Trending

Tuesday, 26 May 2015

வீடியோ-அறிந்துகொள்வோம் அறம் நிலையாத்துறையை

கோயில் பிரச்சனைகளுக்கு மிகவும் சிரத்தை எடுத்து சட்டரீதியாகவும், களத்திலும் போராடி வரும் அமைப்பான ஆலய வழிபடுவோர் சங்கம், அறிந்துகொள்வோம் அறம் நிலையாத்துறையை என்ற நூலை வெளியிட்டார்கள். அந்த புஸ்தகம் இப்போது வீடியோ பதிவாக அனைவரையும் சென்றடையும் வண்ணம் வெளியிடப்படுகிறது.

அறநிலையத்துறை சட்டம், அதனால் நம் கோயில்களுக்கும் ஹிந்து சமூகத்துக்கும் ஏற்படும் இழப்புகள் மற்றும் பாதிப்புகள், இந்த துறையின் தோற்றம், செய்யும் தவறுகள் என்று அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்க்கவும் பகிரவும்.கோயில் நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், கோயில் பிரச்சனைகளுக்கு போராடும் ஹிந்து சகோதரர்கள் அனைவருக்கும் இந்த லிங்கை கட்டாயம் அனுப்பவும். பொதுமக்களுக்கு அறநிலையத்துறையால் கோயில்களின் பாரம்பரியம், சொத்துக்கள் எல்லாம் எப்படி அழிந்து வணிக மையங்களாக மாறி வருகின்றன என்பதை எடுத்துரைக்க இந்த வீடியோ கட்டாயம் உதவும்.https://www.youtube.com/watch?v=c8VHRtoCc1g

*கோயில்களை சர்க்கார் அறநிலையாத்துறை என்னும் துறை மூலம் ஆக்கிரமித்து கோயில் சொத்துக்களை "கவனிக்கிறது". இதுபோல அரசாங்கம் சர்ச்களையோ, மசூதிகளையோ சுரண்டுவதில்லை. ஏன் கோயில்களுக்கு மட்டும் இந்த சாபம்?

*கோயில் சொத்துக்களை சரிவர பராமரிக்காமல், அவற்றை அரசு வேலைகளுக்கும் அரசியல்வாதிகள் வேலைக்கும் விற்று பயன்படுத்துகிறார்கள்! அக்கிரமங்களின் உச்சம் இது. கோயில் ரெஜிஸ்டர் என்னும் புஸ்தகம் பேணப்பட வேண்டும். அதில் கோயில் சொத்துக்கள் பற்றி விவரங்கள் இருக்க வேண்டும். எந்த கோயிலிலும் அறநிலையாத்துறை முறையாக பராமரிப்பதோ பேணுவதோ இல்லை. இது சட்டப்படி கிரிமினல் குற்றம்.

*இந்த அறநிலையாத்துறை மதசார்பற்ற அரசால் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் பாரபட்சமாக நடத்தும் கொடுமை ஆகும்.

*அறநிலையாத்துறைக்கு கோயில் சொத்துக்களை நிர்வகிக்கும் அதிகாரம் மட்டுமே உள்ளது. கோயில் பூஜை முறைகளையோ, விழாக்கலையோ, பிற பணிகளையோ கட்டுப்படுத்த எந்த அதிகாரமும் இல்லை.

*கோயிலுக்குள் பலகாரக் கடையை "பிரசாதக்கடை" என்னும் பேரில் நடத்துவது தவறு மட்டுமல்ல அசிங்கமும் ஆகும்.

*கோயிலுக்குள் ஆகம விரோதமாக பழைய அமைப்புகளை சிதைப்பது புதிய கட்டிடங்கள் கட்டுவது மிகப்பெரிய குற்றம். குறிப்பாக அறநிலையாத்துறை அதிகாரிகளுக்கு கோயிலுக்குள் அலுவலகம் இருக்கவே கூடாது.

*அறநிலையாத்துறை கோயிலுக்கு ஒரு வேலைக்காரர்கள். அவ்வளவே. கோயிலை தங்கள் இஷ்டம் போல எடுத்துக் கொள்ள முடியாது. நிர்வாகம் சரியில்லை என்று சட்டப்படி நிரூபித்து கோயிலை எடுத்தாலும் அதிகபட்சம் மூண்டு முதல் ஐந்து வருடத்துக்குள் மீண்டும் நிர்வாகத்தை ஒப்படைத்து கோயிலை விட்டு வெளியேற வேண்டும்.

இதுபோல, இன்னும் ஏராளமான விஷயங்கள் இந்த அறநிலையாத்துறை பற்றி உள்ளது. அனைவரும் இந்த அறநிலையாத்துறை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். கீழ்க்கண்ட லிங்கில் அறநிலையாத்துறை பற்றிய அனைத்து விவரங்களும் உள்ளன.கோயிலில் கருத்து வேறுபாடு என்று அறநிலையாத்துறையை உள்ளே கொண்டு வந்து விடுபவர் அந்த கடவுளுக்கே துரோகம் செய்தவனாவார். அப்படி செய்பவர் கோயிலை இடித்து கோயில் சொத்தை தின்றவர்கள் என்ன ஆவார்களோ அதே நிலைக்கு ஆளாவார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.. அந்த புத்தகத்தின் வீடியோ இணைப்பு: https://www.youtube.com/watch?v=c8VHRtoCc1gஹிந்து சமய அறநிலையத்துறை- அறிந்துகொள்வோம் அறம் நிலையாத்துறையை: HR&CE Exposed Free E-Book Download :
www.mediafire.com/download/j2fivj36ms6fpk6/HR%26CE-Exposed.pdf

வெளியீடு: ஆலய வழிபடுவோர் சங்கம்
http://templeworshippers.org/contact.html

வீடியோ ஆக்கம்: கொங்க வெள்ளாளர்களில் ராசிபுரம்நாடு விழிய கோத்திர ஆறுமுக கவுண்டர் & பூந்துறை நாடு கன்ன கோத்திர அத்தப்ப கவுண்டர்
சித்ரமேழி தர்ம சபை 

Thursday, 21 May 2015

தேங்காய் சுடும் நோம்பி

ஆடி முதல் நாள் தேங்காய் சுட்டு சாமி கும்பிடுவது, கொங்கதேசத்தில் பரவலாக கொண்டாடப் படும் நோம்பி. தேங்காயை நன்கு தரையில் உரைத்து அதன் னார்கள் நீக்கி, மஞ்சள் பூசி, அதன் கண்ணில் துளையிட்டு பாதி நீரை வடித்துவிட்டு வெல்லம், பாசிபயறு போன்றவற்றை போட்டு, தோலுரித்து மஞ்சள் பூசிய குச்சியில் குத்தி, தீயில் வாட்டுவார்கள். தேங்காய் ஓடு கருகி அல்லது வெடித்த பின் அதை கோயிலுக்கு கொண்டு சென்று உடைத்து கொஞ்சம் தேங்காயை அங்கே வைத்துவிட்டு மீதி தேங்காயை கொண்டுவந்து சாப்பிடுவார்கள். சிறுவர்கள் மிகவும் ஆர்வமுடன் கொண்டாடும் பண்டிகையாகும். ஊரில் உள்ள சிறுவர்கள் ஒன்றுகூடி சுடுவார்கள்.

பாரதப் போர் ஆடி ஒன்று துவங்கி பதினெட்டு நாட்கள் நடந்து ஆடி 18 அன்று முடிந்தது. ஆடி 18 அன்றுதான் போர் முடித்து ஆற்றில் கத்தி கழுவி குளித்தார்கள் என்பது இன்றுவரை தொடரும் செய்தி; அதை ஒட்டியே ஆடி பேருக்கு அன்று ஆற்றில் குளிக்கிறோம். போர் துவங்கிய அன்று களப்பலி கொடுப்பது வழக்கம். கலப்பளியாக பாண்டவர்கள் பக்கமிருந்து அரவானை பலி கொடுத்தார்கள். தேங்காய் எப்போதுமே ஒரு உயிருக்கு நிகராக மதிக்கப்பட்ட பொருள். தேங்காய் உடைப்பது கூட ஒரு பலி கொடுப்பதற்கு சமம் என்று கேள்விப்பட்டுள்ளேன். மஞ்சள் பூசி, தேங்காய்க்குள் சர்க்கரை, பயறுகள் போட்டு மூடி சுடுகிறார்கள். தேங்காய் ஓடு வெடிப்பது கபால மோட்சத்தொடு ஒப்பு நோக்கலாம். ஆக, தேங்காய் சுடுவதை போர் துவக்கம் மற்றும் களப்பலி கொடுத்த நினைவாக கொண்டாடுகிறார்கள் என்றே கருத இடமுண்டு.தேங்காய் சுடும் நோம்பி பற்றிய அபிப்பிராயம்.சிலர் தேங்காய் சுடுவதை பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் முடித்து ஆயுதங்களை எடுத்து சுத்தம் செய்த நாள் என்றும் சொல்கிறார்கள்.

Thursday, 7 May 2015

வெண்டுவன் கூட்ட வரலாறு

கங்கா குலம் - கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தின் அறுபது கூட்டங்களில் ஒன்றான வெண்டுவன் கூட்ட வரலாறு.

கூட்ட வரலாறு
முதலாம் இராசராசன் (985-1014) கால கல்வெட்டு ஒன்ற்றில், "வெண்டுவன் அதிருக்குறையான்” என்ற பெருமகன்ஒருவர் குறிக்கபெருகிறார். ஒப்பாரும், மிக்காரும் இல்லாத வெண்டுவன் என்ற குல முதல்வர் வழி வந்த வேளாண்பெருமக்கள், வெண்டுவன் குலத்தார் என்று அழைக்க பெற்றிருக்கலாம். 

டி.எம்.காளியப்பா “வெண்டுக்காய்” எனபது வெண்டைகாயின் பெயர்.வெண்டைகாயை அடையாள  சின்னமாககொண்டவர்கள் வெண்டுவ குலத்தார் என்று கூறுகிரார்.அவர் வெண்டுவ குலம் தவிரக் கொங்கு வேளாளர் சமூகத்தில்‘வெண்டுஉழவர் ‘குலம்  என்று ஒன்று தனியாக உள்ளதாகவும் கூறுகிரார்.’வள்ளிபுரம் மட்டும் அவர்களது காணியூர்என்கிறார்.


ஒரு சிலர் வெண்டுழவர் என்பதை வெண்டுவர் என தவறாக உச்சரித்திருக்கலாம்.வெண்டுழவர் குலம் எங்குமேஇல்லை. நல்.நடராசன், ‘வேள்+உழவர்’ என்ற சொல்லே வெண்டுவர் குலம் ஆயிற்று என்று கூறுகிரார்.அவ்விருசொற்கள் ‘வேளுழவர்” ஆகுமே தவிர வெண்டுவர் என ஆகாது. தெ.ப.சின்னசமி வான் மழையை“வேண்டுவோர்” வெண்டுவர் ஆனார்கள் என்று கூறுகிறார். கு.சேதுராமன்,வெண்டைகாயை விளைவிப்பதில்வல்லவர்கள் என்று கூறுகிறர். பிறர்க்காக வெண்டைகாய் விளைவிக்கும், வெண்டுவன் குலத்தார், வெண்டைகாயைஉண்ண மாட்டார்கள் என்று கூறுகிறார்.

புலவர் புகழ் மொழி
குல சிறப்பு கூறும் பாடல்களில் “நம் குடிகள் வெண்டுவன்”, ”கன்றுதவு வெண்டுவன்” என்று சிறப்புடன் குறிக்கபெறுகின்றனர்.

புலவர்களை போற்றிப் புரந்து, பொன்னும், பொருளும் வாரி, வழங்கி சிறந்தவர்கள் வெண்டுவகுலத்தார். வெண்டுவகுலத்தார் புலவர்கள் சூழ வீற்றிருப்பர். வெண்டுவ குலத்தாரின் "முத்து மணி இலங்கும் முகசாலை மண்டபத்தே வித்வசனர் எந்நாளும் வீற்றிருப்பர்” என்று கூறப்படுகிறது. அதனால் புலவர்கள் வெண்டுவகுலத்தாரை நம் குடிகள் என்று  உரிமையுடன் அழைத்தனர். அக்காலத்தில் வேளாளர் வீடுகளில் பிற சமூகத்தினரின் கன்றுகுட்டிகட்கு, இலவசமாக புல் கொடுப்பர், தலைக்கு எண்ணெயும், குழந்தைகட்கு பாலும், இலவசமாககொடுப்பர். இதை குறிக்கவே “கன்றுதவு வெண்டுவர்” என்று கூறப்பட்டுள்ளது. இம்மூன்று அறச்செயல்களையும் வெண்டுவன் குலத்தார், தலையாய கடமையாகச்செய்து புகழ் பெற்றுள்ளனர்.
கம்பரும்,வெண்டுவன் குலத்தாரும் கவிச்சக்கரவர்த்தி கம்பர்,கொங்கு நாட்டு எச்சில் நீர்தான் காவிரி, சோழநாடு செல்கிரது என்று சோழனுக்கு குளித்தலையில் நிரூபித்துக் காட்டினார். மன்னரை விட வேளாளர் பெரியவர்கள் என்று நிறுத்துக்காட்டினார். வேளாளரைப் பாடிய வாயால்  யாரையும் பாட மாட்டேன் என்றார். காப்பவர் என்றும் வேளாளர் என்றார்.
அதனால் வெண்டுவர் முதலாகிய கொங்கு வேளாண் பெரு மக்கள், கம்பருக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்ததோடுமட்டும் நிற்கவில்லை. கம்பருக்கு தெரியாமல் அவர் பயணம் செய்யும் போது, கம்பர் அமர்ந்திருந்த பல்லக்கைச்சுமந்து மகிழ்ந்தனர். கம்பர் விருந்துண்ட பின் தாம்பூலம் தரித்தபோது அவருடைய தாம்பூலம் துப்பும் எச்சில் காளாஞ்சி என்னும் பாத்திரத்தை ஏந்தி நின்றார்கள். கம்பருடைய செருப்புகளை பார்த்தார்கள்.இந்த செருப்புகள் கம்பருடைய திருவருடிகளைத் தாங்க என்ன தவம் செய்ததோ என்று  அச்செருப்புகளைத் தன் தலை மீது சுமந்து கூத்தாடினர். இந்த அரியச் செயல் நாடெங்கும் பரவியது. வாலச் சுந்தர கவிராயர், தன் கொங்கு மண்டல சதகத்தில் வெண்டுவகுலதீத்தான் செவ்வந்தியை புகழ்ந்து ஒரு பாடல் எழுதியுள்ளார்.

தண்டிகை தாங்கியும் காளாஞ்சி ஏந்தியும் தமிழ்செய் கம்பர்அண்டையில் பாதச்சம் மாளியும் தூக்கி அடிமையும்பட்டுவெண்டுவ கோத்திரன் தீத்தான் செவ்வந்தி விளங்குகங்கைமண்டலம் கீர்த்தி தனைபடைத் தாங்கொங்கு மண்டலமே
என்பது கொங்கு மண்டல சதகமாகும்.

மண உறவால் மணலூர் நாட்டு காணி பெறல்
மணலூர் நாட்டுக் கூடலூர்க் கிராமம் மேல் பாகம் பெரிய மதியாக் கூடலூர் மணியம் என்.பொன்னுசாமிக்கவுண்டரிடம் ஒரு செப்பேடு உள்ளது. சின்னதாராபுரம் கவிஞர் புதுமதியன்  தம் ‘’ நல்லதாய்’’ நூலில் அச்செப்பேட்டை பதிப்பித்து உள்ளார்.


கூடலூர் கிராமத்தில் பண்ணை குலத்து பெரியண கவுண்டருக்கு ஒரு முடமான பெண் பிறந்தாள். அப்பெண்ணின்பெயர் ராசம்மா கவுண்டச்சி என்பதாகும். வெண்டுவன் குலத் தில்லையப்ப கவுண்டர் மகன் பொன்னம்பலக்கவுண்டர், முடப்பெண் ராசம்மா கவுண்டச்சியை திருமணம் செய்து கொண்டு கூடலூர்க் காணி பெற்றார். பொன்னம்பல கவுண்டர் தனது சுகபோகி; பெண்கள் விஷயத்தில் மிகவும் குறும்பு செய்ததால் அவர் கூடலூர்க்கிராமத்தில் உள்ள பெரிய திருமங்கலத்தில் அருங்கரையம்மன் ஆலயத்தை வெண்டுவன் குலத்தார் உருவாக்கினர். பெரியதிருமங்கலத்தில் குடியேறிய வெண்டுவ குலத்தார் கிழக்கு வளவு, மேற்கு வளவு என்ற இருபிரிவாக சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.இங்கு வெண்டுவன் குலத்தார் பழனி அருகில் உள்ள கொங்கூரிலிருந்து கூடலூர் வந்த குடியானவர்களாவர். வெண்டுவ கூட்டத்தார் அனைவருக்கும் ஆதி காணி கொங்கூராகும். இங்கிருந்தே பல ஊர்களுக்கு பிழைக்க சென்ற வெண்டுவன் கூட்ட குடியானவர்கள் வாழையடி வாழையாக வளர்ந்து பெருகி வாழ்வாங்கு வாழ்கிறார்கள்.


800 ஆண்டுகள் பழமையான கொங்கூர் உக்கிரகாளியம்மன் ஆலயம் 
பெரியதிருமங்கலத்தில் "கிராம பெரியத்தனமும்,கொல்லுத்தொழில் ஆண்டி தோண்டி,பள்ளு,பறை பதினெட்டுசாதியரின் தொழிலும் வெண்டுவன் குலத்தாருக்கு உரியதாக இருந்தது. என்று கவிஞர் புதுமதியன்எழுதியுள்ளார். கண்ணிவாடி   கண்ணக் குல பட்டயத்தில் மணலூர் நாட்டு வெண்டுவன் குலம் காளியப்ப கவுண்டர் என்பார் குறிக்கப் படுகிறார். அருகில் உள்ள பிள்ளையார் பாளையம்,பெரியமதியாக் கூடலூர், ஆகியஊர்களும், வெண்டுவ குலத்தார் காணியூர்கள் ஆயின. கூடலூர் கிராமத்தின் தலைமைப் பொறுப்பும், உள்ளூர்கவுண்டர்கள் என்ற பெயறும் பெற்ற வெண்டுவன் குலத்தார் வட முகம், தென்முகம் என்று இரண்டு பிரிவாகவாழ்கின்றனர். கோயில்பாளையம், கருநெல்லி வலசிலும் வாழ்கின்றனர். கூடலூர், கோயில்பாளையம், கருநெல்லிவலசுவெண்டுவன் குலத்தார் வடமுகம் என்றும், உள்ளூர் கவுண்டர் என்றும் அழைக்கப் படுகின்றனர். மதியாகூடலூர், பெரிய திருமங்கலம் வெண்டுவர் தென் முகம் வெண்டுவர் என்றும் பெரிய தனக்காரர் என்றும் அழைக்கப்படுகின்றனர். திருமண உறவால் மணநாட்டில் காலூண்றிய வெண்டுவன் குலத்தார் அங்கு தம் செல்வாக்கை பெருக்கியதுடன் மணநாட்டு பெரிய தனம் செய்யும் பெருமையையும் பெற்றனர். தென்னிலை, கோடந்தூர், நடந்தை, சின்ன தாராபுரம், ராஜபுரம், சூடாமனி, எலவனூர் முதலிய கிராமங்களிலும் தம் சொந்த கிராமம் ஆகிய கூடலூரிலும்  தலமை பெற்று வாழ்ந்தனர்.

இதனை கவிஞர் புதுமதியன் தன் கவிதையில்மண்டலம் தன்னில் மணல்நாட்டில் –புகழ்மண்டி    விளங்கிடும் காராளர் வெண்டுவர்என குறிப்பிடுகிறார்.

பெரிய திருமங்கலம்  சாலிவாகன சகாப்தம் 1778 கலியுக சகாப்தம்4879 வெண்டுவ கோத்திரம் வடுகபட்டி முத்துவேலப்ப கவுண்டர் மகன் பழனிமலைக் கவுண்டன் ரூ100 என்ற கல்வெட்டு காணப்படுகிறது.


விலைக்கு பெற்ற மங்கலம் தென்னிலை வேட்டுவ பட்டகாரர் எம்.ஏ.பகவதி கவுண்டர் வீட்டில் உள்ள செப்பேடு வராக வேட்டுவரிடமிருந்துமங்கலம் என்ற ஊரின் ஆட்சியுரிமை,கோயில் உரிமை ஆகியவைகளை வெண்டுவன் குலத்தார் விலைக்குவாங்கியதை கூறுகிறது.

"செய வருசம் தை மாதம் 25 ம் தேதி மங்கலம் காளியம்மன் கோயில் இராச முப்பாடு,கோயில் முப்பாடு கொடுத்த்துவெண்டுவன் குலத்துக்கு ,சாட்சி வெங்கம்பூர் சம்மந்த ராயக் கவுண்டன்,போத்தி சேசுவராயக் கவுண்டன், சல்லிகாளத்திக் கவுண்டன், ஆத்தூர் மாந்தைப் படை  வேட்டுவன்  வண்டி கவுண்டன் சாட்சி, சிறுதலை வேட்டுவன் சாட்சி கிழங்கு நாடு சுப்பையன் சாட்சி, கண்டி கவுண்டன்  சாட்சி,திருமலை கவுண்டன் சாட்சி வராக வேட்டுவன் வங்கி கொண்டது, பொன்னு 150, முப்பாட்டு காரனுக்கு பொன்னு 5, நெல்லு மொடா 2, ஆட்டு கிடாய் 1, பறையன் கருப்பனுக்கு பொன்னு 2, நெல்லு மொடா 2, ஆட்டு கிடாய் 1 ஒக்கிலியரை வெட்டி முடிக்கின படியினாலே முன் நடந்த பிரகாரம் நடந்து கொள்ளவும்"
  என்பது செப்பேடு பதிவாகும்

வணிகரை பாது காத்த வெண்டுவர்
திசையாயிரத்து ஐநூற்றுவ  நானாதேசி என்ற வணிக குழுவினர் பாது காப்பாக வணிகம் செய்ய "அடைக்கலம்" என்னும் பெரிய காவல் நிலையம் ஒன்றை கிழங்கு நாட்டு நித்தம் வினோதம் என்ற ஊரில் இருந்து வாழும் வெண்டுவன் அதிருக்குறையான் என்பவர்  மேல்கரைப் பூந்துறை நாட்டுப்  பழமங்கலம் என்னும் ஊரில் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இதை குறிக்கும் கல்வெட்டு ஈரோடு இந்து கல்வி நிலைய அருங்காட்சியகத்தில் உள்ளது. வெண்டுவன் குலத்தாரின் பூர்வீக சிறப்புக் காணியூர்களில் ஆரியூரிலும் இடைச்சி கிணறு என்னும் பகுதியில் உள்ள அய்யனார் சிலையின் தென்புறம் வணிகர் குழுக் கல்சிற்பம் உள்ளது.

வெண்டுவன் குலக் காணியூர்கள்: பழனி சூழ்ந்த வைகாவூர் நாடு, கொங்கூர், ஆரியூர், வீர சோழ நாட்டின் கற்றான்காணி, வல்லிபுரம், முகிலனூர், சிற்றோடை (சித்தோடு), தோக்கவாடி, நல்லூர், தாளக்கரை, காடம்பாடி, கொப்புலி நத்தம், கொல்லன் கோயில் ஆகிய ஊர்கள் வெண்டுவன் குலத்தார் காணியூர்கள் என்று காணிப் பாடல் கூறுகிறது. இக்காணியூர்கள் புனிதமானவை என்று கூறப்பட்டுள்ளன. காணி பெற்ற வெண்டுவன் குலத்தார் போசன், புவியரசன், நிருபர்(அரசன்) என்று பலவாறு புகழப் பட்டுள்ளனர். 

வைய்யவூர்   நாடு கொங்கூர்  கோனூர்  கூடலூர்

மண்மங்கை  ஆரியூரும்
வீரசோழ நாட்டினில்   கற்றாங்     காணியும்
வல்லிபுரம் முகிலனூரும்
மெய்யான சிற்றோடை வளர் தோக்க  வாடியும்
மேன்மை பெறு   நல்லூருடன்
விளங்குதா ளக்கரையும் மிக்ககா  டம்பாடி
வெற்றிக்கொப் புலிநத்தமும்
பொய்யாத வாய்மையுள கொலங்கோயில்  இதுவெலாம்
புனிதமிகும்  காணி பெற்றாய்
புகழ் பெற்ற வெண்டுவ குலத் தீப வசீகரனே
போசனே புவியரசனே
மைய்யர் விசிச்சியர்கள் மன்மதன்  ராவுத்தன்
மைந்தன்என   வந்தநிருபா
மாதேவர் தான் தோன்றி அப்பர்அருள்  பெற்றுமே
மாநிலம் தனில்வாழ்கவே"
எனபது வெண்டுவ குல காணிப்பாடலகும்.

செங்கமுயல நல்லதம்பி என்பவர் வெண்டுவ குலம் பற்றி ஒரு பாடல் பாடியுள்ளார் .அப்பாடலில் காணியூர்கள் சில தொகுத்து கூறப் பட்டுள்ளன.

முதல் காணியூராக கொங்கூர் கூறப்பட்டுள்ளது.அப்பாடலில் கொங்கூர், தாளக்கரை, கூடலூர், கற்றான்காணி, கொளநல்லி, கொல்லங்கோயில், மூலனூர், புதுப்பை, நாட்டாமங்கலம், ஆரியூர், மண்மங்கை, வல்லிபுரம் முதலிய ஊர்கள் வெண்டுவன் குலத்தார் காணியூர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

கொங்கூர் முதற்காணி ,தாழக் கரைக்கதிபர்
கூடலூர்கற்    றான்காணியும்
கூவிளம்  கமுகொடு  கொளாநல்லி  செண்பகம்
கொல்லங்கோ  யில்மூலனூர்
பொங்குபுகழ் ஆன்பொருநை  புதுப்பைநாட்  டாமங்கலம்
போற்றிடும் ஆரியூரும்
மண்மங்கை  வல்லிபுரம் ஆரிகை மேருவென
பங்கய மலர்தடஞ்சூழ்
பழனி முரு  கேசர் மலரெனும் மேன்மைப்
பதம்சேர்  தொழுநேயனாம்
பண்டுபவ பூர்வமுதல்  வேண்டுவ குலாதிபன்
பழிகழி  திருநாடனாம்
செங்கமுயல் நல்லதம்பி அருளாக்கிய புவநேயர்
தெரிவையர்கள்  மதிரூபனே

எனபது செங்கமுயல் நல்ல தம்பி பாடலாகும்.
   
காணிகளை மையமாக வைத்து கொங்கூர் வெண்டுவன், கோனூர் வெண்டுவன், கூடலூர் வெண்டுவன், தாழக்கரை வெண்டுவன், கத்தாங்கண்ணி வெண்டுவன் என்று பலபவர் வாறு அழைக்கப் பட்டாலும் அவை ஒரே வெண்டுவன்தான். வேறுபாடு ஏதும் இல்லை. ஓதாளர் அலகுமலைக் குறவஞ்சி "கற்றை வெண்டுவன்"  "கற்றங்காணி வெண்டுவர்" என்று கூறுகிறது. தேவணம்பாளையம் என்னும் ஊரில் சிங்கவிண்ணன் என்ற மன்னன் கல்வெட்டில்"கருநிழலி வெண்டுவன்" என்பவர் குறிக்க படுகிறார்.

வெண்டுவகுலக் கல்வெட்டுகள்
1.மணலூர் நாட்டில் உண்டிதம் ,மாந்தில் போன்ற ஊர்களில் காணியுரிமையுடைய வேண்டுவ குல பெரியான்  பிள்ளானான செயங்கொண்ட சோழக்  காமிண்டன்  மேல் கரை  அரைய நாட்டு மொஞ்சனூர் ஆவுடையார்க்கு விக்கிரம சோழத் தேவனின் 18 ஆம் ஆட்சியாண்டில் சந்தியாத்  தீபம்  அமைத்தார் (1291).
2.மேல் கல்வெட்டில் கண்ட வெண்டுவன் குலத்தார் மொஞ்சனூர் ஆவுடையார் கோயில் திருப்பணியின் போது திருநிலைக் கால்களை கொடையாகக் கொடுத்தனர்.
3.கத்தாங்கண்ணி  ஆயி அம்மன் வெண்டுவன்  குலத்தார் பல திருப்பணிகளை செய்துள்ளனர். 
அ. 1888 ஆம் ஆண்டு வேண்டுவ குல அப்பாச்சி கவுண்டர் இரண்டு மண்டபங்களை கட்டினார். 
ஆ.தேவனூர்க் கிராமம் ஆண்டியூர் வெண்டுவ குல கிருஷ்ணசாமி கவுண்டர் திருமதிலும், தீர்த்தக் கிணறும் அமைத்தார் .
இ.தேவனூர்க் கிராமம் வெண்டுவ குலத்தார் கந்தசாமி கவுண்டர், திருமூர்த்திக் கவுண்டர், திருமலைசாமி கவுண்டர், நாச்சிமுத்து கவுண்டர், ஆயிக் கவுண்டர், இராமசாமிக் கவுண்டர், அமனாண்டிக் கவுண்டர், பழனிக்கவுண்டர் ஆகியோர் சேர்ந்து மடம் கட்டினர்.
ஈ.1898 ஆம் ஆண்டு வெண்டுவ குல பாப்பம் பாளையம் மணியம் அப்பாச்சிக் கவுண்டர் சந்திப் பூசைக்காக 1 ஏக்கர் நிலம் கொடையாக அளித்தார்.
உ.1898ஆம் ஆண்டு மகா மண்டபம், சிங்கக் கொறடு, தீபக் கம்பம், குறிஞ்சி, பொங்குமடம், செங்கல் பூதம் 4 இவைகளை அமைத்தவர் வேண்டுவ குல அப்பாச்சிக்  கவுண்டர் (இதற்கு இருப்புலி செவந்தி குலத்தாரும் உதவினர்).
4.கொல்லன் கோயில் தான் தோன்றி ஈசுவரன் கோயில் நந்தா விளக்கு, சந்தியா தீபம் இவைகளை வேண்டுவ குல நான்கு கரையாரும் சேர்ந்து எரிக்க கொடை நிலம் கொடுத்தனர் 
5.கந்தசாமி பாளையம் சடையப்பர் கோயிலில் வேண்டுவ குல நாச்சிமுத்துக் கவுண்டர் கருடக் கம்பம் நிறுவினார்.
6.கொங்கூர் பசுபதீசுவரர் கோயிலில் வெண்டுவ குல குப்பச்சி கவுண்டர் இரண்டு திருவிளக்குகள் வைத்தார்.
7.வாகரை பெத்தாக் கவுண்டர் ,அத்தப்பம் பட்டி முத்துக் கவுண்டர், கிழாங்குண்டல்  பூசாரிக் கருப்ப கவுண்டர், முப்பாட்டுக் காரர்கள் ஆகியோர் ஆரியூர் செல்லாயி, கருப்பண்ணன் ஆகியோருக்கு வெண்கலக் குதிரை செய்து கொடுத்துள்ளனர்.
8.குத்தாணிபாளையம் பள்ளிகூடத்து கவுண்டர் மகன் மாரப்ப கவுண்டர் ஆரியூர்க் கோயிலுக்கு தூரிக்கல் நாட்டியுள்ளார்.
9.ஆரியூர் "மேமுகம் வஞ்சியப்ப கவுண்டர், மேமுகம் காதக்கோட்டை கருப்பண்ணகவுண்டர், சின்னமுத்தாம் பாளையத்தார் ஆகியோர் கதவுகள் செய்து கொடுத்துள்ளனர்.
செப்பேடு பட்டயங்களில் வெண்டுவ குலம்
குறுப்பு நாட்டுக் 32 ஊர்களிலும் எழுமாத்தூர்ப் பனங்காடை குலத்தார்க்கும், இரண்டாவது காணி உரிமை பெரிய குலம்,வேண்டுவன் குலம், கண்னந்தை குலம், செல்லன் குலம், சாத்தந்தை குலம், ஓதாள குலம் சார்ந்தவர்கட்கு  என்றும், மூன்றாவது காணி படைத்தலை கவுண்டர்க்கு  என்றும் முடிவு செய்து எழுதிய செப்பேட்டில் வெண்டுவ குலம்  சார்பாக கையெழுத்திட்டவர்கள் நல்லண கவுண்டர், அமராவதிக்  கவுண்டர்  ஆகியோர்.


சிவந்திகுல தீத்தாக்  கவுண்டர் மகள் வெள்ளைப்  பிள்ளையை கத்தாங்கண்ணி முத்தய்ய கவுண்டர் திருமணம் செய்து கொள்ள மறுத்து விடவே  கண்ண குலச்  செங்கோட்டு வேலப்ப கவுண்டர் சிவந்திகுல வெள்ளைப் பிள்ளையை மணந்து கொள்கிறார். சிவந்தி குலத்தார், கத்தாங்கண்ணி  முழுக் காணியையும் கண்ண குலத்தார்க்கு  கொடுத்து விட்டுக்  கீழ்க்கரை பூந்துறை நாட்டு இருபுலிக்கு குடியேறி விட்டனர். இதற்கு எழுதப் பட்ட செப்பேட்டில் சாட்சிக் கையொப்பம் இட்டவர் கத்தாங்கண்ணி வெண்டுவ குல பச்சாக் கவுண்டர், முத்தய்ய கவுண்டர் ஆகியோர்.

கன்னிவாடி கண்ணகுலத் தலைவர் முத்துசாமி கவுண்டர்  மூன்று மனைவியருள் ஒருவர் வெண்டுவன் குல வேலம்மாள். சீரங்கம் சென்று பிறந்த பென்குழைந்தக்குச்  சீரங்காயி  என்று பெயர் வைத்தனர். முத்துசாமி கவுண்டர் இறந்த பின் மணலூரில் வேலம்மாள்  தீப்பாய்ந்து  இறந்தார்.
தென்கரை நாட்டுப் புலவராக செங்குந்த கோத்திரம் இராசி கூட்டம் திருக்கைவேல் புலவரை நியமித்த ஆவணத்தில் கையெழுதிட்டவர்கலில் ஒருவர் கொங்கூர் வெண்டுவன் குல நல்லகுமாரு என்பவர்.

பேரோடு கரிச்சிக்குமாரர்   கோயில் காணியாளர்கள் வெண்டுவன், பண்ணை, பெருங்குடி குலத்தார் ஆகியோர். அக்கோயிலில் வெண்டுவன்  குலத்தாருக்கு திருவிழாவில் பச்சை பந்தல், முப்பாடு  உடையது.

வெண்டுவன் குலத்தார் உட்படப்  பல கொங்கு வேளாளர்  குலப் பெருமக்கள் பாசூர் குருக்கள்  இம்முடி அகிலாண்ட தீட்சிதர் அவர்களைக்  குலகுருவாகக் கொண்டு செப்பேடு எழுதிக் கொடுத்தனர். கொல்லன்கோயில், பேரோடு வெண்டுவன்  குலத்தார் சார்பில் அதை ஏற்று கொண்டு கையொப்பமிட்டவர்கள் குமார நல்லய்ய கவுண்டர், குமார சின்னய்ய கவுண்டர், முத்து கருமண கவுண்டர், முத்து ராக்கியாக் கவுண்டர், பெரிய செங்கோட கவுண்டர், சீரங்கராயக்  கவுண்டர்  ஆகியோர் ஆவர்.

சில சிறப்பு செய்திகள்
ஆரியூர் வேண்டுவன் குலப் பெரியவர் ஒருவருக்கு இரண்டு மனைவியர் இருந்தனர். அம்மா, ஆத்தாள் என்று அவர்கள் அழைக்கப்பட்டனர். கணவர் இறந்ததும், தேவியர் இருவரும் தீப்பாய்ந்து இறந்தனர். அவர்களுடைய ஏழு மக்களும் தங்கள் தாய்மாருக்குக் கோவில் கட்டினர். அக்கோயில் "அம்மாத்தாள் கோயில்" என்று அழைக்கப்  படுகிறது. சில ஆண்டுகட்கு ஒரு முறை ஆடி மாதம் ஏழு படைக்கலம் எடுத்து வழிபடுவர்.

ஆரியூர் வெண்டுவன் குலத்தாருக்கு, முன்னூர் மோளப்பாளையம், மலைக்கோயிலிலும் புன்னம் அங்காளம்மன் கோயிலிலும் சிறப்பு உரிமைகள் உள்ளன .முன்னூர் மலைக்  கல்யாண மரகதீசுவரர் கோயிலிலும், உத்தண்ட வேலாயுதசாமி கோயிலிளும், கல்யாண உற்சவ  உரிமையுண்டு.
அங்காளம்மன் கோயிலில் சிவராத்திரி விழாவிற்கு தயிர்க்கலயம், கோழி அடைசல் கொண்டு செல்லும் ஆரியூர் வெண்டுவன் குலத்தார் மிகச் சிறப்பாக மேள தாளத்தோடு வரவேற்கப்படுவர். அவ்வாறே  சிறப்புடன் அனுப்பி வைக்கப் பெறுவர்.
கீழ்க்கரை பூந்துறை நாட்டில் மிலேச்சர்கள் தொந்தரவு செய்தபோது, அவர்களை நாட்டு தலைவர்களாலேயே அடக்க இயலாத காலத்தே வேலாத்தா என்ற வெண்டுவன் கூட்ட வீரமகள் குடியானவர் படைதிரட்டி போர்நடத்தி வெற்றி கண்டார். "எங்களாலேயே முடில நீ கூட்டஞ்சேத்திகிட்டு தோக்கவாடி போற" என்று அந்த சிற்றரசுகள் கேட்டும் படைநடத்தி வெற்றி கண்டார். அதனாலேயே அந்த ஊருக்கு தோக்கவாடி என்ற பேர் வந்தது. பின்னாளில் கட்டிய கணவன் இறந்தபோது அவரோடு சேர்ந்து தீக்குளி இறங்கிவிட்டார்.அவரை தோக்காவாடி கன்னன், வெண்டுவன் & காடை கூட்டத்தார் தெய்வமாக வணங்கிவருகிறார்கள்.
மேல்கரை அரைய நாட்டை சேர்ந்த கொல்லன்கோயில் கிராமம் களிப்பாளையத்தில், சின்ன முத்தூரில் கோயில் கொண்டுள்ள மணிய குல தெய்வம் செல்லகுமாரசுவாமிக்கு கோயில் கட்டிக் குலத் தெய்வமாககே கொண்டு வழிப்பட்டு வருகின்றனர். 
கீழக்கரை அரைய நாட்டு கோலாரம் -தாழக்கரை வெண்டுவன் குலத்தினர் பொன்காளியம்மனை குல தெய்வமாக வணங்கி வருகின்றனர்.


பெரிய கவுண்டன் கோயில்
பண்ணை குலத்தாரின் முடப்பெண்ணை திருமணம் செய்து கூடலூரில் காணிப்பெற்ற வெண்டுவகுலப் பொன்னம்பலக்  கவுண்டர் செய்த சில தவறுகட்காக, பண்ணை குலப பெரியண்ன கவுண்டரால் தலை துண்டித்துக் கொல்லப்பட்டார். தலை தனியாக விழுந்தது. தலையற்ற முண்டம் சிறிது ஓடிச்  சென்று விழுந்த இடத்தில் வெண்டுவ குல பொன்னம்பலக் கவுண்டருக்கு கோயில் கட்டிவழிபட்டு, ஆண்டு தோறும் பொங்கல் வைக்கிறார்கள்."பெரியக் கவுண்டன் கோயில்"என்று அழைக்கப்படும் கோயில் பெரிய மதியாக் கூடலூர் செல்லும் வழியில் ஊருக்கு வடபுறம் உள்ளது.


கர்ப்பிணியான இறந்த பொன்னம்பலக் கவுண்டர் மனைவி இராசம்மாள் கவுண்டச்சி பங்காளிகளிடம் அடைக்கலம் சென்று வாழ்ந்து ஆண்மகனைப் பெற்றெடுத்தாள். அவ்வெண்டுவன் குல சிறுவன்  பெரியவனாகி வேட்டுவர் தலைவன் உதவியால் மீண்டும் கூடலூரில் வெண்டுவர் உரிமையை நிலைநாட்டினான். பண்ணை குலத்தார் ஊரிலிருந்து வெளியேறி விட்டனர். ஆதி காணியாளர்களான பண்ணை குலத்தார் வெளியேறியது வெண்டுவன் குலத்தாருக்கு துர்சம்பவங்கள் தோன்றவே, மீண்டும் பண்ணை குலத்தாரை குடியமர்த்தினர்.

அருங்கரையம்மன் பூசை முறை கூடலூர் வெண்டுவன், பண்ணை, பனையன் குலத்தார் குல தெய்வமாக அருங்கரையம்மன் கோயில் விளங்குகிறது. அமராவதி யாற்றங்கரையில், கூடலூர் கிழக்குவளவு வெண்டுவன் குலப் பெண்தான் அம்மன் வெளிப்பட காரணமாக இருந்தவர். அவளை அன்புடன் நல்ல தாய், பாப்பாத்தி என்று அழைப்பர். அம்மனை கண்டு பிடித்த கிழக்கு வளவு வெண்டுவ குலப் பெண்ணும் தெய்வமாக வணங்க படுகிறாள்.

"கூட்டாற்று  மூலையில் கோயில் கொண்ட பாப்பாத்தி "
"அருங்கரையாள் பாப்பாத்தி"
அருங்கரை நல்ல தாயே"

என்று வெண்டுவ குலக் கன்னிப்பெண் வணங்கப்படுகிறாள். அதனால் அருங்கரையம்மன் கோயிலில் கிழக்கு வளவு  வெண்டுவன் குலம் என்று அழைத்து முதல் விபூதி அவர்கட்கு வழங்கப்பட்டது. இதை மேற்க்கு வளவு வெண்டுவ குலத்தார் எதிர்த்து வழக்கு போட்டனர் (1880).

இப்போது இரு பிரிவாக பூசை நடை பெறுகிறது. திருமங்கலம் கிழக்கு வளவு வெண்டுவ குலத்தார், பிள்ளையார் பாளையம், பெரிய மதியாக்  கூடலூர் கிழக்கு வளவு வேண்டுவ குலத்தார் தனித்தனியே பூசை நடத்துகின்றனர். திருமங்கலம் மேற்கு வளவு, மதியாக் கூடலூர் மேற்கு வளவு, கூடலூர் உள்ளூர்க்  கவுண்டர் ஆகிய வெண்டுவன் குலத்தாரும், பண்ணை குலத்தாரும், பனைய குலத்தாரும் ஒன்றாக பெரிய பூசை நடத்தி வருகின்றனர்.

பழனியில் உரிமை
பழனித் திருத்தலத்தில் பெரிய நாயகியம்மன் கோயில் தேர்  திருவிழாவின் போது முதல் வடம் பிடிக்கும் உரிமை வெண்டுவன் குலத்தாருக்கு உரியது என்பது சிறப்பு மிக்க செய்தியாகும்.


குலகுரு மடங்கள்:

காணி
மடம்
ஆரியூர்
ஆரியூர்
கூடலூர்
கொல்லன்கோயில்
தோக்கவாடி
தோக்கவாடி
கூனவேலம்பட்டி
வீரகுட்டை
கூடலூர்
தாளக்கரை
மடத்தின் பெயர்களில் கிளிக் செய்து மடம் குறித்த முழு தகவல்களை பெற்று கொள்ளலாம்.

மண நாடு:

காங்கய நாட்டுக்குக்கிழக்கு, அமராவதிக்கு வடக்கு, நொய்யலுக்குத் தெற்குள்ள பகுதிகள் மணநாடாகும்.
மணநாட்டு பட்டகார பதவி வகிப்பவர் கூடலூர் (தென்னிலைவெண்டுவ கோத்திர பட்டக்காரர். பெயர் தெரியவில்லை.

மண நாடு ஊர்த்தொகை:வெண்டுவன் கூட்ட வரலாற்று புத்தகங்கள்:

கீழ்க்கைர அரைய நாட்டு கோளாரம், தாழக்கரையின் வரலாற்றுச் செய்திகள் அடங்கியது. மாரியம்மன் வழிபாடு, தாய்த்தெய்வ வழிபாட்டுத் தொடக்கம் ஆகியவை நன்கு விளக்கப்பட்டுள்ளது. விரிவான வேண்டுவண் குலச் செய்திகள் அடங்கியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தொன்மையான ஊர் கொங்கூர். இதன் பழம் பெயர் 'கொங்கு' என்பதாகும். இவ்வூர்ப் பெயரே நாட்டுப் பெயராகக் 'கொங்கு' எனப்பட்டது என்ற கருத்தும் உண்டு. பெரியாழ்வார் பாசுரத்தில் இடம்பெறும் 'கொங்கு' இவ்வூரே என ஆய்ந்து நிறுவப்பட்டுள்ளது. ராமானுசரை வரவேற்று உபசரித் கொங்குப் பிராட்டியார் இவ்வூரினரே என்று கூறப்பட்டுள்ளது. இவரது கணவர் 'கொங்கிலாச்சன்' வைணவ சிம்மாசனாதிபதிகள் 74 பேரில் ஒருவர். வைணவச் சிறப்புடைய ஊரின் பெருமை கூறப்பட்டுள்ளது.

கரூர் வட்ட ஆரியூர் செல்லாண்டியம்மன் கோயில் காணியாளர் வரலாற்றுடன் இடைப்பிச்ச நாடு, ஆரியூர் பற்றிய பல வரலாற்றுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. வெண்டுவன் குலத்தார் கம்பருக்கு அடிமைச்சாசனம் எழுதிக் கொடுத்த செய்தி இலக்கிய மேற்கோளுடன் இடம் பெற்றுள்ளது.

நன்றி:
நல்லதாய் பட்டயம்
கொங்கு வேளாளர் குல வரலாறு
விருபா

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates