Trending

Monday, 20 October 2014

மல்லசமுத்திரம் தொண்டமா கவுண்டர்

மல்லசமுத்திரம் சமஸ்தானம் கொங்கதேசம் கீழ்க்கரை பூந்துறை நாட்டின் (இன்றைய திருசெங்கோட்டு பகுதி) உபநாடாகும். இப்பகுதியை ஆண்டு வந்தவர் சிற்றரசர்களான பட்டக்காரர்களில் புகழ் பெற்றவர் தொண்டைமா கவுண்டர். துணிச்சல், போராற்றல் மதிநுட்பம், தண்மையான குணம் நிறைந்தவர். பல புலவர்களை ஆதரித்து தர்மம் வளர்த்தவர். தொண்டைமான் என்பது இவர் பெற்ற விருதுப் பெயர்.
அகளங்க சோழன் என்பதும் இவர்கள் முன்னோர்களுக்கு வழங்கப்பட்ட விருதுப்பெயராகும். நாமக்கல் கோட்டையை மீட்க சோழனுக்காக போராடி வென்றமையால் சோழ அரசன் விஜயராகவ பட்டம் கொடுத்து சிறப்பித்தார். நவாபு ஆட்சியில் சிற்றரசாக இருந்தபோது பகதூர் பட்டம் மற்றும் திடும்படித்து செல்லவும் உத்தரவு பெற்றார்.

தொண்டமா கவுண்டர் சிற்பம் 
தென்னாட்டில் சிலகாலம் இஸ்லாமிய ஆட்சி நிலவிய காலத்தில், பேரரசுகளிடையே போர் நடந்து வந்தது. போர்க்காலத்தில் பேரரசுகளுக்கு வரிகள் செலுத்தவேண்டியதில்லை என்பதால் தொண்டைமாக்கவுண்டர் மக்களிடம் வரியை வசூலித்து ஏழு பெரும் ஏரிகளையும் அதற்குண்டான நீர்வழிகளையும் வாய்க்கால்களையும் வெட்டுகிறார். அனைத்தையும் ஏழே ஆண்டுகளில் முடிக்கிறார்!. மல்லை நாட்டை கிழக்கும் மேற்க்குமாக சுற்றி பாய்ந்த திருமணிமுத்தாறு மற்றும் பொன்னியாற்றின் நீரை கொண்டு தனது பூமியை வளம் கொழிக்கும் நாடாக்கினார். கொலங்கொண்டை ஏரி, மல்லசமுத்திரம் சின்ன ஏரி, ஊமையாம்பட்டி பெரிய ஏரி, செட்டி ஏரி, கோட்டப்பாளையம் ஏரி, மங்களம் ஏரி என்பவையாம்.


போர் முடிந்து நவாபு வரி கேட்க, போர்க்காலத்தில் வரி கொடுப்பதில்லை என்றும், அப்படி வசூல் செய்த வரியை செலவு செய்த விஷயங்கள் அனைத்தையும் சொல்கிறார். வரியை கட்டு என்ற நிர்பந்தத்திற்கு மறுக்கிறார். மன்னிப்பு கேட்டு பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக கட்டு என்ற சமரசத்திற்கும் உடன்படவில்லை. யானையை கொண்டு தலையை இடர செய்ய தண்டனை விதிக்கபடுகிறது. அவர் வெட்டிய ஏரிக்கரையிலேயே கொடூரமாக உயிரை விடுகிறார். கற்புநெறி பிறழாத அவரின் தர்மபத்தினி சின்னாத்தா யார் தடுத்தும் கேளாமல் திருமணிமுத்தாற்றின் கரையில் தொண்டைமாகவுண்டரோடு சிதையில் சேர்ந்து தீப்பாய்ந்து உயிர்விடுகிறார்.

அவர்கள் உயிர்விட்ட இடத்தில் அவர்களுக்கு எழுப்பப்பட்ட கோயில் தீப்பாஞ்சம்மன் கோயில் என்று வழிபடப்படுகிறது. செல்வதற்கு தடம் கூட இல்லாத, இக்கோயிலின் அவலக் கோலம்தான் இந்த படங்களில் நாம் பார்ப்பது. சுதை வேலைப்பாடுகளோடு அழகு மாறாமல் இருக்கின்றது. உள்ளே பாம்பு சட்டைகளும், சுற்றி குப்பைகூலமும் நிறைந்து கிடக்கின்றது. பதினெட்டாம் நூற்றாண்டில் வெள்ளையன் ஒருவன், தென்னிந்த கிராமங்கள் பற்றிய தனது புத்தகத்தில் திருசெங்கோட்டை பற்றி குறிப்பிடுகையில், தான் நிற்கும் மலை தவிர சுற்றியிருக்கும் பூமியனைதும் இருக்கும் பசுமை குறித்து பூரித்து குறிப்பிடுகிறார். தன் உயிரையும், பொருளையும் கொடுத்து, இவ்வளவு வளமைக்கும் காரணமான தொண்டைமாக்கவுண்டர் நினைவிடம் இருக்கும் நிலை, திருசெங்கோட்டு மக்களின் நன்றியுணர்சிக்கு நல்ல எடுத்துக்காட்டு.

ஏரிகள் மட்டுமின்றி மல்லசமுத்திரம் ஸ்ரீ சோழீசர் கோயில், ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோயில், மாமுண்டி சிதம்பரேஸ்வரர் கோயில், மங்களம் அழகுநாச்சியம்மன் கோயில் போன்ற பல கோயில்களுக்கு திருப்பணி செய்துள்ளார். அவர் சிலை மல்லசமுத்திரம் சோழீஸ்வரர் கோயிலில் உள்ளது.

இயற்கையை கெடுக்காத நீர் சேமிப்பு/பாதுகாப்பு என்றால் ஏரி, குளங்கள் தான். நிலத்தடி நீர் செறிவூட்டல், மழைநீர் சேமிப்பு அனைத்தும் சாத்தியம். தொண்டைமாக்கவுண்டர் போன்றோர் உயிர் கொடுத்து வெட்டிய நீர்நிலைகளை காப்பாற்றாது, முள்ளும் மண்ணும் மூடவிட்டு, நிலத்திருடர்கள் பிளாட் போட்டு விற்பதை வேடிக்கை பார்த்துவிட்டு தண்ணீர் பஞ்சம் என்று சொல்வது யார் செய்த தவறு? மன்னராட்சி காலங்களில் சிறப்பாக இருந்த நீர் நிர்வாகம் மீட்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஏரி குளங்கள் சீரமைந்தால் தண்ணீர் பஞ்சம் என்பது மாயை என்பது புலனாகும். மழையாகிய மாரி கடைசியாக வந்து நிற்குமிடம் ஏரி, குளங்கள்தான். அவைதான் உண்மையான மாரியம்மன் கோயில்கள்.

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates