Trending

Monday, 14 October 2013

ஊருக்கு ஒருவர் - சிறுகதைஆலம்பாளையம் செங்கோட கவுண்டர், அதிகாலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்து, தன் பேத்தி கொடுத்த, நீராகாரத்தை குடித்தார். பின், தன் வீட்டில் இருந்து கிளம்பி, 4 கி.மீ., தூரம் உள்ள மெயின் ரோடு வரை நடந்து, மீண்டும் வீட்டுக்கு வந்து, குளித்து முடித்து, வீட்டின் பெரிய கூடத்தினுள் நுழைந்த போது, இரண்டு விலை உயர்ந்த பெரிய கார்கள், வீட்டு முன், வந்து நின்றன.

அதிலிருந்து இறங்கிய, சூட், ஷூ அணிந்த சில ஆசாமிகள், வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்களுடைய தோற்றத்தையும், உயரத்தையும், பளபளப்பையும் கண்டு, செங்கோட கவுண்டரின் வீட்டுப் பெண்களும், வேலைக்காரர்களும் வியப்புடன் நின்றனர்.
தகவல், செங்கோட கவுண்டருக்கு போயிற்று.
வாசலுக்கு வந்தார் கவுண்டர்.

""யாருங்க?'' என, வந்தவர்களைப் பார்த்து, தயக்கமாய் கேட்டார்.
""இங்க செங்கோட கவுண்டர்ன்னு...''
""நான் தாங்க.''
""வணக்கங்க,'' என, அவர்கள் வணங்கினர்.
""வணக்கம். நீங்க?''
""நாங்க, மும்பையிலிருந்து வந்திருக்கோம்.''
""ஏதாச்சும் நன்கொடை வேணுமுங்களா?''
""அதெல்லாம் இல்லீங்க. நாங்க, மும்பைல இருக்கற, ஆர்சென் கம்பெனியில் இருந்து வரோம்,'' என்றனர்.

""சந்தோஷமுங்க. என்னை எதுக்கு பார்க்க வந்திருக்கீங்க?''

அந்தக் கூட்டத்தில், வயதில் சற்று குறைந்தவராக காணப்பட்டவர், பதில் சொன்னார்...

""உங்ககிட்ட விவரமா பேசுறத்துக்கு முன், இவங்க யாருன்னு சொல்லிடுறேன். இவரு, எங்க கம்பெனியோட, தமிழ்நாடு கிளை மேனேஜர். ஆடிட்டர், கம்பெனி வக்கீல். இவரு, நாங்க புதுசா, இந்த ஊர்ல ஆரம்பிக்க போற, புது பேக்டரியோட பிராஜக்ட் டைரக்டர். நான், கம்பெனி பி.ஆர்.ஓ.,''
செங்கோட கவுண்டருக்கு, அந்த ஆசாமி சொல்லும் போதே, வயிற்றில், லேசாக கலக்கம் ஏற்பட்டது. சம்பந்தமே இல்லாத இவர்களுக்கு, தன்னிடத்தில் என்ன வேலை...

""ஐயா... நாங்க, ஒரு முக்கியமான விஷயமா, உங்ககிட்ட பேச வந்திருக்கோம். கொஞ்சம் உட்கார்ந்து பேசலாமா...'' என, முதலில் பேசிய ஆசாமியே கேட்டார்.
""வாங்க,'' என்று சொல்லி, கூடத்திற்கு அழைத்துச் சென்றார்.

எல்லாரும் உள்ளே சென்று உட்கார்ந்ததும், அவரும் உட்கார்ந்தார்.
அந்த ஆசாமியே ஆரம்பித்தார்...
""ஐயா... உங்களுக்கு, இந்த ஊர்ல, கிழக்கு பக்கமா, ஒரு பெரிய தோப்பு இருக்குங்களா?''
செங்கோட கவுண்டருக்கு, கலக்கம் அதிகரித்தது.
""ஆமாம்ங்க,'' என்றார், தன் மன உணர்வை வெளிக்காட்டாமல்.
""அது, எவ்வளவு ஏக்கர்ல இருக்குங்க?''
""அது இருக்குங்க, அம்பது ஏக்கருக்கு மேலே. அதப்பத்தி நீங்க எதுக்கு கேக்கறீங்க?''
""அதுல, ஒரு இருபத்தஞ்சு ஏக்கர், எங்க கம்பெனிக்கு தேவைப்படுது; குடுத்தீங்கன்னா, அதுக்குண்டான விலையை குடுத்திடுவோம்.''
""திடீர்ன்னு வந்து இப்படி கேக்கறீங்க. எங்க பரம்பரை சொத்துங்க அது.''
""ஐயா... உங்க தோப்புக்கு பக்கத்தில, கொஞ்சம் புறம்போக்கு நிலம் இருக்குல்ல?''
""ஆமா.''
""அத நாங்க தான் வாங்கறோம். ஆனா, அது, எங்களுக்கு பத்தாது. உங்க தோப்புல, ஒரு இருபத்தஞ்சு ஏக்கர், எங்களுக்கு குடுத்தீங்கன்னா, எங்க கம்பெனிய ஆரம்பிக்கறதுக்கு, ரொம்ப வசதியாயிருக்கும்.''
""அதெல்லாம் சரி தாங்க. ஆனா, அதை நான் விக்கறதா இல்லையே!''
""நீங்க அப்படி சொல்லக் கூடாது. சென்ட்ரல் கவர்மென்ட், ஸ்டேட் கவர்மென்ட் என, எல்லார்கிட்டயும் அனுமதி வாங்கிட்டோம். அதுல, ஒரு பேக்டரி கட்டப் போறோம். அதனால, உங்க ஊருக்கு, ரொம்ப முன்னேற்றம் ஏற்படும்.''
""என்ன பேக்டரிங்க?''
அந்த ஆசாமி, அந்த பேக்டரி பற்றி, சுருக்கமாக கூறினார்.
அவர்கள், அவ்வளவு தூரத்திலிருந்து, இங்கு வந்து, என்ன உற்பத்தி செய்யப் போகின்றனர் என்பது, அவருக்கு விளங்கி விட்டது.
""இதப்பாருங்க... உங்கள மாதிரி கம்பெனிகாரங்க, தொழிற்சாலை ஆரம்பிக்கறோம்ன்னு சொல்லி, ஊருக்குள்ள புகுந்தா, என்னென்ன நடக்கும்ன்னு தெரியும்ங்க. தயவுசெய்து மன்னிச்சிடுங்க. என்னோட நிலத்தை, உங்களுக்கு கொடுக்கிறதா இல்லை,'' முடிவாக சொன்னார் செங்கோட கவுண்டர்.

அவர்கள், அவரை சமாதானப்படுத்த முயன்றனர்.
ஆனாலும், அவர் உறுதியாக கூறினார்.
""நீங்க உற்பத்தி செய்யப் போற பொருள், மக்களோட வாழ்க்கைக்கு தேவையான பொருள் இல்லீங்க. வியாபாரத்துக்கு தேவையான பொருள். அதுவும், ஏற்றுமதி செய்றதுக்கு, உற்பத்தி செய்யப் போறீங்க. இம்மாதிரி கெமிக்கல் கம்பெனிக்கு, என்னோட நிலத்த குடுக்க, எனக்கு இஷ்டமில்லீங்க.''

இப்போது, வக்கீல் என்று சொல்லப்பட்டவர் பேசினார். ""நீங்க நிலத்தை கொடுக்க முடியாதுன்னு சொன்னாக் கூட, அந்த நிலத்தை, எங்களால எடுத்துக்க முடியும். ஏன்னா... கவர்மென்ட், எங்களுக்கு ஆதரவா இருக்கு.''
செங்கோட கவுண்டருக்கு, கோபம் வந்து விட்டது.
""எங்கத்தி ஆளுங்கய்யா நீங்க... எங்கிருந்தோ வந்து, எங்க ஊருக்குள்ளே புகுந்து, என் வீட்டுக்குள்ளே உட்கார்ந்து, என்னையே மிரட்டுறீங்க.. நீங்க மிரட்டினாலும், என்ன செஞ்சாலும், நிலம் உங்களுக்கு கிடைக்காது. புறப்படுங்க,'' என, தீர்மானமாய் சொன்னார் கவுண்டர்.

கறுத்துப் போன முகங்களுடன், அவர்கள் வெளியேறினர்.

இது நடந்து, பத்து நாட்களுக்கு பின், ஒரு நாள், முற்பகல் வேளையில், செங்கோட கவுண்டரின் தோப்பு முன், ஒரு அரசு ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து, நான்கு பேர் இறங்கி, தோப்புக்குள் சென்றனர்.
நல்லவேளையாக, அப்போது, கவுண்டர் தோப்பில் இருந்தார்.

இவர்களை பார்த்ததும், தோட்டக்காரன் வந்தான். அவனிடம், அதிகாரமாக கேட்டார் ஒரு ஆபீசர்.
""யோவ்... செங்கோடன் இருக்காரா?''
""ஐயா தோப்புக்குள்ள இருக்காருங்க.''
"" வரச்சொல்லு.''
தோட்டக்காரன் போய் சொன்னதும், கவுண்டர் வந்தார். இவர்களை பார்த்ததுமே, எதற்காக வந்திருக்கின்றனர் என்று, புரிந்து விட்டது. பொங்கி வந்த கோபத்தை அடக்கி, தன்னை நிதானப்படுத்திக் கொண்டார்.
""என்னங்க, என்ன வேணும்?'' என்று கேட்டார்.
இவருடைய தோற்றம், தோரணையை பார்த்து, கொஞ்சம் தணிந்தனர் ஆபீசர்கள்.
""நாங்க சென்ட்ரல் கவர்மென்ட் ஆபீசருங்க.''
""சொல்லுங்க.''
""ஆர்சென் கம்பெனிக்காரங்க, உங்க ஊருல, ஒரு பெரிய தொழிற்சாலை ஆரம்பிக்கப் போறாங்க. அதுக்கு நீங்க தான் உதவி செய்யணும்.''
""அந்த கம்பெனிக்காரங்க, அன்னிக்கே வந்து, பேசிட்டே போயிட்டாங்களே...''
""அது விஷயமா தான், நாங்களும் வந்திருக்கோம்.''
""இதப்பாருங்க... இந்த தோப்புல பாதிய, அவங்க விலைக்கு கேட்டாங்க. குடுக்க முடியாதுன்னு சொல்லிட்டேன். போயிட்டாங்க. அவ்ளோ தான், முடிஞ்சு போச்சு.''
""நீங்க கொஞ்சம் யோசனை பண்ணணும். அந்த பேக்டரி இங்க வந்தா, ஆலம்பாளையம் பஞ்சாயத்து, பத்து வருஷத்துல, டவுனா மாறிடும்; எவ்வளவோ வசதிகள் கிடைக்கும்.''
வேகமாக இடை மறித்தார் கவுண்டர்...
""வசதின்னு எதச் சொல்றீங்க... பளபளன்னு கண்ணாடி பதிச்சு, வானத்தை முட்டுறாப்பல கட்ற கட்டடங்களை சொல்றீங்களா... இல்ல ரோட்டை அகலமாக்கி, நட்ட நடுவுல, சிகப்பு, பச்சை விளக்குகளை வச்சு, வண்டிகளாப் பறக்குமே... அந்த வசதிய சொல்றீங்களா... இது மாதிரி, இன்னும், எத்தனையோ வசதிகளோட இருக்கும் டவுன் ஜனங்க, இப்ப நிம்மதியாவா இருக்காங்க? ஆனா, நாங்க சுத்தமான காத்து, நல்ல தண்ணி, நல்ல சோறுன்னு நிம்மதியா இருக்கோம். அந்த நிம்மதிய கெடுத்துடாதீங்க. உங்கள கையெடுத்து கும்பிடுறேன். எங்கள தொந்தரவு செய்யாதீங்க,'' என்று சொல்லி, அவர்களை பார்த்து, கையெடுத்து கும்பிட்டார். ஆறடிக்கு மேலான உயரம், உயரத்திற்கு ஏற்ற உடல்வாகு, வைரம் பாய்ந்த மேனி என, அவர் உருக்கத்துடன் கும்பிட்டு நின்ற தோற்றம், ஆபீசர்களை, ஒரு கணம் மவுனமாக்கியது.

சற்று பொறுத்து, ஒருவர் சொன்னார்...
""நீங்க சொல்றது நியாயம் தாங்க கவுண்டரே... ஆனா, நிலைமை என்னான்னா... அந்த ஆர்சென் கம்பெனி, ரொம்ப பெரிய கம்பெனி. ஒரு இடத்துல, தொழிற்சாலை கட்டறதுன்னு, முடிவு பண்ணிட்டாங்கன்னா எப்படியும் கட்டியே தீருவாங்க...''
செங்கோட கவுண்டர், இடைமறித்துக் கேட்டார்.
""உங்களுக்கும், அந்த கம்பெனிக்கும் என்ன சம்பந்தம்... நீங்க எதுக்கு, அவுங்க சார்பா வந்து பேசறீங்க?''
""எங்க டிபார்ட்மென்ட் தான், இந்த கம்பெனிக்கு லைசென்ஸ் குடுக்கணும். டில்லியிலிருந்து எங்க பெரிய ஆபீசர், இத முடிக்க சொல்லி, உத்தரவு போட்டிருக்காரு.''
""உங்களுக்கு உத்தரவு போட்ட அந்த பெரிய ஆபீசர், அவருக்கு உத்தரவு போடற மந்திரி, இன்னும் யார் வந்து கேட்டாலும், எடத்தக் குடுக்க முடியாதுங்க.''
""அவுங்கள எதித்து நின்னு, உங்களால ஜெயிக்க முடியாதுங்க.''
அவருக்கு, ஆவேசம் வந்து விட்டது.
""பாக்கலாம்யா... இந்த செங்கோடன் ஜெயிக்கிறானா இல்ல, அவங்க ஜெயிக்கறாங்களான்னு பாக்கலாம்னேன்...'' என்று, உறுமினார்.

நால்வரும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, இனிமேல், இவரிடம் பேசி பயனில்லை என்பது போல், பேசாமல் திரும்பி நடந்தனர்.
மறுநாளே, விஷயம், ஊருக்குள் தெரிந்து விட்டது. ஊர் மக்கள், அவர் வீட்டு முன், கூடி விட்டனர்.
கவுண்டர் வெளியே வந்தார்.
அவரைக் கண்டதும், அவர்கள் உணர்ச்சி வசமானார்கள்.
""ஐயா... உங்க நிலத்தையே, அநியாயமாக புடுங்கப் பாக்கறாங்கன்னா, இத சும்மா விடக் கூடாதுங்க.''
""நம்ம ஊர்க்காரங்க எல்லாரும் போய், கலெக்டர் ஆபீஸ் முன், போராட்டம் நடத்தணுங்க.''
""சென்ட்ரல் கவர்மென்ட் சம்பந்தப்பட்ட, எல்லா ஆபீஸ் முன்னாடியும் போய், உண்ணாவிரதம் இருக்கணுங்க.''
""நம்ம ஊர் வழியாப் போற, ரயில நிறுத்தணும்.''
ஆளாளுக்கு ஒன்று சொல்ல, கையை உயர்த்தி, அவர்களை அமைதிப்படுத்தினார்.
""எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க. சட்டப்படி, என் சொத்தை எப்படி காப்பாத்திக்கணுமோ, அப்படி நான் காப்பாத்திக்குவேன். என்னால முடியாதப்ப உங்களுக்கு சொல்றேன்.''
கூட்டத்திலிருந்த ஒரு பெரியவர், எல்லாரையும் விலக்கி கொண்டு, முன்னால் வந்தார்.
""செங்கோட கவுண்டரே... உங்க பரம்பரையே, ஊருக்கு உபகாரம் செய்ற பரம்பரை. நீங்க இந்த ஊருக்கு செஞ்சது கொஞ்ச நஞ்சமில்லை. உங்களுக்கு ஒரு பிரச்னைன்னா, நாங்க பாத்துகிட்டு, சும்மா இருக்க முடியுமுங்களா?'' என்றார் உருக்கமாக.
""எங்கயோ வடக்கேயிருந்து வரவங்க, உங்க எடத்தை புடிக்க பாக்கறாங்கன்னா, அந்த அநியாயத்த தடுத்து நிறுத்த வேணாங்களா?''
""இடத்தை குடுக்கிறத பத்தி, எனக்கொண்ணும் தயக்கமில்லை. யாருக்கு கொடுக்குறோம், எதுக்கு கொடுக்குறோம்ன்னு பார்க்கணும். அவனுக சொல்ற, அந்த தொழிற்சாலை வந்தா, நம்ம ஊரே நாசமாய் போய்டும். நம்ம வாணியாறு, சாக்கடையா மாறிடும். விளைச்சலில் பாதி வீணாப் போயிடும். இன்னும், எத்தனையோ இது மாதிரி நடக்கும். அதனால்தான், நிலத்தை தர முடியாதுன்னு சொல்லிட்டேன்.''
இந்த விபரத்தை கேட்டு, எல்லாரும் திகைத்து நின்றனர். இது, செங்கோட கவுண்டரின் சொத்துக்கு வந்த ஆபத்து மட்டுமல்ல; ஊருக்கே வந்த ஆபத்து என, அறிந்ததும், அவர்கள் கோபம், மேலும் தீவிரமானது.
அதை உணர்ந்த, கவுண்டர் சொன்னார்...
""நீங்க யாரும், இதுபத்தி கவலைப் பட வேணாம். என்னோட சொத்து போனாலும், ஊருக்கு கெடுதல் வரதுக்கு, நான் விட மாட்டேன். நிம்மதியாப் போங்க,'' என்றார்.
எல்லாரும் கலைந்து சென்றனர்.

இதன்பின், கவுண்டர், சில காரியங்கள் செய்தார். கிராம அதிகாரிகள் சிலரையும், தமக்கு நட்பான, ரெவின்யு அதிகாரிகள் சிலரையும் வைத்து, தன் தோப்பை முறைப்படி அளந்து, அடங்கலில் தெளிவாகப் பதிய வைத்தார். சிட்டா வரி ரிக்கார்டுகளிலிருந்த, சின்ன சின்ன தவறுகளை சரி செய்தார். தோப்பை சுற்றி பலமான வேலியும், இரும்பு கேட்டும் போட்டார். கேட்டின் மீது,
"இந்தத் தோப்பும், வேலியிடப்பட்ட நிலமும், பரம்பரையாக செங்கோட கவுண்டரின் குடும்ப சொத்து. அனுமதி இன்றி, அத்துமீறி யாரும் நுழையக் கூடாது...' என்ற, அறிவிப்பு பலகையை வைத்தார்.
இதோடு, கவுண்டர் சொல்லாமலே, ஊரில் உள்ள, திடகாத்திரமான ஆண்கள் பத்து பேர், தினசரி முறை போட்டு, தோப்பைச் சுற்றிலும், காவல் காக்கத் துவங்கினர்.

ஒரு வெள்ளிக்கிழமை. கலெக்டர் அழைப்பதாக, செங்கோட கவுண்டருக்கு தகவல் வந்தது. போனார்.
கலெக்டரின் பேச்சில், மரியாதை இருந்தாலும், மறைமுகமான மிரட்டலும் இருந்தது. அவரிடம், நேரிடையாக கேட்டார் கவுண்டர்...
""ஐயா, நீங்க இந்த மாவட்ட கலெக்டர். எங்கிட்ட நிலத்தை கேக்கறது, தனியார் கெமிக்கல் கம்பெனி. அவங்களுக்கு சப்போட்டா நீங்க எப்படி பேசறீங்கன்னு எனக்கு புரியல,'' என்றார் செங்கோட கவுண்டர்.
செங்கோட கவுண்டரை, அதிகம் படிக்காத விவசாயி என்று எண்ணி, ஆரம்பித்த கலெக்டருக்கு, தான் நினைத்தது தவறு என்று புரிந்தது. தன் நிலைமையை, அவருக்கு விளக்கினார்...
""நான் கலெக்டராக இருந்தாலும், நானும், அரசு சம்பளம் வாங்கற ஒரு ஊழியன் தான். இந்த மாவட்டத்து அமைச்சரே, அந்த கம்பெனிக்கு, உங்க இடத்தை எப்படியாவது வாங்கிக் தரணும்ன்னு கண்டிப்பா சொன்னப்புறம், நான் என்ன செய்ய முடியும் சொல்லுங்க?''
""அந்த தொழிற்சாலை வந்தா, ஊரே நாசமாயிடுங்க.''
""இல்ல கவுண்டரே... யாரோ உங்களுக்கு தப்பா சொல்லி இருக்காங்க. அந்த பேக்டரி வந்தா, உங்க ஊர்காரங்களுக்கு வேலை கிடைக்கும். இன்னும் எவ்வளவோ நன்மைங்க கிடைக்கும்.''
""ஐயா... நீங்களே இப்படி பொய் சொல்லலாமா? அந்த தொழிற்சாலை எதை உற்பத்தி செய்யப் போகுது. அதனால், சுத்தியிருக்கிற காத்துக்கு, மண்ணுக்கு, தண்ணிக்கு எவ்வளவு கெடுதல்ன்னு உங்களுக்கு தெரியாதுங்களா... வெளிநாட்டுல தடை செய்த, ஒரு கெமிக்கல் பொருளை, அந்த கம்பெனி, இங்க வந்து தயாரிக்க போகுது. இந்த கம்பெனி, இங்க வர்றதுனால, ஒரு நூறு, நூத்தம்பது பேருக்கு வேலை கிடைக்கும்; அவ்வளவு தான். ஆனா, இதனால, எங்க ஊருக்கு எவ்வளவு கெடுதல்னு, ஏன் யாருமே நினைச்சு பாக்க மாட்டேங்கறீங்க... என் தோப்பை ஒட்டி, ஓடிகிட்டு இருக்குற வாய்க்கால் தானுங்க அவுங்க குறி. கெமிக்கல் கழிவுகளை எல்லாம், அந்த வாய்க்கால்ல தான் விடப் போறாங்க. பதினாறு கிராமத்து மக்களுக்கும் குடிக்கிறதுக்கு, விவசாயத்துக்கு அந்த தண்ணி தானுங்க. அது விஷமா ஆயிடுச்சுன்னா நாங்க என்னங்க பண்றது?'' அவருடைய கேள்விக்கு, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், மவுனமாக இருந்தார் கலெக்டர்.

கவுண்டரே தொடர்ந்தார்...
""நாட்டுல வேற எங்கேயும் இடம் கிடைக்காம, தமிழ்நாட்டுல, எங்க ஆலம்பாளையத்துல, என்னோட தோப்பை குறி வெச்சுட்டாங்க. இதோட நிக்கமாட்டாங்க. மெல்ல மெல்ல ஊரையே வளைக்கப் பார்ப்பாங்க. இந்த அநியாயத்துக்கு, அமைச்சர், கலெக்டர், லோக்கல் ஆபீசருங்கன்னு எல்லாரும் துணை நிற்கின்றனர். ஐயா, எங்களை விடுங்க, இதுக்கப்புறம் வரப்போற சந்ததிகளுக்கு, எவ்வளவு கஷ்டம் வரும்.
""இந்த காத்தும், தண்ணியும், நிலமும், இயற்கை மக்களுக்கு கொடுத்தது. எல்லாருக்கும், இது பொதுவானதுங்க. நமக்கு பின், வரப்போற எத்தனையோ மக்களுக்கு சொந்தமானது. இத நாசப்படுத்தறது தப்பில்லீங்களா... இந்த இயற்கை செல்வங்களை, காப்பாத்தி, வரப்போற சந்ததிக்கிட்ட ஒப்படைக்கணும்கற பொறுப்பு, அரசுக்கு இல்லீங்களா... ஒரு அரசாங்கம் எப்படி நடக்கணும்ன்னு, ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன், ஒரு தமிழன், உலகத்துக்கு தெளிவா சொல்லிட்டு போயிருக்கானே... அதையெல்லாம், உங்கள மாதிரி படிச்சவங்க தானுங்க, அரசுக்கு எடுத்துச் சொல்லணும். அரசாங்கமே தப்பு செஞ்சா, மக்களின் கதி என்னவாகும் சொல்லுங்க?''
இடி போன்ற கேள்வி, கலெக்டரை வாயடைக்க செய்தது.
செங்கோட கவுண்டர் கேட்ட, நியாயமான இந்தக் கேள்விக்கு, பதில் சொல்வது யார்?
மெல்ல சமாளித்து, கலெக்டர் ஆரம்பித்தார்... ""நீங்க சொல்றதெல்லாம் நியாயம் தான். ஆனா, உங்க கேள்விக்கெல்லாம், என்னால பதில் சொல்ல முடியாது.''
""நீங்க பதில் சொல்ல வேணாம். முடிவா... என்னோட பதிலை சொல்லிடுறேன். என் நிலத்தை, அந்த கம்பெனிக்கு குடுக்க முடியாதுங்க. வர்ரேன்....'' என, சொல்லி விட்டு, கலெக்டரின் உத்தரவின்றியே, எழுந்து வெளியேறினார் கவுண்டர்.
ஒரு கிராமத்து ஆள், சொடுக்கிய சாட்டையால், அசந்து போனார் கலெக்டர்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை.
அந்த அமைச்சரும், ஆர்சென் கம்பெனி முதலாளியும், தலைநகரத்திலிருந்த, ஒரு நட்சத்திர ஓட்டலில், சந்தித்துக் கொண்டனர். கம்பெனி முதலாளியிடம், அமைச்சர் உறுதியாக கூறினார்.
""நம்ம இடத்துக்கே அந்த ஆள கொண்டு வந்து, பத்திரத்துல கையெழுத்து போட வச்சுடலாம். சப்-ரிஜிஸ்தார் அங்கேயே வந்து, உங்க கம்பெனி பேருக்கு, அந்த இடத்தை பதிவு செய்து கொடுத்திடுவாரு.''
அமைச்சர் எதிர்பார்த்த சூட்கேஸ், கொடுக்கப்பட்டது. பெரிய கும்பிடு போட்டு, கிளம்பினார் அந்த முதலாளி.
அமைச்சர் மொபைல் போனிலேயே, சில உத்தரவுகளை போடத் துவங்கினார்.

இது நடந்த இரண்டாவது நாள் காலை, ஆலம்பாளையத்து மக்கள் அதிசயத்து போகும்படி, ஒன்று நடந்தது.

செங்கோட கவுண்டரின் தோப்பு முன், ஏற்கனவே வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை காணாமல் போய், வேறொரு புதிய அறிவிப்பு, அதை விட பெரிய போர்டில், எழுதி வைக்கப்பட்டி ருந்தது.
"டில்லியில் உள்ள அன்னை கஸ்தூரி பாய் அனாதை இல்லத்துக்கு, செங்கோட கவுண்டர் குடும்பத்தாரால், தானமாக வழங்கப்பட்ட நிலம் இது. இதன் முழு உரிமை, அன்னை கஸ்தூரி பாய் அறக்கட் டளையை சேரும். அத்துமீறி நுழைபவர்கள், போலீசில் ஒப்படைக்கப் படுவர்' விஷயத்தை கேள்விப்பட்ட மாவட்ட கலெக்டரும், அமைச்சரும், ஆர்சென் கம்பெனி முதலாளியும் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் நட்சத்திர ஓட்டலில் சந்திக்கும் முன்னே, தம் வக்கீலுடன் டில்லி சென்ற கவுண்டர், தன் நிலத்தை, அந்த அறக்கட்டளை பேருக்கு, தானமாக வழங்கும் ஏற்பாடுகளை, "பக்கா'வாக செய்து விட்டார் என்பது, அவர்களுக்கு தெரியவில்லை.
இந்தியாவிலேயே, புகழ் பெற்ற அந்தக் குடும்பத்தாரால் நடத்தப்படும், அனாதை இல்லத்துக்கு, தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் செங்கோட கவுண்டர், தன் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை, எழுதி வைத்த செய்தி, அனைத்து பத்திரிகைகளிலும், வெளியாயிற்று. செங்கோட கவுண்டருக்கு பாராட்டுகள் குவிந்தன.

பிறகென்ன... ஆர்சென் கம்பெனி, ஆலம்பாளையத்தை விட்டு, வேறு இடம் தேடத் துவங்கியது.
ஊருக்கு ஒரு செங்கோட கவுண்டர் இருப்பரா!

***
எழுதியவர்:
ராகவன் தம்பி
இயற்பெயர் : ஏ.பார்த்திபன்.
கல்வித் தகுதி: எஸ்.எஸ்.எல்.சி.,
வயது: 54
திரைப்பட துறையில், உதவி இயக்குனராகவும், ஸ்கிரிப்ட் டைரக்டராகவும் இருந்துள்ளார். இவரது சிறுகதைகள், பல்வேறு தமிழ் வார, மாத இதழ்களில் வெளியாகியுள்ளன. சென்னை வானொலியில், இவர் எழுதிய இரண்டு நாடகங்கள் ஒலிபரப் பாகியுள்ளன.
***

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=17532&ncat=2

1 comment:

  1. என்ன ஒரு அருமையான திட்டம் கண்டிப்பாக ஒவ்வொரு கொங்கும் இதை படிக்க வேண்டும், தலைப்பில் சொல்வது போல்.

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates