Trending

Tuesday, 14 October 2014

அகல்விளக்கு - சிறுகதை

குச்சிகிழங்கு காட்டில் வேலை. சோறு குடித்துவிட்டு மத்தியான வேளையில் வேப்பமரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் மொட்டையகவுண்டர். பொழுது கிளம்ப ஆரம்பித்து வெயில் காந்தலில் வேலை செய்த களைப்பு. குளிர்ச்சியாக நீத்தண்ணி இறங்கிய கிறக்கத்தில் வேலைக்கு வந்திருந்தவர்கள் ஆங்காங்கே உருமாலைத் துண்டை சிம்மாடு கூட்டியும், கையை தலைக்குக் கொடுத்தும் சித்தங்கூரம் கண்ணயர்ந்திருந்தார்கள். 


அவர் பண்ணைகாரிச்சி சாக்கு தைப்பதற்கு கோனூசி போதாமையால் "அட்டாலியில் செருவிருக்கரதையும் எடுத்தாறேன்" என்று சொல்லி வீட்டுக்கு போய்விட்டார். வேலை நடந்தால் நாலு நடையாவது வீட்டுக்கு போய்வர வேண்டியதாக இருக்கும். ஒரு ஆள் சலுப்பைப் பார்த்தால் நாலாள் வேலை கெடும்.

வயிற்றைப் போலவே கவுண்டர் மனசும் குளிர்ந்திருந்தது. தன் எட்டேக்கராவோடு சேர்த்து, கந்தாயத்துக்கு முப்பது ஏக்கரா பிடித்து இந்தமுறை குச்சி ஊனியிருந்தார். கைக்காசு, பண்ணைக்காரிச்சியோட ரட்டவட சங்கிலி எல்லாமும் வச்சு முட்டுவுளி போட்டிருந்தார். தர்மபுரி மாவட்டத்தில் அவ்வளவு காடு குச்சியூனியது வெகு சிலரே. நிறைய செலவுகள் வருவதால் நெருக்கடி என்று யாரிடமும் கைநீட்டும் நிலை வரக்கூடாது என்று இவ்வளவு சிரமம். குலதெய்வம் ராசிபுரம் அத்தனூறாயா அருள். இந்த வருஷம் நல்ல மழை, விளைச்சல். குச்சியூனியபோதே தர்மபுரி சொர்ணம் செகோ மில்லுக்காரர் மூட்டை பத்துரூவாய் என்று கேட்டிருந்தார். "செரிங் மாப்ள, அப்படித்தான் பண்ணிகிட்டா போவுது" என்று சொல்லியிருந்தார். குறைச்சலாக கணக்குப் பார்த்தாலும் முப்பத்தெட்டு ஏக்கராவுக்கு 7,600 மூட்டை கிழங்கு வரும். முட்டுவுளி, கூலி செலவு போக எப்படியும் ரூ.60,000 மிச்சம்பண்ணலாம். கடன், நல்லதுகேட்டது என்று எல்லாம் போக கையில் ஆயிரம், ஐநூறு மிச்சமும் நிக்கும்.

அடர்ந்து செடிகளால் நிறைந்திருந்த குச்சிக்காடு, செடிகள் பிடுங்கப்பட்டு "பா" என வெட்டார வெளியாக கிடந்தது. காட்டுக்கு மறுபக்கம் இருந்த கருப்பனார் கோயில் தெளிவாக தெரிந்தது. செடிகள் பிடுங்கியதால் செம்மண் ஆங்காங்கே சிறு சிறு குவியலாக இருந்தது. இளஞ்சூட்டு மண்ணும், கிழங்கும் சேர்ந்து காடெங்கும் மணந்து கிடந்தது. 

காட்டுத் தடத்தில் ஜல் ஜல் என்று சத்தம்வர புரோக்கர் கோவிந்தன் மாட்டுவண்டியில் வருவதைப் பார்த்தார். கவுண்டர் பார்வியில் பட்டதும் வண்டியை விட்டிறங்கிக் கொண்டான். எண்ண ஓட்டம் தடைபட, "வாப்பா, என்ன வண்டிலாம் பலமா இருக்குது?" என்றார்.

"போன மாசம் ரிலீசான படத்துல, எம்ஜியார் இந்தமாதிரி வண்டிதான வச்சிருந்தார். ஒரு கல்யாணம் செட்டாச்சு, நறுக்குன்னு காசு வந்துச்சு ஒடனே வண்டிய கட்டிட்டேனுங்க, இந்தபூட்டுக்கு கிழங்கு நல்லா வந்திரிச்சாட்டம் இருக்குது"

"ஆமா கோயிந்தா, பட்ட பாட்டுக்கு பரவால்ல" என்றார் மலர்ச்சியோடு, "கால சூழ்நில, இப்பிடி ஏக்கரா ஏக்கராவா குச்சியூனுரம். முன்னல்லாம் செகோ மில்லேது குச்சிஏது, கம்பு சோளம் னு நல்லதா விதைச்சு நல்லாருந்தோம். இப்போ இந்த கருமத்தையேல்லாம் பாக்கறதா இருக்குது"

"அதுஞ்சரிதானுங்க.. என்ன பண்றதுங்க, இப்ப சர்காருல இருக்கறவங்க தான மில்லா கட்டி கட்டி ஓட்டராங்க"

"அதுசெரி, பொழுதோட ஊட்டுக்கு வந்திருக்கலாமில்ல. காட்டுக்கே வர்ரளவு அப்பிடியன்ன அவசர சோளி?"

"ஒன்னுமில்லீங்க கவுண்டரே, கெழங்குக்கு கெராக்கி மீறிப்போச்சுங்க. நம்பளுக்கு தெரிஞ்ச மில்லுக்காரர் உங்கு காட்டு கெழங்கயும் கேட்டுப்பாக்கச் சொன்னார். மூட்டைக்கு நூறு தந்தர்றது, வண்டி கூலி, செமக்கூலி, சாக்குக்காசு, எம்பட கமிசன் எல்லாமே மில்லுக்காரர் பாத்துக்கவேண்டீது, மூட்டக்கணக்க எண்ணி வண்டியேத்துனதும் பணத்தை பைசல் பண்ணிரதுனு பேச்சு; என்ன சொல்றீங்க" என்று இன்ப அதிர்ச்சியை தூக்கிப்போட்டார்.

தென்னமரத்தடியே படுத்திருந்த ஆளுக்காரன் ரங்கன் விசுக்கென்று எழுந்து உக்கார்ந்தான். முகமெல்லாம் மலர்ச்சி. மூட்டை நூறுனா கணக்கு என்னாச்சி. கந்தாயக் காட்டுக்காரர் "வெளியூர் குடிபோறம்; காட்டை நீங்களே வச்சிக்கிங்க கவுண்டரே, இருக்கறத குடுங்க பாக்கிய மெதுவா கூட குடுங்க"னு சொல்லிய போது  கவுண்டர் தனது இயலாமையை கூறி மறுத்திருந்தது நினைவுக்கு வந்தது. சரிதான். அடுத்த போவத்துக்கு இந்த முப்பது ஏக்கராவும் நம்ப பண்ணைகாரர்தான் ஓட்டப்போறாரு என்று மகிழ்ந்தான். ரங்கன் வெகுகாலமாக மொட்டைய கவுண்டர் பண்ணையத்தில் வேலையில் இருப்பவன். வேண்டியதை பார்த்துப் பார்த்துச் செய்யும் கவுண்டர் மீது ரங்கனுக்கு தனிப்பாசம். ஆடு மேய்க்க வரும் பசங்களிடம்கூட தன் பண்ணைக்காரரை விட்டுக் கொடுக்காமல் பேசுவான். தன் பையனைப் போலவே ரங்கனையும் படிமானமாக வளர்தியிருந்தார்.

"சாயந்தரமா பெரீகவுண்டர்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுகிட்டு, எத்தனை மூட்டை, என்னனு எனக்கு சொல்லியுடுங்க கவுண்டரே. கருக்கல்லையே வண்டி கொண்டார சொல்லிர்றன்" என்றுவிட்டு சென்றான்.

அன்றைய பொழுது வேலைகளை முடித்து வீட்டுக்கு மாலை கிளம்பினார்கள். அறுச்சு வைத்திருந்த பில்லுச்செமைகளை ஆளுக்கொன்றாய் தூக்கிக் கொண்டு காட்டில் அன்னாங்கால் போட்டிருந்த ஆடு மாடுகளையும் ஓட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள். கவுண்டர் வந்ததும் பால் பீச்ச குண்டா எடுத்துவிட்டார். ராத்திரி வரையே கவுண்டர் கூப்பிட்டு கோயிந்தனிடம் தகவல் சொல்லிவிட அனுப்புவார் என்று எதிர்பார்த்திருந்த ரங்கன் ஏமாந்து தூங்கிப்போனான். மய்க்காநாள் காட்டிற்கே வந்திருந்தான் கோயிந்தன்.

"என்னங்க, ஏதும் தகவலே காணம்?"

"சொர்ணம் மில்லுக்காரங்கள வண்டி கொண்டாரச் சொல்லிட்டேன் கோயிந்தா. இந்தபூட்டுக்கு வேண்டாம்; மறுக்கா குச்சியூனும்போது சொல்றன்"

"ஏனுங்க, ரேட்டு முன்னபின்ன பாத்து பேசிக்கலாமுங்க. இந்த மாதர அதிஷ்டம் வரும்களா? வர்ற ரட்சுமிய வேண்டாங்காட்டி என்னங்?"

"கோயிந்தா, அந்த மில்லுக்காரங்க கிட்ட மொதல்லையே வாய் வார்த்த சொல்லியாச்சு. பத்துக்கு நூறா வருதுன்னு சொல்லு மாத்தி பேசப்படாது. இந்தப் பணமாட்ட நெறைய, எங்க முப்பாட்டன் காலம்புடிச்சு மொரத்துல அள்ளி சம்பாரிச்சு பாத்தவங்கதான. இப்ப கொஞ்சம் கொறையா போயிருக்கலாம். ஆனா, எந்த காலத்திலும் சொல்லு மாத்தி பேசுனதில்ல. "சொத்தழிஞ்சாலும் சொல்லழியக்கூடாது"னு எங்கையன் அடிக்கடி சொல்லுவாரு. "ஒரு நாக்கு ஒரு சொல்லு" னு இருக்கணும். இன்னிக்கு உங்கட்ட வாங்கற பணம் ஊட்டுக்குள்ற வர்றதுக்கு மிந்தி சாமி ஊட்டவுட்டு வெளியபோயிரும். நாளைக்கு ராசிபுரம் போய் எங்காயா மூஞ்சிய எப்பிடி நிமிந்து பாக்கறது?. ரச்சாதிவதியாயி கோட்டைய கட்டாட்டிக் கெடக்குது போ. எங்கையனுக்கு சாமி கும்படரப்ப அண்ணாந்து பாத்து கும்படனும்"கவுண்டரின் பதில் கோயிந்தனை கொஞ்சம் உலுக்கியது. பண்ணைக்காரிச்சி ஆமோதிப்பது போல புன்னகைத்தார். கவுண்டருக்கு அவர் முன்னோர்கள் அகல்விளக்காக ஒளியூட்டுகிறார்கள். மாட்டு வண்டிகள் சொர்ணம் மில்லை நோக்கி போய்க் கொண்டிருந்தன. அதற்கு பிறகு அந்த வட்டாரத்தில் கொடுக்கல், வாங்கல், நல்லது கெட்டது நாயம் பேசும்போது மொட்டைகவுண்டர் வார்த்தைக்கு தனி மரியாதைதான்.

(இந்த மொட்டைகவுண்டர்தான், வெள்ளைக்காரனை எதிர்த்து போராடிய ராசிபுரம் விழியன் கூட்டத்து ஆறுமுகக் கவுண்டர் மகன் வரதராஜு. தர்மபுரியில் வாழும் வரதராஜு கவுண்டர் வாழ்வில் நடந்த சம்பவமே இந்த கதை. நாற்பது வருடங்கள் முன்னர்.. முப்பது ஏக்கர குத்தகை மற்றும் தனது நிலம் எட்டு ஏக்கரிலும் குச்சி கிழங்கு பயிர் செய்திருந்தார்.. அன்றைய நிலைக்கு கிழங்கு மூட்டை பத்து ரூபாய்க்கு தருவதாக மில்காரர்களிடம் வெறும் வாய்ச் சொல்லாக மட்டுமே சொல்லியிருந்தார். அந்நாளைய கால சூழல் காரணமாக அறுவடை சமயத்தில் கிழங்கு, மூட்டை நூறை தாண்டி விட்டது.. கவுண்டரின் நிலத்தில் விளைந்தது ஏழாயிரம் மூட்டை கிழங்கு. நூற்று பத்து ரூபாய் கணக்கில் வியாபாரிகள் வந்து கேட்டபோது மறுத்துவிட்டு, சொன்ன சொல் மாறாமல் மூட்டை பத்து ரூபாய் என்ற விலைக்கே விற்றார்! அன்று அவர் நூற்றிபத்துக்கு விற்றிருந்தால் அன்றே அவர் குத்தகைக்கு ஓட்டிய முப்பது ஏக்கரை சொந்தமாக வாங்கியிருக்க முடியும். இன்று வரதராஜு கவுண்டர் மகன் தன் சொந்த உழைப்பில் ஐம்பது ஏக்கர பூமி மட்டுமின்றி கோடிக்கணக்கான ருபாய் சொத்துக்களை சம்பாதிக்கவும் குலதெய்வகோயில் வேலைகள் எடுத்துச் செய்யவும் அருளியுள்ளது.)

- செங்கோட கவுண்டர்

மேலும் படிக்க,

ஊருக்கு ஒருவர் - சிறுகதை
அங்கப்பன் அருக்காணி கதைப்பாடல்
கோவைப்பயணம் - சிறுகதை 

perumal murukan perumal murugan பெருமாள் முருகன் மாதொருபாகன் கங்கணம் 

2 comments:

  1. atthanoor அத்தனூர் என்பது ஆதனூர் என்பதின் திரிபா ???

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates