Trending

Saturday, 20 December 2014

ராமாயணமும் - கொங்க வெள்ளாள கவுண்டர்களும்


வெள்ளாளர்கள் அடிப்படையில் கங்கா குலத்தவர்கள். சூரிய குலத்தில் இருந்து கிளைத்தவர்கள். இந்த சூரிய குலத்தில் உதித்தவர் தான் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி

ஸ்ரீ ராமருக்கு முடி சூட்டும்போது கிரீடம் எடுத்துத் தரும் உரிமையை வெள்ளாளர்கள் பெற்றிருந்தனர் என்பதை கம்பர் தன் ராமாயணத்தில் உணர்த்துகிறார்.

“அரியணை அனுமன் தாங்க அங்கதான் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க, இருவர் கவரி வீச
குறிசெரி குழலி வெண்ணெய்நல்லூர் சடையன் தன் மரபுலோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி “கொங்கர்களை கோசர் (கோசல தேச பின்னணி) என்றும் கங்கர் (கங்கா குலத்தவர்)  என்றும் இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் செப்பேடு பட்டயங்கள் கல்வெட்டுகள் பல ""ஸ்ரீராமஜெயம்" என்ற வரியுடன் துவங்குகிறது.

ராமாயண காலத்தில் கொங்கதேசத்தில் பல கோயில்களும் சுனைகளும் தோன்றின. ராசிபுரம் ஸ்ரீஅழியாஇலங்கையம்மன் கோயில் (ஆயா கோயில்), பொள்ளாச்சி ஸ்ரீ மாசாணியம்மன் கோயில் போன்றவை இவ்வாறானதே. ஜடாயு முக்தி கொங்கம்-ஆந்திர எல்லையில் நிகழ்ந்தது.

ராமாயணத்தை தமிழுக்கு முதன்முதலில் மொழிபெயர்த்தவர் கம்பர். பாடுவித்தவர்  வெண்ணெய்நல்லூர் சடையப்ப கவுண்டர். ராமாயணம் தமிழுக்கு வந்த பின்னரே வெள்ளாள ராசாக்களாகிய சோழர்கள் அதை தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுக்க பரப்பினர். இன்றும் ராமாயணம் கம்போடியா, தாய்லாந்து, பர்மா, மலேசியா, பிலிப்பின்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இன்றும் ராமாயணம்  உள்ளது.

மோரூர் கன்ன கூட்ட நல்லதம்பிக் காங்கேயன் பத்தர்பாடி எம்பெருமான் கவிராயரைக் கொண்டு “தக்கை ராமாயணம்” என்னும் இசைக் காவியத்தை படைத்தார். மிகவும் புகழ் பெற்ற ராமாயண காவியம் இது. கம்ப ராமாயணத்தை பல மடங்கு சுருக்கியும் அதன் சுவையை பல மடங்கு பெருக்கியும் கொடுத்தது. தக்கை என்னும் இசைக் கருவியை கொண்டு பாடப்படுவதாகும். சங்ககிரி வரதராஜா பெருமாள் கோயிலில் அரங்கேற்றப் பட்டது.

ராமாயணம் நம் முன்னோர்களால் போற்றிப் பரப்பப்பட்ட காவியமாகும். ஒவ்வொரு ஊரிலும் அக்காலத்தில் இருந்த திண்ணைப் பள்ளியில் குழந்தைகளுக்கு வாழ்க்கை ஒழுக்கங்கள் ராமாயணம் மூலம் பால பாடமாக போதிக்கப்பட்டது.

• பொள்ளாச்சி ஆனைமலை கோபாலசாமி மலை மேல் தாடகநாச்சியம்மன் கோயில் என்ற சிறு கோயில் உண்டு. மலைஜாதி மக்கள் வம்ச பரம்பரையாக வழிபாட்டு வருகிறார்கள். அது ராமரால் கொல்லப்பட்ட தாடகை சாபவிமோச்சனமடைந்து தெய்வமாக அருளும் கோயில் என்று கூறுகிறார்கள்!

• கூனவேலாம்பட்டி ஆயா கோயில் (அழியாஇலங்கையம்மன்) செம்பூத்த கூட்ட கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் குலதெய்வமாக வழிபடுகிறார்கள். ராசிபுரம் விழியன் கூட்டத்தார் உட்பட பிற கூட்டங்களும் குடிகளும் இஷ்ட தெய்வமாக வழிபடுகிறார்கள். அந்த அம்மனின் கதை, ராவணனின் வேண்டுகோளுக்கிணங்க அன்னை பார்வதி இலங்கையை காவல் காத்து வந்த போது அனுமன் தூது வந்து உள்ளே நுழைகையில் அங்கிருந்து படிவ ரூபத்தில் இருந்த அம்மனை பிடுங்கி பாரதத்தை நோக்கி வீச, அம்மன் கூனவேலம்பட்டியில் விழுந்து இங்கே நிலைகொண்டதாக சொல்வர்.


கொங்கதேச மன்னர்கள் ராமரைப் போலவே ராமராஜ்ய ஆட்சி செய்யவே முற்பட்டதை வரலாறுகள் மூலம் அறிய முடிகிறது. ஒழுக்கம் தவறி அதர்மம் அக்கிரமம் செய்த பட்டக்காரர்கள் இருப்பினும் அவர்கள் சேர மன்னர்களால் மட்டுமின்றி குடிகளாலேயே தண்டிக்கப்பட்டும், பதவி நீக்கம் செய்யப்பட்டு முறையான நல்ல தலைவர்கள்  ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகி நல்லாட்சியைக் கொடுத்துள்ளார்கள. அதாவது, சொன்னசொல் தவறாமை, மூத்தோரை மதித்தல், பெற்றோர் சொல் தட்டாமை, குலகுருவை மதித்துப் போற்றல், குடிமக்களின் நலனுக்காக எதையும் தியாகம் செய்ய துணிதல், மனுதர்மம் தவறாமை, சகோதரர்கள் ஒற்றுமை, சொத்து நாடு என எதையும் விட தர்மமே தலை என்று எண்ணுகிற மாண்பு, கணவன் மனைவி உறவின் புனிதம், அன்பே மையமான மனித உறவுகள், அதிகாரத்தின் மூலம் மக்களை கட்டுப் படுத்தாமல் அன்பு தர்மம் மூலம் மக்களே நல்வழியில் நடக்க வைக்கும் ஆட்சி முறை போன்றவை ராமராஜ்யத்துக்கும் கொங்கதேசத்து மன்னர்களின் ராஜ்யத்துக்கும் இருந்த ஒற்றுமைகளாகும்.

ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அவதாரம் முடித்து வைகுண்டம் திரும்பும்போது ஸ்ரீராமரை பிரிய முடியாத அவரது குடிமக்களும் அன்பர்களும் ஸ்ரீராமரோடு சேர்ந்து நதியில் இறங்கி வைகுண்டமடைவார்கள். அதே போல பல சம்பவங்கள் கொங்கதேச வரலாற்றில் நடந்துள்ளன. உதாரணமாக தலைய நாடு கன்னிவாடி கன்ன கூட்ட முத்துசாமி கவுண்டர் மறைந்தபோது அவரது குடிபடைகளாக வாழ்ந்த ஆண்டி, நாவிதர், பறையர் போன்றோர் எங்கள் கவுண்டரே மறைந்துவிட்டார் நாங்கள் மட்டும் ஏன் உயிரோடு இருக்கோணும் என்று அவர் சவத்தோடு சேர்ந்து தீயில் இறங்கி உயிர் விட்டனர். அந்த கோயில் இன்றளவும் ஏழுபடைக்கலக்காரி கோயில் என்று விளங்கி வருகிறது. இன்றும் நம் காணியாச்சி கோயில்கள் செல்லும்போது ஏதோ புராதன ராமராஜ்யத்துக்குள் நம் முன்னோர்களின் அரசாட்சிக்குள் செல்லும் உணர்வு ஏற்படுவது இயல்பு.

கொங்கதேசத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு காணியிலும் பெருமாள் கோயில் உண்டு. இரண்டாம் நூற்றாண்டு பெருமாள் கோயில் கூட உண்டு. ரங்கநாதர் மற்றும் நரசிம்மர் தான் அதிகம் வழிபடப்பட்டிருந்தனர். ராமர் பல கோயில்களில் தனி சன்னதியில் உள்ளார். அக்காலத்திலேயே ராமருக்கு தனியே கோயில்களும் பட்டணங்களில் உண்டு. உதாரணம்:கோதண்ட ராமசாமி கோயில் ஈரோடு.

மிகத் தொன்மையான ஆஞ்சநேயர் சிலைகள் கொங்கதேச பெருமாள் கோயில் பலவற்றில் உண்டு. சிருங்கேரி சாமியார்கள் துலுக்கர் படையெடுப்பில் இருந்து கோயில்களைக் காக்க புடைப்பு சிற்பங்களாக ஆஞ்சநேயர் சிலைகளை அதர்வண வேதப் பிரயோகம் செய்து பிரதிஷ்டை செய்திருந்தனர். சிறந்த உதாரணங்கள்: ஈரோடு ஆஞ்சநேயர், தாராபுரம் காடு அனுமந்தராயர், திருச்செங்கோடு ஆஞ்சநேயர் (கேட்பாரற்று கிடக்கிறது) போன்றவை.கம்பர் காலம் பனிரெண்டாம் நூற்றாண்டு என்று எடுத்துக் கொண்டாலும் கம்ப ராமயணம் எழுதப்பட்டதற்கு முன் ராமர் இங்கு இல்லையா என்ற குதர்க்க கேள்விகள் அடிக்கடி வரும். 

கம்பர் ராமாயணம் எழுதும் முன்னரே, ராமர் பற்றிய செய்திகள் தமிழகம் முழுதுமே விரவி இருந்தது. 1800 ஆண்டு பழமையான ராமர் சிலை தமிழகத்திலே பனப்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்டது. கம்பர் காலத்துக்கு சுமார் ஆயிரம் வருஷம் முன். கம்பர் காலத்துக்கு ஆயிரம் ஆண்டுகள் முன்னரே ராமாயணம் அறிமுகமாகியே இருந்தது. கம்பர் இயற்றிய ராமாயணத்தின் பின்தான் ராமர் வழிபாடு அதிகமாக பரவியது.

சில இலக்கிய ஆதாரங்கள்,

கம்பராமாயணத்திற்கு 6-7 நூற்றாண்டுகள் முற்பட்ட பௌத்த காவியமான மணிமேகலையில் ராமாயணச் செய்திகள் சான்றுகளாகவே அளிக்கப் பட்டிருக்கின்றன.

நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்
(உலக அறவி புக்க காதை, 10-20)

காயசண்டிகை கூறினாள் - “நெடியோனாகிய திருமால் இராமனாக மண்ணில் அவதாரம் புரிந்து, அவன் அடங்காத பெரிய கடலை அடைத்த போது, குரங்குகள் பெயர்த்துக் கொண்டு வந்து எறிந்த பெரிய பெரிய மலைகள் எல்லாம் கடலின் வயிற்றில் சென்று மறைந்தது போல, இந்த அடங்காப் பசியை நிரப்ப இடும் மலை மலையான உணவு எல்லாம் என் வயிற்றின் ஆழத்தில் சென்று மறைந்து விடுகிறது”.

இந்த வரிகளில் பல செய்திகள் அடங்கியுள்ளன - ராமன் திருமாலின் அவதாரம். அவனது ஆணையில் வானரர்கள் கடலை அடைத்து அணை கட்டியது. மேலும், இந்த வரலாறு உவமையாகக் கூறப் படும் அளவுக்கு பிரசித்தி பெற்றிருந்தது.

இதே காப்பியத்தில் பிறிதோரிடத்தில், வாத விவாதத்தில், “ராமன் வென்றால் என்றால் மாண்பில்லாத ராவணன் தோற்றான் என்று தானே அர்த்தம்?” என்று அடிப்படையான தர்க்கமாகவே இராமகாதைச் சான்று வைக்கப்படுகிறது, அதுவும் ஒரு புத்தமதம் சார்ந்த புலவரால் என்றால் அது பண்டைத் தமிழகத்தில் எவ்வளவு அறியப் பட்ட விஷயமாக இருக்க வேண்டும்!

"மீட்சி என்பது "இராமன் வென்றான்" என
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்
உள்ள நெறி என்பது "நாராசத் திரிவில்
கொள்ளத் தகுவது காந்தம்" எனக் கூறல்"
(சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை, 50-60)

மேலும்,
சிலப்பதிகாரத்தில் மதுரைக்காண்டத்தில், ஆய்ச்சியர் குரவைப் பாடலில் திருமால் அவதாரங்களில் இராமரும் துதிக்கப்படுகின்றார்.

மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் தான் போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே!

ராமன் வெளியேறியபோது அயோத்தியா நகரம் எப்படி தள்ளாடியதோ, அதே மாதிரி புகாரும் (கோவலனின் நகரம்) கோவலன் வெளியேறியபோது வாடியது.

பெருமகன் ஏவ லல்ல தியாங்கணும்
அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப் 
(மதுரைக் காண்டம் - புறஞ்சேரியிறுத்த காதை - வரிகள் 63- 65)

அகநானூறு:

வென்வேல் கவுரியர் தொன்முது கோடி,
முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த,
பல்வீழ் ஆலம் போல,
ஒலி அவிந்தின்றால் இவ் அழுங்கல் ஊரே. (அகநானூறு -70)

பொருள்: மதுரைத் தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார் இயற்றிய அகநானூறு தொகுப்பில் இருக்கும் 70 வது பாடல் கருத்து: பாண்டியன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தொன்முதுகோடி என்னும் தனுஷ்கோடியில் கடலோரத்தில் இருந்த ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டு இராமன் மறை ஓதிக்கொண்டிருந்தான். இந்த நிகழ்ச்சி இலங்கை வெற்றிக்குப் பின்னர் நிகழ்ந்தது. அவனது மறையொலியைக் கேட்டு அம்மரத்தில் இருந்த பறவைகளும், அவனது படைகளும் சிறிதும் ஒலி எழுப்பாமல் கேட்டுக்கொண்டிருந்தன.

புறநானூறு:

”விரைந்து செல்லும் தேர் உள்ள இராமனுடன் சேர்ந்து காட்டுக்கு வந்த சீதையை வலிமை வாய்ந்த கைகளையுடைய அரக்கனாகிய இராவணன் கவர்ந்து சென்றான். அந்நாளில் சீதையால் கழற்றி எறியப்பட்ட ஆபரணங்கள் நிலத்தில் வீழ்ந்து ஒளி வீசுகின்றன. இவற்றைச் சிவந்த முகங்களை உடைய குரங்குகள் கண்டன,” என்னும் பொருள் படும்படி பின்வருமாறு கூறுகிறது :

“கடுந்தேர் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலம்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெரும்கிளை”

கலித்தொகை:
சிவ பெருமான் வாழும் இமய மலையைப் பெயர்த்தெடுக்க முயன்ற ராவணன் கதை நாம் அறிவோம். அது சங்ககால நூலான கலித்தொகையில், “இமயத்தை வில்லாக வளைத்த பரமசிவன் உமையவளுடன் வீற்றிருந்தான்.அப்போது, பத்துத் தலைகளை உடைய அரக்கர் தலைவன் இராவணன் காப்புப் பொலியும் தன் வலிமையான கைகளை மலையின் கீழே புகுத்தி அதை எடுக்க முயன்றான்; எடுக்க முடியவில்லை. அதனால் மலையின் கீழ் சிக்கி வருந்தினான்”, என்னும் விதமாகப் பின்வருமாறு கூறுகிறது:

“இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக
ஐயிருதலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுத்து அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன்போல”

இன்னும் கம்பருக்கு முன் வந்த பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் பலவற்றிலும் ராமாயண செய்திகள் பரவலாக காணப்படுகின்றன.

கம்பனுக்கு முன் ராமாயணம் என்ற ஆராய்ச்சியை அரங்கேற்றிய திரு சங்கர நாராயணன் அவர்கள் உரை..https://www.youtube.com/watch?v=De_yLGoiKLY

சரி ராமாயணத்தின் அவசியம் என்ன?

நம் கண்களுக்கு கொண்டுவரப்படாத சில செய்திகள். ஆந்திராவில் என்.டி.ராமாராவ் வந்தபின் பிரபலமான ராமபக்தியின் காரணமாக குற்ற விகிதம் அதிகம் இருந்த பல கிராமங்களில் குற்ற எண்ணிக்கை குறைந்தது. இது ஆந்திர ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளின் கருத்து. இன்றளவும், சிறைச்சாலைகளில் ராமாயணம் கைதிகளுக்கு படிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.

ஆன்மிகம் என்பதைத் தாண்டி மனித குணங்கள் என்பதில் ஸ்ரீராமர் உதாரண புருஷனாக விளங்குகிறார். நமது முன்னோர்கள தனித்தன்மையான குணங்கள் பல ஸ்ரீராமரின் குணத்தோடு பொருந்தியிருந்தது; இக்குணங்கள் தமிழகத்தின் பிற சாதிகளிடையே ஒப்பீட்டளவில் குறைவாகத்தான் இருந்தது. இதனால்தான் கவுண்டர்கள் இன்றளவும் பண்பு குணங்களில் பிற சமூகங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளனர்..௧.பணத்தை, பதவியை, வசதியை விட அன்பையும், உறவுகளையும், தர்மத்தையும், வாக்கு தவராமையையும் பெரிதென நினைத்தல்

௨.பெரியோரை மதித்தல். பெற்றோர் சொல் மீறாமை. ஆயுதமின்றி அன்பாலும், அடக்கத்தாலுமே பலரின் மனதை வென்றுவிடுதல்

௩.அன்பால் அனைவரையும் அரவணைத்து செல்லுதல் (நம் குடிசாதிகளை)

௪. ஆணும சரி, பெண்ணும் சரி கற்புநெறி தவறாமை

௫.சகோதர ஒற்றுமை (சொத்து, பதவியை விட சகோதரன் முக்கியன் என எண்ணல்)

௭.தலைவன்-சேவகன் உறவு.. ராமர்-அனுமார் உறவு..

௮.என்றும் எளியவனாக அனைவரிடத்தில் அன்பும் பண்பும் முன்னிறுத்தி வாழ்பவனாக, அதே சமயம் நேரம் வருகையில் வீரத்தின் அடையாளமாக இருத்தல்

இன்னும் எவ்வளவு வேண்டுமாயினும் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆன்மீகத்துக்கு மட்டுமின்றி சமூக வாழ்க்கைக்கு ஸ்ரீராமாயணம் எவ்வளவோ நன்மைகளை சேர்க்கிறது. நன்னெறிக் கதைகள் என்று பல கதைகளைக் கேட்கிறோம், அதனில் உள்ள நல்ல வாழ்வாம்சங்களை எடுத்துக் கொள்வது போலாவது ராமாயணத்தை நோக்கினால் நல்லெண்ணம் உள்ள எவருக்கும் ராமாயணத்தை பழிக்கும் எண்ணம் தோன்றவே தோன்றாது. நாட்டில் நற்குணங்களை ஒழிக்க வேண்டும் என்ற கங்கணம் கட்டி அலையும் தி.க. வுக்கு முதல் எதிரியாக ராமாயணம் இருப்பது ஒன்றே அதன் மகத்துவத்தை உணர வைக்க அளவுகோல் எனவும் கொள்ளலாம்.

ராமாயணம் போன்ற தர்ம நூல்கள் ஒவ்வொரு கோயில் விழாவிலும் உபன்யாசங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கப் பட வேண்டும். அப்படி சேர்வதால் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற பிடிப்பும் குற்றமற்ற மனதும் இயல்பாகவே சமூகத்துக்குள் உண்டாகிறது. அப்படி இருந்த காரணத்தாலேயே கொங்கதேசம் தர்மத்திலும் மக்கள் ஒழுக்கத்திலும் பிற தேசங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது.நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும பாவமும் சிதைந்து தேயுமே
ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே
'ராம' என்றிரண்டெழுத்தினால் ஸ்ரீ ராம ஜெயம்!


மேலும் படிக்க,1 comment:

 1. அன்னிக்கு இராமயணம், மகாபாரதம், சின்னுரு பொன்னுரு கதயெல்லாஞ் சொல்லி.......
  " ... நல்லவங்கெல்லா இத்தன கஸ்டப்பட்டாங்க சாமி...
  சொந்த பங்காளிகோ, உறவுக்காரங்கோ, மண்ணுக்காசப்பட்டு பொருளுக்கு ஆசப்பட்டு பொன்னுக்கு ஆசப்பட்டு எத்தனயோ கொடுமை செஞ்சாங்கோ.. ஆகாத வழில எல்லாம் போனாங்கோ. கடசில விட்டுச்சா கெரகம். என்ன கெதியானாங்கொ!ஆனா நல்லவங்கொ அத்தனையுங் காண்டாங்கொ... அத்தன கஸ்டத்துலயுமு மொற தவறாம வயிராக்கியமா நெலயா நின்னாங்கொ..
  அந்த வயிராக்கியம் வேணு...ஊக்கம் வேணு.. நல்ல எண்ணம் வேணுங் கண்ணு.
  நல்லது நெனச்சா ஆண்டவன் நல்லதிவே கொடுப்பான்.
  அவன் மேல பாரத்த போட்டுட்டு பொழப்பப் பாக்கோணுந் தங்கோ...
  வெசனப் படக்கூடாது! படச்சவன் பாத்துட்டு இருக்றான்..
  வர்றது வருட்டு. பாத்துப் போடுலாம்' சாமி.
  மேலிருக்கிறவன் நல்ல வழியுடுவான்....நம்போணு.
  அவங்கெல்லா பட்ட கஸ்டமா நாம படுறோ... எல்லாத்துக்குமு ஒரு அளவு இருக்குது....
  நம்மள ஏத்தோனுமுனு நெனச்சுட்டா அவன் ஏத்தியே தீருவான். நல்ல கெதியக் கொடுப்பான். கருத்துல வச்சுக்கோணு சாமி.
  நாலு பேருக்கு உபகாரமா இருக்கோணு... நன்மெ செய்யோனு, பொய் பேசக்கூடாது, அடுத்தவன் பொருளுக்கு கெதிகெட்டு திரியக் கூடாது, அடக்கம் வேணு, கோபமாகாது பொறாம கூடாது, பொறும வேணு, நாக்குல நல்ல சொல்லு வேணு, கூலானாலு நாலு பேருக்கு கொடுத்து உண்ணோனு, விட்டுக் கொடுத்துப் போகோன்னு...
  ஒத்துமயா வகமொறயோட வாழோன்னு. நீதி நேர்மைக்கும் பணிஞ்சு நியாயத்துக்குந் தர்மத்துக்குங் கட்டுப்பட்டு நடக்கோனு"ன்னு சொல்லுவாங்க!!!

  ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates