Trending

Saturday, 14 September 2013

திருச்செங்கோடு பணிமலைக்காவலர் வரலாறு

பாரதத் திருநாட்டில் எத்தனையோ ஞானிகளும், மாவீரர்களும் பிறந்து நம் மண்ணிற்காகவே வாழ்ந்திருந்து, மறைந்தபின்னரும் நமக்கு வழிகாட்டிகளாக இருந்து வருகின்றனர். அப்படிப்பட்ட தர்மாத்மாக்களை நம் முன்னோர் பல இடங்களில் கடவுளாக வழிபட்டு நினைவுகூர்ந்து வருகிறார்கள்.

வெள்ளையர், இஸ்லாமியர் உள்ளிட்ட அந்நியப் படையெடுப்புக்களின் போது பலர் தங்கள் உயிரைத் தியாகம் செய்து போராடியதன் பலன்தான் இன்று நம் கண் முன்னால் இருக்கும் பழமையான கோவில்களும், கலாசார-வரலாற்றுச் சின்னங்களும்.

கொங்கு மண்டலத்தில் சங்க காலம் தொட்டு புகழ்பெற்ற சிவாலயமும் கொங்கேழு சிவதலங்களில் ஒன்றும் ஆன திருசெங்கோட்டு மலை வரலாற்றில் கூறப்படும் ஒரு வரலாற்றுச் சம்பவத்தை இங்கு பார்ப்போம்.

மாலிக்காபூர் படையெடுப்பு என்பது நமது தென்னாட்டு வரலாற்றில் எவ்வளவு கொடுமையான காலக்கட்டம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் அடிமையாக வந்து தளபதியாக மாறிய மாலிக்காபூர், மதம் பரப்பும் பொருட்டு படையெடுத்து வந்து தென்னாட்டைச் சூறையாடினான். மாலிக்காபூர் படையெடுப்பால்   கொள்ளைகள் நடந்து பல கோவில்கள் அடித்து நாசம் செய்யபட்டன.

பெரியோர்கள் பலரின் கடும் முயற்சியால் பல கோவில்கள் காப்பாற்றப்பட்டன. கேதாரம், வேங்கடம், அருணாசலம், தில்லை, மதுரை  எனப் பல கோவில்களில் கொள்ளையடித்து நாசம் செய்து, சாஸ்திர நூல்களை அழித்தும், அபகரித்தும் வந்த படையானது திருசெங்கோட்டை அடைந்தது.

கொங்கு மண்டலத்தில், அன்றைய கீழ்க்கரை பூந்துறை நாட்டின் (இன்றைய திருச்செங்கோடு) தலையாய சிவாலயம் நாககிரி என்னும் திருச்செங்கோடு. இறைவனின் திருநாமம் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர். திருசெங்கோட்டு மலை மக்களின் வாழ்வோடும் உயிரோடும் கலந்தது. அமாவாசை தோறும சாமானியர் முதல் பட்டக்காரர் வரை தயிர்முட்டி கட்டிக்கொண்டு சென்று வழிபடுவது பாரம்பரிய வழக்கம்.

அவ்வளவு பாரம்பரியம் மிக்க கோவிலில், இஸ்லாமியர் மத துவேஷத்தால், இனி மலையில் யாரும் ஏற கூடாது என்று தடை விதித்தனர். மீறி மலையேற யாரேனும் கால் வைத்தால் அவர்கள் கால் வெட்டப்படும் என்றும் அறிவித்தனர். இதனால் திருக்கொடிமாடசெங்குன்றூரின் சிவபூஜைகள் மற்றும் இறைப்பணிகள் ஸ்தம்பித்தன.

அவர்கள் கோவிலைச் சிதைத்து அழிக்க முற்படுகையில் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் செங்கோட்டுவேலவர் மீது மாறா பக்தி கொண்ட வீமணன், ஓவணன் மற்றும் ரங்கணன் ஆகியோர் கொடுமைகளைச் சகியாது, கோவிலை அழிக்க வந்த குதிரை, யானை படைகளின் மீது போர்தொடுத்தனர். அந்த போராட்டத்தில் தங்கள் இன்னுயிரையும் இழந்தனர். முன்னேறிச்சென்ற மாலிக்காபூர் படையினர் இறைவனால் தண்டிக்கப்பட்டு பார்வை இழந்தனர் என்றும், பின்னர் அவர்கள் இறைவனைச் சரணடைந்ததால் மறுவாழ்வு பெற்றனர் என்பதும் வரலாறு.

இன்றும் மலைக்காவலர் கோவிலில் ‘பங்கடு சுல்தான்’ சமாதி மலைகாவலர் சிலையின் பாதத்தருகே உள்ளது. இறைவன் திருப்பணிக்காக உயிர் துறந்த மாவீரர்களை இறைவன் ஆட்கொண்டு மீண்டும் உயிர்ப்பிப்பதாக அருளியபோது, அதை இம்மூவரும் மறுத்து, இது புண்ணியமான மரணம், ஆதலால் மீண்டும் உயிர்த்தெழுந்து கர்மவினைகளில் சிக்க விரும்பவில்லை என்று கூறியதன் பொருட்டு அவர்களுக்கு மலைகாவல் உரிமையை கொடுத்தருளினார்.

வீரர்கள் மூவரும் இன்று திருச்செங்கோட்டில் உள்ள பணிமலைக்காவலர் என்று சொல்லப்படும் கோவிலில் குடிகொண்டுள்ளனர். இந்திரனாலும் விரும்பப்பட்டது என்பது பணிமலைக்காவலர் என்ற இப்பதவியின் சிறப்பு. இந்த வரலாற்றுத் தகவல்களை திருச்செங்கோட்டு மான்மியம், திருச்செங்கோட்டு திருப்பணிமாலை போன்ற வரலாற்று ஆவணங்கள் உறுதிபடுத்துகின்றன.

வீமணன், ரங்கணன் மற்றும் ஓவணன் முதலானோர் ஆனங்கூர், தகடப்பாடி வட்டாரத்தைச் சேர்ந்த கன்னகூட்டம் மற்றும் பன்னகாடை கூட்டத்து குடியானவர்கள் என்ற தகவலும் உள்ளது. தகடப்பாடி கிராமத்தில் இன்றும் மலைக்காவலர் கோவில் தனியாக உள்ளது.

புண்ணியம் செய்த தர்மாத்மாக்கள் உயர்ந்த நோக்கத்துக்காக போராடி உயிர் துறந்த இடமான இந்த கோவிலில் ஆன்ம சக்தி நிறைந்து இருப்பதை கோவிலுக்குள் சென்றாலே உணர முடியும். மலையேறும் முன்னர் முதலில் வணங்கபடுவது  இந்த கோவில், இதன் பின்னணியும் வரலாறும் மகத்துவமும் மக்களிடையே மறக்கடிக்கபட்டதால் தற்போது பொலிவிழந்து வருகிறது. இந்தக் கோவிலில் குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதற்கும் காது குத்துவதற்கும், ஏவல், பில்லி, சூனியம் போன்ற கருப்பு சக்திகளில் இருந்து தீர்வு பெறுவதற்கும், சத்ரு நாசம், வழக்கு தீர்த்தல் போன்றவற்றிற்கும், சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். வருடா வருடம் நவராத்திரியின் போது ஒன்பது நாளும் சிறப்பு வழிபாடுகளும், நிகழ்ச்சிகளும் நடக்கும். இறுதியில் உற்சவர் சுவாமியின் திருவீதியுலாவும் நடைபெற்று விழா நிறைவு பெறும். இக்கோவிலில் அமரரான இறையன்பர்கள் மீது “பணிமலைக்காவலர் அபிஷேக மாலை” என்னும் இலக்கியமும் பாடப்பட்டுள்ளது.

அந்நிய படையெடுப்புகளின் போது பாரதத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெற்ற போராட்டங்களின் வரலாறுகளை அந்த பகுதி மக்கள் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். இது போன்ற வீர வரலாறுகளை பறைசாற்றும் வரலாற்றுச் சின்னங்களான கோவில்களை நாம் மறவாது போற்றிக் காக்க வேண்டும். விழாக்களை விமரிசையாக நடத்தி அடுத்த தலைமுறைக்கு சரித்திர செய்தியையும் வீரத்தையும் விதைத்திடல் வேண்டும். திட்டமிட்டு அழிக்கப்பட்டு வரும் நமது வரலாற்று சின்னங்களைக் காப்பது நமது கடமையாகும்.

ஆதாரம்:

திருச்செங்கோட்டு மான்மியம் தி.அ.முத்துசாமி கோனார்
திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை தி.அ.முத்துசாமி கோனார்
பணிமலைக்காவலர் பட்டயம்
கொங்கு வேளாளர் செப்பேடு பட்டயங்கள் புலவர் ராசு
பனங்காடர் நந்தவன பட்டயம்
கொங்கு வேளாளர் செப்பேடு பட்டயங்கள் புலவர் ராசு

http://vsrc.in/index.php/articles/2013-04-20-19-51-22/item/65-2013-08-28-09-48-51.html

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates