Trending

Thursday, 7 August 2014

திருசெங்கோட்டு மலை-அறுபதாம் படி

"எங்கையன் அவரு பங்காளிவளோட காடு கறார் பண்ற நேரத்திக்கு  நம்மு சுள்ளிக்காட்டான் அவுங்க தாத்தன், வந்து 'செத்துப்போன உங்கையன் எங்கட்ட நானூறு ரூவா வாங்குனாறு; அதயும் பங்காளிவ சேந்து எனக்கு கட்டிப்புடுங்க' னு சொன்னாரு. பாண்டு பத்தரம் எதுவுமில்ல, அவுங்க ஐயனும் சாவர காலத்திலியும் எதுவுஞ்சொல்லுல. எங்கையன் ஒரே வார்த்த சொன்னாரு "சேரீனா! எங்கையன் வாங்குனதாவே இருக்குட்டும். அந்த பாற மேல ஏறி கெழக்க திருசெங்கோட்டு மலைய பாத்து அறவதாம் படி முருகனறிய எங்கையன் வாங்குனாறு னு சொல்லிட்டு பணத்த வாங்கிக்கணா" னு சொல்லிட்டாரு. எங்க பங்காளிவலும் எங்கையன் பேச்சுக்கு மறுபேச்சு பேசாம ஒத்துக்கிட்டாங்க. அந்த ஆளும் பாற மேல ஏறி சொல்லி பணத்த வாங்கிட்டுப் போய் ஒரே வாரத்துல பாம்பு கடிச்சு முடிஞ்சிட்டாறு, அவிய பன்னையமும் ஒரே தலக்கட்டுல சுருங்கிப் போச்சு"


இதுபோல ஏராளமான கர்ண பரம்பரை செய்திகள் திருசெங்கோட்டு சுற்று வட்டார கிராமங்கள் ஒவ்வொன்றிலும் உண்டு. சத்தியப்படி என்றும் அறவதாம்படி என்றும் சொல்லப்படும் சந்நிதி, திருசெங்கோட்டு மலை  படிவழியே ஏறுகையில் வரும் பல சந்நித்களில் ஒன்றாகும். அறுபது படிகளும் அதன்பின்னர் சிறிய சந்நிதியில் புடைப்பு சிற்பமாக வேலவன் நின்ற கோலத்தில் தனியாக இருப்பார்.

திருசெங்கோட்டு மலை ஏறுகையில் அறுவதாம்படிக்கு விளக்கு வைக்காமல் செல்லக் கூடாது. அது பெரும் பாவம். பணிமலைக்காவலர் பட்டயம் என்ற புராதன சரித்திர ஆவணமொன்றில் அறவதாம்படிக்கு விளக்கு வைக்காமல் செல்லுவதை கங்கைக் கரையில் காராம்பசுவை கொன்ற தோஷத்துக்கு இணையாக சொல்லியுள்ளனர் நம் முன்னோர்.(பொதுவாகவே எந்த ஒரு மலைக் கோவிலையும் படி வழியே ஏறித்தான் செல்ல வேண்டும். ரோடு போட்டு வண்டிகளில் செல்லக் கூடாது. மலைக்கோயில் வழிபாட்டின் பலனே படிவழியே ஏறுவதில்தான் உள்ளது. எவ்வளவோ செல்வங்களும், உணவுக்கு கூலி வேலையும் கிடைத்த காலத்திலும் நம் முன்னோர் யாரும் யாரும் ரோடு போட்டு தேரில் செல்லவில்லை. இறைவனைக் கூட, வைகாசி நோம்பிக்கு படிவழியே இறக்கித்தான் கொண்டு செல்வர். சாமியே மலையேறி இறங்கையில் ஆசாமிக்கு என்ன??)

திருசெங்கோட்டு வட்டாரத்தின் சுப்ரீம் கோர்ட் என்றே சொல்லும் அளவு அக்காலத்தில் பிரசித்தி பெற்றது. வம்பு வழக்குகள் விசாரணையில் இருதரப்பும் தீர்வு எட்டப்படாவிட்டால் இருவரையுமோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவரையோ அறுவதாம்படியில் சத்தியம் செய்ய சொன்னால் கதறிவிடுவார்கள்; உண்மையை சொல்லிவிடுவார்கள். அறுவதாம்படியில் நின்று பொய் சொல்ல முடியாது; அப்படி பொய் சொல்லிவிட்டால் தண்டனை உறுதியாகவும் கடுமையாகவும் கிடைக்கும் என்பது சத்தியமான உண்மையாகும். அக்காலத்தில் கோர்ட் வழக்குகளில் கூட அறுவதாம்படி சத்தியத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்றால் அதன் மகத்துவத்தை எண்ணிப் பார்க்கலாம். ஹைகோர்ட் சென்றும் தீராத வழக்குகள் இங்கே தீர்ந்துள்ளதாம்.

இரு குடும்பங்கள் விரோதித்துக் கொண்டால் மண்ணை வாரி இறைத்தோ (அ) சாபமிட்டோ (அ) கோயிலில் விழுந்து கும்பிட்டுவிட்டாலோ கொடுக்கல் வாங்கல் நல்லது கெட்டது அன்னந்தண்ணி பொழங்காமல் இருப்பது கொங்கதேசத்தில் வழக்கம். இதை தொலவு போடுதல் என்று சொல்வார்கள். தொலவு முறிய எத்தனை தலைமுறையானாலும் சம்மந்தப்பட்ட அத்தனை தலைமுறைகாரர்களும் குடும்பத்தோடு வந்து கலந்துகொள்ள வேண்டும். எந்த கோயிலில் போட்டார்களோ அந்த கோயிலில் முறிவு போட வேண்டும். அறுவதாம் படி முருகனிடமும் பலர் தொலவு முறிதல் செய்வார்கள்.

மோளக்கவுண்டம்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்த காட்டு வேட்டுவர்கள் அறுவதாம்படி முருகனைபோற்றி வணங்கி வந்ததாக செய்தி உண்டு. இவர்கள் திருசெங்கோட்டுமலைக்கு சில கொடைகளும் கொடுத்துள்ளதை திருப்பணிமாலை சொல்கிறது.

கிராமத்தில் இருந்து வருகின்ற மக்கள் இன்றளவும் விவசாய பணிகளை தொடங்கும் முன்னர் மலையில் இருக்கும் பெரிய நந்திக்கும் அறுபதாம் படி முருகனுக்கும் அபிஷேக பூஜை செய்து தங்கள் பணிகளை ஆரம்பிக்கும் செயல் இன்றளவும் பழக்கத்தில் உள்ளது.

திருசெங்கோட்டு மலையில், பரம்பரையாக பூசை செய்பவர்களது உரிமைகளை ஒதுக்கி விட்டு இப்போது கண்டராக்ட் முறையில் பூஜை வேலைகள் ஏலம் விடப்பட்டுள்ளதால் பூஜைகளில் பக்தியில்லை; பணப்பிரதானமாக தெய்வத்தின் மகிமையை கெடுக்கிறார்கள். 

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates