Trending

Wednesday, 3 September 2014

ஜல்லிக்கட்டு தடை அரசியல்

ஜல்லிக்கட்டின் மீதான சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தீர்ப்பு தனிப்பட்டதொரு சம்பவமாக காணமுடியாது. பாரத தேசியத்தின் மீதும் பண்பாட்டின் மீதுமான நீண்டகால யுத்தத்தின் ஒரு அங்கம்தான். இதன் மூலத்தை ஆராய துவங்கினால் சுமாராக ராபர்ட் கிளைவ் முதற்கொண்டு நேரு முதல் இன்றைய சோனியா காந்தியின் பிங்க் புரட்சி வரை நீளும். சதிகாரர்களுக்கு


·         நம் நாட்டை வெளிநாடுகளின் நிரந்தர சந்தைகளாக மாற்ற,

·         நம் பாரம்பரியத்தின் தடயங்களை அழித்து நம்மை அடையாளமற்றவர்களாக மாற்ற,

·         மதமாற்றத்தை துரிதப்படுத்த,

·         உலகமயமாக்கலை எளிமைப்படுத்த,

·         நம் தேசத்தை பாலைவனமாக்க
           
என நம் நாட்டின் தேசிய பசுவினங்கள் கொல்லப்பட வேண்டிய காரணங்கள் ஏராளம் உண்டு. எனவே உலகமயமாக்கல், மதமாற்றம், சித்தாந்த அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் இணைந்து ஒவ்வொரு கட்டமாக செயல்படுத்தி வருகிறார்கள். இந்த சதியில் தமிழ்நாட்டின் மத்திய மந்திரியில் இருந்து, பெருத்த குடும்பம் வரை ரகசிய உடன்படிக்கையோடு செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. ஆட்டுவிப்போர் ஆட்டுவித்தால் ஆட வேண்டியோர் ஆடித்தான் தீர வேண்டும்.அடிமைப்பட்டு கிறிஸ்தவ காலனியாதிக்கத்துக்கு வேலை செய்தவர்களின் உணர்வுகளைக்கூட தட்டியெழுப்பி சிப்பாய் புரட்சி செய்ய வைத்த பசுக்களின் மீதான பற்றும பந்தமும் சிறிது சிறிதாக மறக்கடிக்கப்பட்டு இன்று பசுவென்றால் பால் மெஷின் என்னும் எண்ணத்தை உருவாக்கும் நிலைக்கு தள்ளியுள்ளார்கள். அதோடு பசு என்றால் விஷ பாலை தவிர வேறு தராத சீமை மாடுகளைத்தான் நம் கையில் திணிக்கிறார்கள். இதன்மூலம் நம் தேசம் நிரந்தர நோயாளிகளாக பண்ணாட்டு மருந்து கம்பெனிகளுக்கும், விவசாய பூமிகள் உயிரற்றுப் போய் வெளிநாட்டு உரத்திற்கும் நிரந்தர வாடிக்கையாளர் என்றாகும். பீப், லெதர் போன்ற நேரடி வணிக நோக்கும், சேர்ந்து நம் தேசத்தை பாலைவனமாக்கும் சதிக்கு முழு ஒத்துழைப்பு நல்கி வருகின்றன. நாட்டுப்பசுக்கள் இன்றி நிலத்தின் நுண்ணுயிர்ச்சூழலை உயிர்ப்பிக்க இயலாது. இவற்றை பற்றி டாக்டர். சகாதேவதாஸா விரிவாக தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.பசுக்களின் மீதான பற்றினை முறிக்காமல், பாரம்பரியத்தின் வேர்களை அறுக்காமல், நம் வரலாற்ரை திரிக்க, மாற்ற முடியாது. அவ்வாறு செய்யாவிடில் மதமாற்றம்-மேற்குலகிற்கு ஏதுவான மனோநிலையை நம் மக்களிடம் உருவாக்க முடியாது. இப்படியான காரணங்களால் மதமாற்ற அமைப்புக்கள் கைகோர்க்கின்றன.

ஆநிரை கவர்தல் என்பது தங்கள் நாட்டின் பசுக்களை பிற நாட்டவர் கவர்ந்து செல்வதை குறிப்பதாகும். ஒரு தேசத்தின் பசுக்களை காப்பது மன்னனின் தலையாய கடமையாக இருந்தது. இவ்வாறு பசுக்கள் கவர்ந்து செல்லப்படுவது பெருத்த அவமானத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. கவர்ந்த பசுக்களை மீட்டு வருதல் ஆநிரை மீட்டல் என்று சொல்லப்படும். ஆநிரைகளை மீட்டு வரும் வீரனுக்கும், உயிர் தியாகம் செய்பவர்களுக்கும், விருதுகள், நிலங்கள் தந்து நடுகற்கள், மரியாதை செய்யப்படும். இதுபோன்ற நடுகற்கள், குத்துக்கற்கள், இவ்வரலாற்றை சொல்லும் கல்வெட்டுக்கள் தமிழகமெங்கும் பரவிக்கிடக்கின்றன. இது கொங்க (சேர), சோழ, பாண்டிய தேசங்கள் முழுவதும் பரவி நின்றமை கலாசார ஒற்றுமையை காட்டுவதாகும். ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டலை மகாபாரதத்தில் இருந்தே காணலாம். விராட நாட்டில் அஞ்ஞாத வாசத்தின் போது அங்கு படையெடுத்து வந்த கௌரவர்கள் ஆநிரைகளை கவர்வதையும், பிரகன்னளையாக வரும் அர்ஜுனன் போரிட்டு ஆனிரைகளை மீட்பதையும் அறிகிறோம். இதுபோல பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலும் இம்மரபை பார்க்கலாம். வெட்சித் திணை கரந்தைத்திணை போன்றவை முறையே கவர்தளையும் மீட்டளையும் குறிக்கும் திணைகளாம்.

ஊர் கொலை ஆகோள் பூசன் மாற்றே (தொல் 20:3)
விழுத்தொடை மறவர் வில்லிடத்
தொலைந்தோர் எழுத்துடை நடுகல் (ஐங்: 352)
பேயம் முதிர் நடுகல் பெயர் பயம்
படரத்தோன்று குயில் எழுத்து (அகம் :297)
மரம்கோள் உமண் மகன் பெயரும் பருதிப்
புன்தலை சிதைத்த வன்தலை நடுகல்
கண்ணி வாடிய மன்னர் மருங்குல்
கூர் உளி குயின்ற கோடுமாய் எழுத்து (அகம் 343)

                                          போன்றவை பசுக்களை மீட்டவர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகற்கள் மற்றும் கல்வெட்டுக்களில் காணப்படும் சொற்றடர்களாகும். ஆனால் இன்று பெரும்பான்மையான மாநில் அரசுகளுக்கும், மக்களுக்கும் இந்த உணர்வு இல்லாமல் போக வைத்தது இந்த பண்ணாட்டு மாபியாவின் முதல் வெற்றி. நம் கண் முன்னே லாரிகளிலும், ரயிலிலும் பசுக்கள் எந்த வித சட்ட விதிகளையும் பின்பற்றாமல் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றன. (இதுகுறித்து வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் டாக்குமெண்டரி வெளியிட்டுள்ளது). இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆர்டிகல் 48 முதல் பல்வேறு மத்திய மாநில அரசு சட்டங்கள், கோர்ட் தீர்ப்புக்கள் என்று எவ்வளவோ தடைகள் இருந்தும் கோடிக்கணக்கான பசுக்கள் கொன்று குவிக்கப்படுகின்றன. உலகின் பெரிய பீப் ஏற்றுமதியாளர் என்ற அவமானத்தை ஒவ்வொரு இந்தியரும் சுமக்கிறோம். இவை அனைத்துமே சட்டத்திற்கு உட்பட்டுத்தான் நடக்கிறது என்றும், கொல்லப்பட்டவை அனைத்தும் கால்நடை மருத்துவர் சர்டிபிகேட் பெற்ற பலனற்ற வயதான பசுக்கள் மற்றும் எருமைகள் என்றே நம்புவோமாக.


இந்த வரிசையில் மரபு விளையாட்டான ஜல்லிக்கட்டும் தற்போது சேர்ந்துள்ளது. ஏறுதழுவல், மஞ்சு விரட்டு,  ஜல்லிக்கட்டு என்று பல பேர்களால் அழைக்கப்படும் இம்மரபு, மகாபாரத காலம் தொட்டே நம் நாட்டில் நிலவி வந்துள்ளது. ஸ்ரீ கிருஷ்ணர் இளவரசி சத்யாவை மணக்க ஏழு காளைகளை அடக்குகிறார் என்ற குறிப்பு உள்ளது. ஜல்லிக்கட்டு வெறும் விளையாட்டு மட்டுமின்றி ஆன்மீக நோக்கிலும் அறிஞர்கள் கருத்துரைக்கிரார்கள். பிரதோஷ வழிபாடு காளைகளின் கொம்பினூடே சிவனை பார்ப்பதும், கொம்பின் வடிவில் இறைவனை வலம் வருவதும் தோஷம் போக்குவதாகும். அதுபோலவே ஜல்லிக்கட்டின்போது திமில் பற்றி கொம்பின் இடையே பார்த்து காலை அடக்குவதும் மரண கண்டங்களையும் நிவர்த்தி செய்யும் என்றும் ஆன்மீக பெரியோர்கள் சொல்கிறார்கள்.தென்னிந்தியாவில் சேர(கொங்க), சோழ, பாண்டிய, தொண்டை தேசங்கள் என இம்மரபு சீராக வளர்ந்து வந்துள்ளது. கலித்தொகை உட்பட பல்வேறு இலக்கிய குறிப்புக்களும் சாட்சியாக உள்ளன. மிருகவதை என்ற பேரில் தற்போது ஜல்லிக்கட்டை தடை செய்கிறார்கள். ‘மதச்சார்பற்ற நாட்டில் ஒப்பீட்டளவில் பார்த்தால் பதிலில்லா கேள்விகள் ஆயிரம் எழும். ஜல்லிக்கட்டை நிறுத்தினால் மக்களுக்கு காளைகளை வளர்க்க வேண்டிய அவசியமின்றி போகும். தங்கள் பாரம்பரியத்துடனான தொடர்பின்றி, அடையாளம் தொலைத்த அனாதைகளாக மாறுவர். அரசின் திட்டங்கள் மற்றும் நாட்டுப்பசுக்களின் முக்கியத்துவம், அதன் பொருளாதார பலன்களை எளிமையாக அனுபவிக்கும் சூழல் விவசாயிகளுக்கு ஏற்படும் வரை அவர்களை வெறுமனே காளைகளை வளர்க்கச்சொல்ல இயலாது. அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக, தொடர் சதிகளையும் தாண்டி தங்கள் சக்திக்கு மீறியே விவசாயிகள் நம் நாட்டு பசுக்களை காத்து வருகின்றனர்.

எனவே ஜல்லிக்கட்டோடு, நாட்டுப்பசுக்கடத்தல், நாட்டுப்பசுமாமிசம், நாட்டுப்பசுக்கொலை, சீமைமாடுகள் என அனைத்தையும் தடை செய்து, நாட்டுப்பசுக்களின் பலன்களை விவசாயிகள் எளிமையாக அடையும் வண்ணம் சந்தைகளை உருவாக்கியும் எளிமைப்படுத்தியும் ஊக்குவிக்க வேண்டும். சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் இருந்தவாறு பசுக்களின் எண்ணிக்கை பெருகவும், அவற்றின் மேய்ச்சல் நிலங்கள் மீட்கப்படவும், கோயிலில் உள்ள கோசாலைகள் நெறிப்படுத்தப்படவும் வேண்டும். நாட்டுப்பசுக்களை காப்பதை பண்பாட்டு ரீதியில் மட்டும் அணுகாமல் அவை இயற்கைக்கும், பொருளாதாரத்துக்கும், ஆரோக்கியத்துக்கும் தரும் நன்மைகளின் அடிப்படையில் அணுகவேண்டும். நாட்டுப்பசுவை தேசிய விலங்காக அறிவிக்கவும், நாட்டுப்பசுக்களின் அபிவிருத்திக்காக தனி இலாகா, ஆராய்ச்சி மையங்கள் ஏற்ப்படுத்துதல் போன்ற முன்னெடுப்புக்களை அரசாங்கம் செய்வது, மக்களோடு சேர்த்து நாட்டுக்கும், பொருளாதாரத்துக்கும், இயற்கைக்கும் நன்மை பயக்கும்.

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates