Trending

Thursday, 24 October 2013

கொங்கு வெள்ளாளர் பெருமை2000 ஆண்டுகட்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் ‘வேள்’ என்றும் ‘வேளிர்’ என்றும் சிறப்பிக்கப்பட்டவர்கள் வேளாளர்கள். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்பது உலக வழக்கு. உயிரனைய உழவுத் தொழிலை வேளாளர்கள் செய்வதால் ‘வேளாண்மை’ எனப்பட்டது. ‘வேளாண்மை’ என்ற சொல்லுக்கு உழவுத் தொழிலால் உற்பத்தி செய்யும் உணவுப் பொருள்களை தாமும் உண்டு பிறர்க்கும் அளிக்கும் உபகாரத்தைச் செய்பவர்கள்.


வேளாளர்கள் ‘தொல்குடி’, தொன்முதிர்குடி’ என்று குறிக்கப்பட்டனர். தமிழக மூவேந்தர்கட்கு மகட்கொடை கொடுக்க உரிமை படைத்தவர்கள் வேளாளர்கள். அரசர்கட்கு முடிசூட்டும் உரிமை படைத்தவர்கள்.

கொங்கு வேளாளர்கள் நாடு, மக்கள், கால்நடை ஆகியவற்றைக் காப்பவர்கள் என்ற பொருளில் காமிண்டர் என்ப்பட்டப் பெயர் பெற்றனர். காமிண்டர் என்ற பெயரே காலப்போக்கில் ‘கவுண்டர்’ என்று மாற்றம் பெற்றது. கொங்கு வேளாளர்கள் 96 கீர்த்திகள் படைத்தவர் என்பர். கொங்கு வேளாளர் குலங்களில் பல பெயர்கள் தமிழக மூவேந்தர்களையும், சங்க காலச் சிற்றரசர்களையும் நினைவுப்படுத்தும் பெயர்களாக உள்ளது சிறப்புக்குரியதாகும்.

சேரன், வில்லி, வில்லம்பர், அந்துவன், பனையன், சோழன், நேரியன், பாண்டியன், வேம்பன், மீனவன் ஆகிய குலப்பெயர்கள் தமிழக மூவேந்தரோடு தொடர்பு உடையவை. பதுமன், பண்ணன், மலையர், காரி என்ற குலப் பெயர்கள் சங்க காலக் குறுநில மன்னர்கட்குரிய பெயர்களாகும். தொடர்பு எதுவும் இல்லாமல் குலப் பெயர்கள் அமையாது. எனவே, கொங்கு வேளாளர் வரலாற்றுச் சிறப்பு ஆராய்வதற்கு உரியதாகும்.

மூவேந்தர்களின் ஆட்சி நிலைக்கக் கொங்கு வேளாளர்கள் பேருதவி புரிந்துள்ளனர். காலிங்கராயன், பல்லவராயன், தொண்டைமான், கச்சிராயன், மூவேந்தவேளான், வாணவராயர், காடவராயன் என்ற உயர் பட்டப் பெயர்கள் கொங்கு வேளாளர் தலைவர்கட்கு அரசர்களால் அளிக்கப்பட்டுள்ளன. கொங்கு வேளாளர் சமூகத் தலைவர்கள் மீது பாடப்பட்ட இலக்கியங்கள் பல. கொங்கு வேளாளர் பெரும்புகழ் கூறும் கல்வெட்டுகள், செப்பேடுகள், பட்டயங்கள் பலப்பல. மேற்கண்ட அனைத்தும் குடத்துள் இட்ட விளக்காகவே உள்ளன. இவற்றை உலகறியச் செய்ய வேண்டும்.

தூய பழக்க வழக்கமும், உயர் பண்பாடும், ஒழுக்கமும், கட்டுப்பாடும், நேர்மையும், வாய்மை தவறாமையும் உள்ள சமுதாயம் கொங்கு வேளாளர் சமுதாயம். நாடுகள் பிரித்து எல்லைகள் வகுத்து தலசுய ஆட்சி முறையை அன்றே நடைமுறைப்படுத்திய சமுதாயம் கொங்குச் சமுதாயம். அதன் சிறப்புக் கருதி கொங்கு நாட்டை வென்று அடிமைப்படுத்திய பிற அரசர்கள் கூட அந்த ‘நாடு’ ‘நாட்டார்’ அமைப்பை மாற்றவில்லை. தங்களுக்கென்று ‘மேழிக்கொடி’ படைத்து, தாங்கள் கூடும் அவைக்கு ‘சித்திரமேழிச் சபை’ என்று பெயரிட்டு ஆவணப்படுத்திய பெருமக்கள் கொங்கு வேளாளர் பெருமக்கள்.

பதினெட்டு வகையான குடிபடைகளை ஆதரித்து சமய விழா, சமுதாய விழா, குடும்ப விழாக்களில் அனைவரையும் பங்கு கொள்ளச் செய்து தாராளமாக அவர்கட்குத் தானியம் வழங்கி ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி’ பொதுவுடைமைச் சமுதாய வாழ்வை நடைமுறைப் படுத்தியது கொங்குச் சமுதாயம். பொதுவாக அவர்களைப் ‘பணி மக்கள்’ என்று மக்கள் உரிமையோடு அழைத்தது கொங்குச் சமுதாயம்.


கொங்கு நாட்டின் மண்ணின் மைந்தர்கள் கொங்கு வேளாளர்கள், குலக்காணியூர், குலதெய்வம், குலகுரு, காணிப்புலவர்கள் பெற்று வாழ்ந்த ஒரே சமுதாயம் தமிழகத்தில் கொங்குச் சமுதாயம் ஒன்றேயாகும்.‘ஊருக்குக் ‘கொத்துக்காரர்’, நாட்டுக்குப் ‘பட்டக்காரர்’, சடங்கு கட்கு ‘அருமைக்காரர்’ ஆகியோரை நியமித்து நீதிநெறிக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்த சமுதாயம் கொங்குச் சமுதாயம்.


சமய நல்லிணக்கத்தையும், சமூக ஒருமைப்பாட்டையும் உயிர் மூச்சாகக் கொண்டவர்கள் கொங்கு வேளாளர்கள். அவர்கள் வழி படும் குப்பியண்ணன், சாம்புவன் தாழ்த்தப்பட்டவர்கள்.

காடு கொன்று, நாடாக்கி, குளம் தொட்டு, வளம் பெருக்கி, கோயில் எடுத்துப் பல இடங்களில் குடியேறிப் பல்கிப் பரந்து பெருகி வாழும் சமுதாயம் கொங்குச் சமுதாயம். தாங்கள் முன்னோர்களைப் போற்றி வழிபடும் சமுதாயம் கொங்குச் சமுதாயம். கொங்குச் சமுதாயம் பற்றி தமிழகத்தில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் வெளிநாட்டிலும் உள்ள ஆய்வாளர்கள் பலர் ஆய்ந்து பற்பல கட்டுரைகளும், நூல்களும் எழுதியுள்ளனர். அவர்களில் சிலர் கீழ்க்கண்ட கருத்துக்களைக் கூறியுள்ளனர்.


கொங்கு வேளாளர்கள் நல்ல தேகபலம் உடையவர்கள்; மிகக் கடினமாக உழைக்கக் கூடியவர்கள்’. ‘கொங்கு நாட்டார் இனம் மற்ற நாட்டு மக்களை விட வேறு பட்டதாகவே இருக்கும். சொல் ஒன்று வெட்டு ஒன்று என்றே இருப்பார்கள்’. ‘தங்கள் குடும்பத்திற்கோ, குலத்திற்கோ வரும் இழிவைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். ‘உயர்ந்த கட்டுப்பாட்டுடன் இயங்கிய சமூகம்’ ஒரு புலவர் வேளாளர்களைப் புகழ்ந்து பாடிய புலவர்களைத் தொகுத்துக் கூறுகிறார்.அவர்களுள் கம்பரே முதலிடம் பெறுவதையும் காணுகிறோம்.அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
கம்பர்செந் தமிழும் இரட்டையர் மொழிந்த


கட்டளைக் கலித்துறைக் கவியும்

கனிந்ததெள் ளமிர்தம் எனப்புக ழேந்தி

களித்திடும் கலம்பகத் தமிழும்
பண்புசீர் ஒட்டக் கூத்தனாம் புலவன்
பகிர்ந்திடும் பைந்துளா யிரமும்
பசுந்தமிழ் தேறு வாணியர் தாசன்
பரிவுடன் புகன்றசெங் கவியும்
செம்பியன் கவியும் வழுதிமார் கவியும்
சேரமான் செப்பிய கவியும்
தேவர்தன் சிறையை மீட்டவேள் குமரன்
தெளிவுற இசைத்தவெண் பாவும்
சம்பந்தர் கவியும் அவ்வைதன் தமிழும்
சங்கத்தார் செப்பிய தமிழும்
தவத்தினால் மிகவும் புகழ்கொண்ட வேளாளர்
தகைமையைச் சாற்றுதற்கு எளிதோ


No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates