Trending

Tuesday, 18 August 2015

வெள்ளியங்கிரி பயணம்

எத்தனை பேர் வெள்ளியங்கிரி மலை ஏறியிருக்கிறீர்கள்? அற்புதமான அனுபவம் அது. கொங்கு மண்டலத்தில் சிவன் வசிக்கும் கைலாசம் என்று வெள்ளியங்கிரியையே சொல்லுவார்கள். ஏழு மலைகள், வணன்களால் சூழப்பட்ட பகுதிக்குள் பயணம்.தூரம் மற்றும் குளிரின் காரணமாக சித்திரை மாதம் அதிலும் வெளிச்சம் நிறைந்த பௌர்ணமி அன்று பயணம் மேற்கொள்வர். சித்ரா பௌர்ணமி விஷேசம். போகும்போது ஒரு நாளுக்கான உணவு, டார்ச் லைட், உடை, குடை என கொஞ்சம் முன்னேற்பாட்டுடன் செல்ல வேண்டும். மூங்கில் தடி மிகப்பிரபலம், வேலைப்பாடுகளுடன் இருக்கும். வெள்ளிங்கிரி தடி என்று சொன்னால் கொங்கதேசம் முழுக்கவே தெரியும். படியேற துவங்கியதில் இருந்தே பல சாமியார்களைக் காண முடியும். துவக்கத்தில் படி வசதி இருக்கும், போகப்போக படிகள் குறைந்து கரடுமுரடான பாதைகள், பாறைகள் மீது கூட சிறிது தூரம் பயணம் கொள்ள வேண்டியிருக்கும். மூங்கில் தடி உதவும். மீண்டும் சுலபமான நடைபாதை போன்ற பகுதிகள் வரும். எப்போதும் செங்குத்தாகவே இராது. செல்லும் வழியில் இயற்கையான ஊற்றுக்கள் மூலம் வரும் நீர் மூங்கில் தப்பைகள் கொண்டு வடிந்து கொண்டிருக்கும். அந்த நீர் தேவாமிர்தம் போல இருக்கும். அருவிகள், பறவைகளின் ஒலிகள், வனச்சூழல் நம்முள் இனம்புரியாத மாதத்தை ஏற்படுத்தும். செல்லச் செல்ல கோவையின் அழகு, வனங்களின் அழகு, மனதை கொள்ளை கொள்ளும். வழியில் ஒரே ஒரு கடை மட்டுமே உண்டு. கொஞ்சம் உணவுப் பண்டங்கள் இருக்கும். மூன்றாவது நான்காவது மலை ஏறும்போதே, ஏண்டா ஏற துவங்கினோம் என்றிருக்கும். ஐந்தாவது மலையில் ஒரு சுனை உண்டு, ஐஸ் தண்ணி என்றுதான் சொல்லணும். அதில் குளித்துத் தான் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க செல்லணும். குளிராக இருந்தாலும் ஒரு முறை முழுகி எழுந்தாலே புதிய ஜென்மம் எடுத்ததுபோல, ஆத்ம சுத்தி, பாரமற்ற மனம், புத்துணர்ச்சியான உடல் என்று ஆனந்தத்தை உணர முடியும். அவ்வளவு தூரம் ஏறிய களைப்பு சிறிது கூட இராது. திருநீறால் ஆன மலை என்று ஒரு பகுதி வரும். அதன் மண் தான் வெள்ளிங்கிரி திருநீறு என்பர். அங்கிருந்து பீமன் களியுருண்டை என்ற ஒரு பெரும்பாறையை காணலாம். வனவாசத்தின்போது பாண்டவர்கள் இங்கே இருந்தார்களாம்.
அடிவாரத்தில் இருக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் 
ஊற்று


தெய்வீக சுனை 
ஏழாவது மலை நோக்கி செல்லையில் நீர் மேகங்கள் நம்மை தழுவி கடந்து செல்லும். சிறுவாணி ஆறு, அணை, வனங்கள் என்று கொள்ளை அழகு நம் கண் முன் விரிந்து நிற்கும். அங்கேயே இருந்துவிடலாமா என்றும், மீண்டும் நகர குப்பைக்குள் செல்ல வேண்டுமா என்று மனம் தவிக்கும். 

பீமன் களியுருண்டை


கடை

இறுதியாக வெள்ளியங்கிரி ஆண்டவரை மிக எளிய கோயிலில் தரிசிக்கலாம். மலையே கோயில். இயற்கையின் வடிவில் சிவனை உணரலாம்.மனம் தானே ஒடுங்கி நம் சுயத்தை இழந்து பிரம்மத்தில் கலப்போம். அங்கே இறைவனிடம் மனம் அதைக்கொடு இதைக் கொடு என்றெல்லாம் மனிதனைப் போல கேட்காது; கேட்கவே தோன்றாது. உண்மையான ஆன்மீக அனுபவம் ஏற்படும்.


வெள்ளியங்கிரி ஆண்டவர் ஆலயம் 

சென்று திரும்பும்வரை, இயற்கையையும் விலங்குகளையும் சிறிதும் பாதிக்காத வகையில் நடந்துகொள்வது மிகவும் அவசியம். மலையில் நாம் செய்யும் சிறு பிழைக்குக் கூட வனதுர்க்கை, காவல் கணங்கள் கருப்பனார் மற்றும் சிவசாப்திற்கு ஆளாக நேரிடும். எனவே பொழுதுபோக்கு என்றில்லாமல் மனதில் பக்தியோடும் சிரத்தையோடும் மட்டுமே மலையேறுதல் வேண்டும்.

ஓம் நமசிவாய

2 comments:

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates