா அய்யே அல்லாரும் நல்லாருக்காங்களா? ஏனுங்க மாப்ள வரும்போது அருக்காத்தலயும் கூட்டிக்கிட்டு வந்திருக்லாமுங்களே.என்றான்.

நா வேற சோலியா புள்ளாச்சி வரைக்கும் போய்ப்போட்டு அப்பிடியே உங்களப் பாத்துப்போட்டு போலாமுனு வந்தனுங்க மாமா.அப்பறமுங்க மாமா நம்ம அருக்காத்தா உங்கள பாக்கோனுமின்னு உங்கள வரச்சொன்னாலுங்கோஅவிநாசியப்பன் சொன்னதைக் கேட்டு ஆனந்தமடைந்த அங்கப்பன்..........


அருக்காணி சொன்னதை அவிநாசியப்பன், அங்கப்பனிடம் சொன்னான்.அல்லவா!

சேரிங்க மாப்ள எனக்கும் எம்பட பொறந்தவள பாக்கோணும்போல இருக்குதுங்க.அருக்காத்தாலுக்குஎன்னென்ன வேணுமின்னு சொல்லி வுட்டுருக்காளோ அதையெல்லாம் வாங்கிக்கிட்டு நானு நாள மக்யா நாளைக்கு வாரேன்.அப்ப நீங்க ஒண்னு பண்டுங்க. சாப்புட்டுப்போட்டு நீங்க முன்னால கெளம்புங்க,நா பொரவால வாரேன்

ஏம் புள்ள சின்னு,நீயி சிக்ரமாச் சோத்த ஆக்கி வையி.நா போயி அந்த வெடக்கோழிய அடிச்சாரேன்.

மனைவி சின்னமணி அடுப்பு வேலையை கவனிக்க,அங்கப்பன் கோழியடித்து சுத்தம் செய்தான்.

மாமோவ் சும்மா சொல்லப்படாது.நா இந்த மாதர ஒரு கோழிக்கறிய எம்பட ஆயிசுல சாப்புட்டதில்லீங்கோ.ச்சேரி அப்ப நா வருட்டுங்களா?” அங்கப்பனிடமும் சின்னமணியிடமும் விடை பெற்றுக் கொண்டு ஊர் புறப்பட்டான் அவிநாசியப்பன்.

ஒருவாரம் வேகமாக ஓடிவிட்டது,தன் தங்கையைக் காண அங்கப்பன் மனைவி சின்னமணியோடு புறப்பட தயாராகிறான்.

சின்னு அட இதன்ன இன்னாங் கெளம்பாம இருக்க.நேரமாச்சு.அருக்காத்த நம்பள காணாங் காணானு பாத்துக்கிட்டே இருப்பா.அட இந்தக் கெரகத்த தூக்கியெறிஞ்சு போட்டு வேற நல்ல சீலயக் கட்டிக்கிட்டு வா.

அருக்காணி கேட்ட பொருட்களோடு இருவரும் வண்டியில் செல்கின்றனர்.ஏனுங்க ஒங்க தங்கா அப்புடி என்ன கேட்டா.இவ்வளவு இருக்கு பைக்குள்ளசின்னமணி தன் கணவனிடம் கேட்டாள். அதற்கு அங்கப்பன்:

தேனீஞ்சித் தங்கா தனக்கு
தேனுமேல ஆசையின்னு
சீட்டெழுதிப் போட்டாளே
சீட்டைக் கண்ட நாளையிலே
தேனழிச்சுக் கோட்ட கட்டி
தேருமேல பாரம் வச்சு


அதான் எம்பட தங்காளுக்கு தேன் கொண்டு போறோம்.ஊரு சனங்க இதப் பாத்தா என்ன சொல்லுவாங்க தெரியுமா சின்னமணி,

தேரிலே உள்ளிருக்கும்
தேன் கோட்ட யாருதுன்னார்
எங்களோட தங்கா
தேனுமேல ஆசையினு
சீட்டெழுதிப் போட்டது 


அங்கப்பனும்,சின்னமணியும் அருக்காணியின் ஊர் சென்று சேர்ந்தனர்.இவர்கள் வருகையை கேள்விப்பட்ட அருக்காணியின் மனநிலை எப்படி இருந்தது:

தேனீஞ்சித் தங்காளும்
தேரு வந்து சேருமுன்னே
திண்ண ஏறிப் பார்த்திடுவா
திரணவல்லிக் கோலமிடுவா
வாசல் வழிச்சிடுவா
வர்ணமல்லி கோலமிடுவா

அன்போடும் தேனோடும் வந்த அண்ணன்,அண்ணியை பாசத்தோடும் நேசத்தோடும் வரவேற்ற அருக்காணி,

அண்ணா நல்லாருக்கீங்களா,நங்கே நல்லாருக்கீங்களா? பண்ணயமெல்லாம் எப்படிப் போவுதுங்க. இத்தன நாளா ஏனுங்கண்ணா நீங்க என்ன வந்து பாக்கவே இல்ல.என்னப் பாக்காமே அப்புடி கவண்டனுக்கும்,கவுண்டிச்சிக்கும் என்ன அங்க பெரிய வேல?”

செல்லமாக கோபித்த தன் தங்கை தலையை வாஞ்சையுடன் தடவி அங்கப்பன் சொல்கிறான்.

ஏனம்மணி ஒன்னப் பாக்கறத விட எனக்கென்னம்மா பெரிய சோலி? உம்பட நங்கையாளுக்கு ரண்டு நாளா மேலுக்குச் சொகமில்லையா,அதேன், வரமுடியலைடா சாமி.அப்பறண்டா
நீ தேனு வேனுமின்னுனு சொன்னயாமா,இதோ உனக்கு தேனு
கொண்டாந்திருக்கே பாரு.தங்கா இந்தா இதுல ஒரு சொட்டு எடுத்து உம்பட நாக்குல வெச்சுப் பாரு.ஒம்பட பேச்சு மாதிரியே இந்தத் தேனும் நல்லா இனுப்பா இருக்கும் கண்ணு,” என்றான்.

அண்ணா,இன்னும் கொஞ்ச நேரத்தில அத்தே,மாமா,அவுங்க மூனு பேரும் வயக்காட்டிலிருந்து வந்திருவாங்க.நீங்க பேசிக்கிட்டிருங்கோ. நா போயி சோறாக்கறனுங்கோ

உணவு தயார் செய்ய அடுப்பங்கரை சென்ற தன் தங்கையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அங்கப்பன்.

ஏனுங்க மாமா என்னமோ இன்னிக்குத்தான் அருக்காத்தால புதுசா பாக்ற மாதிரிப் பாக்கறீங்கோமனைவியின் குரல் கேட்டுத் திரும்பிய அங்கப்பன் தன் மனைவி சின்னமணியிடம் தன் தங்கை சமையல் பற்றிச் சொல்கிறான்:

ஆக்கி வெளியே வர எம் பொறவி
தங்காளுக்கு அடிஉடம்பு வேர்வை வரும்
பொங்கி வெளியே வர எம் பொறவி
தங்காளுக்கு பொன்னுடம்பு நீர் வாங்கும்

அண்ணன் அண்ணிக்கு அமுது படைக்க ஓடி ஓடி சமையல் செய்த அருக்காணி தெப்பமாய் நனைந்து விட்டாள்.முந்தானையால் முகம் துடைத்துக் கொண்டே,”ஏனுங்கண்ணா இன்னும் அவிங்க எல்லாம் வரலையா.அண்ணா சோறாக்கிப் போட்டேனுங்க,ஒங்களுக்குப் புடிச்ச எல்லாப் பொறியலும் செஞ்சு போட்டேனுங்க.இருங்கண்ணா எலைக்கு ஆளனுப்பியிருக்கேன்.

அது கேட்ட அங்கப்பன் தன் தங்கையிடம்....


அங்கப்பனும்,மனைவி சின்னமணியும் அருக்காணி வீட்டில்......

அண்ணா எலைக்கு ஆள அனுப்பியிருக்கோனுங்க!சித்த வடத்தில வந்திருவானுங்கோ!அருக்காணியின் பாசமழை பலமாகவே பெய்கிறது.

ஏனம்மிணி அருக்காத்தா,அட எலயெல்லாம் எதுக்குடா சாமி.நாங்க என்ன ஒரம்பறையா?உண்ட்ற பொறந்தவனும் உம்பட நங்கையாலுந் தா. ஏஞ்சாமி வட்டல்ல போடு.அது போதுமடா கண்ணு

அங்கப்பன் சொல்லி முடிப்பதற்குள் ஒரு கட்டு இலையுடன் ஆள் வந்து விட்டான்.ஏனுங்க மாமா எல எங்கிருந்து வருதுங்க”, சின்னமணியின் கேள்விக்கு அங்கப்பன்:

வடக்கே மதில் தொறந்து
எம் பொறவி தங்கா
வாழ எலைக்கு ஆளனுப்பி
தெக்கே மதில் தொறந்து
எம் பொறவி தங்கா
தென்ன எலைக்கு ஆளனுப்பி

அட சின்னு எம்பட தங்கா எங்கிருந்து எல கொண்டாந்திருக்கா பாத்தியா.அன்னைக்கு ஒங்கொண்ண வீட்டுக்குந்தா போனோமே ஒழுங்கான வட்டல்ல சோறு போட்டாளா உம்பட நங்கையா?”

ஏனுங்க மாமா எம்பட பொறந்த வூட்டப் பத்தி கொற பேசுலீனா உங்களுக்கு தூக்கமே வராதா?இதென்னங்க பழமே,வந்தஎடத்திலெல்லாம்.சித்தே கம்முனு இருக்கீங்களா?”

சின்னமணியிடம் வழக்கம் போல வாங்கிக் கட்டிக்கொண்ட அங்கப்பன் மனைவியின் பேச்சு தன் காதில் கேட்காதது போல் ஏஞ்சின்னு சாப்டலாமா?” பேச்சை மாற்றினான்.

பழனிச்சாமிக் கவுண்டர்,கருப்பாத்தாள்.அவிநாசியப்பன்,அங்கப்பன்,சின்னமணி அனைவரும் வரிசையாக பாயில் அமர்ந்தனர்.அருக்காணி அனைவருக்கும் உணவு பரிமாறினாள்.அருமையான சாப்பாடு.உண்ட களைப்பு தீர திண்னையில் அனைவரும் அமர்ந்து உரையாடுகிறார்கள்.

ஏனப்பா அங்கப்பா விருந்து எப்படி இருந்துச்சு.இப்ப அருக்காத்தா நல்லா சமையல் செய்யுறா!

ஏனுங்க மாமா எம்பட பொறந்தவ பந்தி வெச்சது எப்படி இருந்துச்சுன்னு சொல்ட்டுங்களா,சொல்றே கேளுங்க:

தென்னயச் சுற்றியல்லோ
தேடி வப்பா நூறு வகை
வாழயச் சுற்றியல்லோ
வாங்கி வப்பா நூறு வகை

அட,அட,என்னா பாசம்.ஏனுங்க மாமா நானுந்தே ஒங்களுக்கு அன்னாடும் சமைச்சு போட்றேன்.என்னிக்காவது ஒரு நாளாவது என் சமயலப் பத்தி பெருமயா நீங்க சொன்னதுண்டா?” சின்னமணியின் சீண்டலுக்கு அங்கப்பன் மீண்டும் தன் தங்கை அருக்காணியின் சமையல் பெருமை சொல்கிறான்,எப்படி?..........


அருக்காணி சமையலை அண்ணன் அங்கப்பன் அகமகிழ்ந்து பாராட்டுகிறான்.

தின்னு வெளியே வந்தா
தெருவுக்கே மிச்சப்படும்
உண்ணு வெளியே வந்தா
ஊருக்கே மிச்சப்படும்,

சந்தனத்து ஏப்பம் விட்டா
எம் பொறவி தங்கா
சந்தோஷப் பட்டிருப்பா
போறேன்னு சொல்லிட்டா
எம் பொறவி தங்கா
பொலம்பிக் கலங்கிடுவா

அங்கப்பா அருக்காத்தாலப் பத்திப் பேசறதுன்னா நீ வெடிய வெடியப்
பேசிக்கிட்டே இருப்பியாட்டிருக்குது.இந்தா இந்த வெத்தலயப் போடு.உம்பட பொறந்தவ போட்ட சோறு செரிக்கோணுமல்லோ”.
கருப்பாத்தாவின் குரல் கேட்டு பாட்டை நிறுத்திய அங்கப்பன் பாக்கொன்றை வாயில் போட்டான்.

சேரிங்க மாமா அப்ப நாங்க கெளம்பரம்ங்க.அத்தே வருட்டுங்ளா,மாப்ள போயிட்டு வாரேணுங்க,அம்ணீ அருக்காத்தா நா வாரஞ்சாமி

அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு அங்கப்பனும்,சின்னமணியும் ஊர் புறப்பட்டனர்.

காலங்கள் ஓடின.ஒரு நாள்........ ஊழித்தாண்டவம் உக்கிரமாக ஆடியது.ஆழிப்பேரலை போல் பெய்த மழையால் முத்துக் கவுண்டன் வலசின் மூலை முடுக்கெல்லாம் வெள்ளக்காடானது.
பழனிச்சாமிக் கவுண்டரின் பர்ம்பரை வீடு பாறை விழுந்த பட்டுப்பூச்சியாய் அழிந்து போனது,குடியிருக்க வீடில்லை.ஏர்பிடிக்க மாடில்லை.கழனியை மேம்படுத்த காசில்லை.வசதியில்லா விட்டாலும் வறுமையில்லாமல் வாழ்ந்து வந்த அந்தக் குடும்பத்தில்..... இன்றுவறுமைவசதியாக வாழ தனக்கு வசதியான இடம் கிடைத்து விட்டதென வந்து குந்தி விட்டது. 

ஏம்புள்ள அருக்காத்தா,வீட்ட மராமத்து பண்ணோனும்.விழுந்து கெடக்கும் வெவசாயத்த தூக்கி நிறுத்தோணும்.கையில காசில்ல.நா ஒன்னு சொல்றேன் நீ தப்பா நெனைச்சுக்கக் கூடாது.நம்ம இந்த நெலைக்கு வந்துட்டோம்.இதிலிருந்து எப்புடியாச்சும் கரையேறோனுமா இல்லியா.அதனால உம்பட அண்ண போட்ட நகையை குடுத்தீனா அத வெச்சு போன வாழ்வே மீத்து புதுவாழ்வெ தொடங்கலாம்.என்ன சொல்ற அருக்காத்தாசொல்லிவிட்டு அருக்காணியையே பார்த்துக் கொண்டிருந்தான் அவிநாசியப்பன்.அழுகையை நிறுத்தி அருக்காத்தா பதிலுரைக்கிறாள்.

சரிங்கோ,இந்த நகையப் பூரா வெச்சு பணம் கொண்டாங்க.ஏனுங்க நீங்க எதுக்கும் கவலப் படாதீங்க.நாம பழைய நிலமக்கி கண்டிப்பா வருவோமுங்க.ஆனா ஒன்னுங்க,நம்ம இப்ப இருக்கிற நெலமய எம் பொறந்தவருகிட்ட சொல்லிப் போடாதீங்க.எங்கண்ணனுக்குத் தெரிஞ்சா அவருனால தாங்கமுடியாதுங்கோசொல்லி முடிப்பதற்க்குள் அருக்காணியால் அழுகையை அடக்க முடியவில்லை.மாதங்கள் ஓடின.

சின்னக் கவுண்டன் பட்டியிலே அன்று சந்தை. சந்தையிலே மாடு வாங்க வந்த அங்கப்பனை சந்திக்கிறாள் மாரியம்மாள் என்ற அவிநாசியப்பனின் பழைய பண்ணயத்தில் வேலை செய்த கூலியாள்.

ஏம்புள்ள மாரீக்கா, அட இதெப்ப வந்தே.அங்க எம்பட தங்கா அருக்காணி நல்லாருக்காளா? நா அருக்காணியோட நங்கையாளுக்க பண்டுதம் பாக்க மேக்கு சீமைக்கு போயிட்டே.மாசம் பத்தாச்சு. நேத்துத்தே வந்தே.நாளைக்கி அங்க வாரே.என்ன நானே பேசிக்கிட்டிருக்கேன்.ஏம்புள்ள எம்பட தங்கா எப்புடியிருக்கா,இதென்ன பேசறதுக்குக்கூட காசு கேப்பியாட்டிருக்குது.

சாமீ நா என்னத்த சொல்றது:

மலையோரங் கத்தாழை
மாசம் ஒரு பூமாழை
மயிலி பொழைப்பான்னு
மாலை அனுப்புனீங்க........


தன் தங்கையின் வறுமை கண்டு மனம் கலங்கிய அண்ணன் அங்கப்பன் தன் தங்கையிடம்:

பாலும் குடிக்க வல்லே தங்கா
பாயாசம் உண்ண வல்லே
பொந்தியிலே அடைச்சிருக்கும்
பூரணத்த சொல்லு தங்கா

இதுவரை பொத்தி வைத்திருந்த துக்கம் வெடித்து வெளிக் கிளம்பியது அருக்காணிக்கு.வெட்கத்தை மறைக்கலாம். துக்கத்தை மறைக்க முடியுமா?தன் அண்ணனை கட்டிக்கொண்டு கதறி அழுகிறாள்.

பூரணத்த சொன்னாக்கா 
பொறப்பு கலங்கி விடும்
போலீசு நாயம் வரும்
அம்மா பொறந்தது 
ஏழு தல வாச!எழுபதடிக் கல்கோட்டை
என்னக் குடுத்தது
ஏழூர் பரதேசி,இண்டம் புதர்க்காடு!

அருக்காணியால் அழுகையை நிறுத்த முடியவில்லை.அழுவாத அம்ணீ! உனக்கென்ன சாமி கொறஅண்ணன் அங்கப்பனாலும் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.ஒரு தூய்மையான கொங்கு ஆண்பிள்ளை அழக்கூடாதென்பதால் சிரமப்பட்டு அழுகையை அடக்கிக் கொண்டான்.தங்கை அருக்காணி,அண்ணனின் முகத்தைப் பார்த்து:

எங்கொறயச் சொன்னாக்கா
இண்ட முள்ளும் இத்து ழுகும்
இண்ட முள் உழுந்தாலும்
எங் கொறதான் தீரலையே

வலிமையான இண்ட முள்ளே அவள் குறையைக் கேட்டு இற்றுவிழுமெனில் அந்த அன்பு அண்ணனின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்.

தன் அன்புத் தங்கைக்கு ஆறுதல் சொல்லி வேண்டிய பணமும் கொடுத்து விட்டுஇதப் பாரு அருக்காத்தா,நீ எதுக்கும் கவலப்படாதே.அண்ண நானிருக்கேண்டா கண்ணு! எம்பட ஒடம்பில உசிறு இருக்கிற வரைக்கும் ஒனக்கு ஒரு கொறையும் வராம நா பாத்துக்கிறேன் சாமி.நீ மறுவாம இரு தங்கா.அண்ண நா இனி அடிக்கடி வந்து பாத்துக்குறே,நீ அழுவாத கண்ணு! சொன்னாக் கேளு சாமி.ஏங் கண்ணு நாந்தே எல்லாத்தியும் பாத்துக்குறேனு சொல்லறனல்லோ.நீ மறுக்கா மறுக்கா அழுதுக்கிட்டே இருந்தீன்னா எம் மனசு வெடிச்சுப் போயிறுந் தங்கா

அழுத தங்கைக்கு ஆறுதல் சொன்ன அண்ணன் அழுகையை அடக்கிக் கொண்டு அங்கிருந்து பிரிய முடியாமல் பிரிந்து சென்றான். ..........தொடரும்தங்கைக்கு ஆறுதல் சொல்லி வீடு வந்து சேர்ந்தான் அங்கப்பன்.தன் தங்கை அருக்காணியின் நினைவாகவே இருந்தான்.

ஏனுங்க மாமா எப்பவும் அருக்காத்தால நெனச்சுக் கவலப் பட்டுக்கிட்டே இருக்கீங்க.அவதான் இப்ப நல்லாருக்காள்ளோ!கவலய விட்டுப்போட்டு காரியத்த பாருங்கோ மாமா”,சின்னமணியின் குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பிய அங்கப்பன்:

அதில்ல சின்னமணி பணங் காசப்பத்தி கவலப் படாமே வளந்த புள்ள,இன்னிக்கி எல்லாம் போயி அவ மருவி,மருவி நிக்கறதப் பாத்தா எங் கொலயெல்லா தீயா எரியுது சின்னு,ச்சேரி,எம்பட மேல் துண்டயும் அந்த அங்கராக்கயும் எடு,நா தோட்டம் போயிட்டு வாரேன்

காலங்கள் வேகமாக ஓடுகிறது.எப்பவும் சுற்றும் பூமி சுற்றிக் கொண்டே இருக்கிறது.இரவு பகல் மாறி மாறி வருகின்றன.மாறும் உலகில் மாறாதிருப்பது மாற்றம் மட்டு்ம்தானே.

ஒரு நாள் உடல்நலமில்லாமல் படுத்து விட்டாள் அருக்காணி.நாட்டு வைத்தியர் பார்த்து கைவிரித்து விட்டார்..

ஏனுங்,எனக்கு ஒடம்பு நல்லாயிருக்குங்கோ,எம்பட அண்ணங்கிட்ட எம்பட ஒடம்ப பத்தி இப்ப ஒண்னும் சொல்லிடாதீங்க.அண்ணனுக்குத் தெரிஞ்சா ரொம்ப வெசனப்படுவாங்க,” அருக்காணி பேச முடியாமல் பேசினாள்.

சரி அருக்காத்தா,நா ஒன்னுஞ் சொல்லுல, நீ மொதல்ல இந்த மருந்தக் குடிகவலையோடு அருக்காணிக்கு மருந்து கொடுக்கிறான் அவிநாசியப்பன். 

அன்றிரவு அருக்காணியின் உடல் தீயாக கொதிக்கிறது.அண்ணனை நினைத்து ஏதேதோ அரட்டுகிறாள்.

உடல் துடிக்கிறது. உயிர் வலிக்கிறது.பேச்சு வர மறுக்கிறது.கை கால்கள் உதைத்துக் கொள்கின்றன். தன் அண்ணனை நினைக்கிறாள்.ஆனால் தன் வாய் விட்டு ’”அண்ணா”’ என்று சொல்ல முடியவில்லை.ஆவி நின்று,நின்று,துடித்துத் துடித்து கடைசியில் அடங்கிப் போனது. எல்லாம் முடிந்து விட்டது.

இங்கே சந்தையில்அங்கப்பன்,”இத பாரு செட்டியாரே! சும்மா கசகசன்னு பேசாதீங்க.நீங்க கைவீச்சு சொல்றீங்க,நா காள முறி சொல்ற,இப்புடியே பேசிக்கிட்டிருந்தா எப்ப மாடு வாங்கறது.சேரி உங்களுக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம் கோதும்பிக்கு முடிங்கசாயாக் கடையில் நின்று கொண்டு அங்கப்பன் தான் வாங்கப் போகும் செவல மாட்டைப் பத்தி திண்டுக்கல் வியாபாரியிடம் பேரம் பேசிக்கொண்டிருக்கிறான்.


சந்தையில் எல்லா இடங்களிலும் அங்கப்பனைத் தேடிய மாரியம்மாள் களைத்துப் போய் தேநீரருந்த அந்த சாயாக் கடைக்குள் நுழைகிறாள்.”மாரீக்கா அட எங்க புள்ள ஆளீவே பாக்க முடியல, எம்பட தங்கா அருக்காத்தா எப்புடிப்புள்ள இருக்கா?” அங்கப்பனின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் ஓ,,,, வெனக் கத்தி விட்டாள் மாரியம்மாள்.

என்னவோ ஏதோவென்று பயந்து போன் அங்கப்பன் அருக்காணியை வெளியே அழைத்து வந்து தனியிடத்தில் வைத்துக் கேட்கிறான். “அட இதேம்புள்ள இப்புடி அழுவற? என்ன நடந்திச்சு?சீக்ரம்மாச் சொல்லு மாரீக்கா”

மாரியம்மா சொல்ல முடியாமல் முன்னிலும் வேகமாக அழத் தொடங்கி விட்டாள்.அங்கப்பனுக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டது போல் தோன்றவே,”மாரீக்கா அட சீக்கிரமாச் சொல்லு புள்ள,இதென்ன உன்னோட பெரிய எழவாப் போச்சு!அட கெரகம் புடிச்ச சனியனே சொல்லித் தொலை”

ஆத்திரதின் உச்சிக்கு சென்று விட்டான் அங்கப்பன்.

“ சாமீ நா என்னனு சொல்லுவே,ஏதுன்னு சொல்லுவே,உங்களோட தங்கச்சி நம்ம சின்னக் கவுண்டச்சி,மேலுக்குச் சொகமில்லீன்னு படுத்ததுதேஞ் சாமீ! அண்ணா,அண்ணான்னு பொலம்பியே போய்ச் சேந்திருச்சு சாமீ” அழுகையை நிறுத்த முடியாமல் எப்படியோ சொல்லி முடித்தாள் மாரியம்மாள்.

“அய்யோ அருக்காத்தா” என்று அலறிக் கீழே சாய்ந்தான்,மூர்ச்சையடைந்த அங்கப்பனை மற்றவர்கள் துணையோடு அவன் வீடு கொண்டு சேர்த்தாள் மாரியம்மாள்.

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates