Trending

Wednesday, 26 August 2015

ஸ்ரீ சத்யவான்-சாவித்ரி புண்ய சரித்திரம்

மகாபாரதம் – வனபர்வம் - காம்யகவனம்
ஜயத்ரதனை வென்று,அவன் பிடியிலிருந்து த்ரௌபதியை விடுவித்து அழைத்துக் கொண்டு வந்த பின்னர் தர்மராஜனாகிய யுதிஷ்டிரர், ரிஷிகளுடன் காம்மிய வனத்தில் அமர்ந்திருந்தார்.மாமுனிவர்களும் பாண்டவர்களுக்கு நேர்ந்த துன்பங்களுக்குத் தமது அனுதாபங்களை தெரிவித்து வந்தனர். அவர்களில், மார்கண்டேயரை பார்த்து யுதிஷ்டிரர் வினவினார்- "பெரியீர் நடந்தது-நடந்து கொண்டிருப்பது-நடக்க போவது, ஆகிய முக்காலமும் தாங்கள் அறிவீர்கள். தேவரிஷிகளிடையேயும் தங்கள் புகழ் பரவியுள்ளது.என் உள்ளத்தில் உள்ள ஒரு ஐயத்தைத் தங்களிடம் கேட்கிறேன்;  அதைத் தாங்கள் நீக்க வேண்டும்". 

பின் தன் மனக்கிடங்கில் உள்ளதை கூறித் தொடங்கினார், 

"துருபதராஜன் குமாரி த்ரௌபதி வேள்விக் குண்டத்தின் அக்னியிலிருந்து தோன்றியவள்; ஒரு தாயின் கருப்பையில் ஏற்படும் துன்பத்தை நுகரும் வாய்ப்பு அவளுக்கு நேரவில்லை. அவள் அதைப்பற்றி அறியாதவள். மஹாத்மாவாகிய பாண்டுவின் மருமகளாகும் பேற்றினையும் பெற்றவள். இவள் எக்காலத்திலும் பாவங்களையோ, நிந்தனைக்குரிய செயல்களையோ, செய்ததில்லை. இவள் அறத்தின் நுட்பம் அறிந்தவள்; அதனைக் பேணிக் காப்பவள் இப்படிபட்ட பெண்மணியை, ஜயத்ரதன் கவர்த்து சென்றான். இந்த அவமானத்தை நாங்கள் கண்களால் காணும்படியாயிற்று. உற்றார்- உறவினர்களைத் துறந்து, நடுக்காட்டில் வாழ்ந்து கொண்டு, பலவிதமான துன்பங்களையே நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, தாங்கள் உலகத்தில் எங்களை போன்ற அதிருஷ்டக்கட்டையான வேறு மனிதர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அல்லது அவர்களைப் பற்றி கேட்டிருக்கிறீர்களா?"

மார்கண்டேயர் யுதிஷ்டிரருக்கு தைரியமூட்டினார். 

யுதிஷ்டிரர் கேட்டார், "த்ளெபதியின் இந்த நிலமை வேறு எவருக்கு ஏற்படும். அரசை இழந்ததாலும் கூட நாங்கள் வருந்தப்படவில்லை. ஆனால் இவளைப் போன்ற ஒரு கற்புக்கரசியை, தாங்கள் இதற்கு முன்பு பார்த்ததுண்டா? கேட்டதுண்டா?" என வினவ மார்க்கண்டேயேர் ஸாவித்ரியின் புண்ணிய சரிதத்தைப் பற்றி யுதிஷ்டிரருக்குக் கூறலானார்.ஸாவித்ரியின் பிறப்பும், விவாஹமும்:
மத்ர நாட்டில் அறவழி நடப்பவராகவும், அந்தணர்களை ஆதரிப்பவராகவும் அசுவபதி எனும் பெயர் கொண்ட மன்னர் இருத்தார். அவர்,மிகவும் பரந்த மனம் படைத்தவராகவும், வாய்மையில் உறுதி கொண்டவராகவும், புலன்களை வென்றவராகவும், பெருவள்ளலாகவும், பேரறிவாளியாகவும்,நாட்டுமக்களின் அன்புக்கு உரியவராகவும், எல்லா உயிரினங்களின் நலனிலும் ஈடுபாடு கொண்டவராகவும், பொறுமை மிக்கவராகவும் விளங்கினார். கட்டுபாடுமிக்க இம்மன்னரின் அறம் தவறாத மூத்த மனைவி கருவுற்றாள்; உரிய காலத்தில் தாமரை இதழ்போன்ற கண்கள் உள்ள ஒருபெண் மகவு பிறந்தது.

அரசர் மனம் மகிழ்ந்தார். அந்த பெண்ணுக்கு ஜாதகர்மா முதலிய எல்லாச் சம்பிரதாயங்களையும் செய்தார். வேள்விக் குண்டத்தில் ஸாவித்ரி மந்திரத்தைக் கொண்டு அவி அளித்தபோது, ஸாவித்ரிதேவி திருப்தி அடைந்து அம்மகவை அளித்திருந்தாள். ஆகவே, அந்தணர்களும், அரசரும் அக்குழந்தைக்கு ‘ஸாவித்ரி' என்று பெயர் வைத்தார்கள். இலட்சுமியே வடிவெடுத்து வந்தாற்போல், அந்தப் பெண் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தாள். உரிய காலத்தில் அவள் மங்கைப் பருவத்தை அடைந்தாள். 

தன் மகள் மங்கையாகி விட்டதைக் கண்டு அசுவபதி மன்னர் கவலையில் ஆழ்ந்தார். அவளைப் பெண் கேட்டு எந்த ஆண்மகனும் முன் வராததைக் கண்டு ஸாவித்ரியிடம் அவர் கூறினார். “மகளே! நீ மணப்பருவத்தை அடைந்து விட்டாய், உன்னை மணந்து கொள்ள இதுவரையில் எந்த ஆண்மகனும் முன் வரவில்லை. ஆகவே, உனக்குத் தகுதியான ஓர் ஆண்மகனை நீயே தேடிக்கொள். திருமணத் தகுதியை அடைந்த பின்னரும் கன்னிகாதானம் செய்யாத தந்தை நிந்தனை மற்றும் பாவத்திற்கு உரியவர்; என்பது அறநூல்களின் ஆணை. அதனால் விரைவிலேயே ஒரு மணமகனைத் தேடிக் கொள். அவ்வாறு நீ செய்தால்தான் தர்மதேவதைகளின் பார்வையில் நான் குற்றவாளியாக மாட்டேன்."

மகளிடம் இவ்வாறு உரைத்த மன்னர் தனது முதிய அமைச்சர்களிடம் நீங்கள் வாகனங்களில் ஏறி ஸாவித்ரியுடன் செல்லுங்கள் என ஆணையிட்டார். தவச்செல்வியான ஸாவித்ரி சிறிது தயக்கத்திற்குபின் தந்தையின் ஆணையை ஏற்றுக் கொண்டாள், அவரது பாதங்களைப் பணிந்து தங்கமயமான தேரில் ஏறி முதிய அமைச்சர்களுடன் மணாளனைத் தேடுவதற்காகப் புறப்பட்டுச் சென்றாள்.

ராஜரிஷிகளின் அழகிய தவச்சாலைகளுக்குச் சென்றாள். மரியாதைக்குரிய அம்முதியவர்களின் பாதங்களைப் பணிந்தாள். பின்னர், ஒவ்வொன்றாக மற்றைய தவச்சாலைகளுக்கும் பயணம் மேற்கொண்டாள். இவ்விதம் அவள் எல்லாப் புண்ணியஸ்தலங்களிலும், மகாஉத்தமமான அந்தணர்களுக்குத் தானங்கள் பலசெய்து பலநாடுகளிலும் சுற்றிக் கொண்டிருந்தாள். 

ஒருநாள் மத்ரநாட்டு மன்னராகிய அசுவதி தனது கொலு மண்டபத்தில் தேவரிஷி நாரதருடன் பேசிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் அமைச்சர்கள் புடைசூழ எல்லாப் புண்ணியத்தலங்களையும், சுற்றிமுடித்த ஸாவித்ரி தன் தந்தையின் மாளிகையை அடைந்தாள். அங்கு நாரதரோடு தனது தந்தை அமர்ந்திருப்பதைக் கண்டு, இருவரது பாதங்களையும் பணிந்தாள். 

அவளைக் கண்டதும் நாரதர் கேட்டார், "மன்னா உங்களுடைய மகள் எங்கு சென்றிருந்தாள்? இப்போது எங்கிருந்து வருகிறாள்? இவள் மங்கைப் பருவத்தை அடைந்துவிட்டாள்? அப்படியும் இவளுக்கு ஏன் இன்னும் விவாஹம் ஆகவில்லை?” என வினவினார். 

அசுவபதி பதிலுரைத்தார் “இவளை, அந்த வேலையாகத்தான் அனுப்பியிருந்தேன். அவள் இன்று திரும்பி வந்திருக்கிறாள் தாங்கள் எந்த மணாளனைத் தேர்ந்தெடுத்திருக்கிறாய் என்று இவளையே கேளுங்கள். எல்லாவற்றையும் விவரமாகக் கூறு" என்று தந்தை உரைத்ததும் அவருடைய சொற்களுக்கு மதிப்பளித்து ஸாவித்ரி சொன்னாள். 

சால்வதேசம் – மன்னர் த்யுமத்ஸேனர்:
"சால்வ நாட்டில் த்யுமத்ஸேனர் என்ற பெயர் கொண்ட கீர்த்தி வாய்ந்த, அறம் தவறாத மன்னர் இருந்தார். பின்னர் அவர் பார்வையிழந்துவிட்டார். இவ்வாறாக அவர் கண்களை இழந்ததாலும், அவரது மகன் சிறுவனாக இருந்ததாலும், அவருடைய பழைய எதிரியான மத்சய நாட்டு மன்னன் அந்த சமயத்தைப் பயன்படுத்தி அவருடைய அரசைப் பறித்துக் கொண்டான். அதனால் அம்மன்னர் குழந்தையாயிருந்த மகனுடனும் மனைவியுடனும் காட்டுக்குச் சென்றார். அங்கு கடுமையான விரதங்களை அனுஷ்டித்து தவவாழ்வினை மேற்கொண்டார். தற்போது வனத்திலிருக்கும் அவரது குமாரரான ஸத்யவான் எனக்குத் தகுந்தவர். நான் என் உள்ளத்தில் அவரையே கணவராக வரித்துவிட்டேன்" என்று ஸாவித்ரி கூறினாள். 

இதைக் கேட்டு நாரதர் மிகவும் வருத்தப்பட்டு "அடடா ஸத்யவானைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் அவன் நற்குணங்கள் நிரம்பியவன் என்று எண்ணித் தன் கணவராக நிச்சயித்து விட்டதில் ஸாவித்ரி பெருந்தவறிழைத்து விட்டாள். இந்தப்பையனின் தகப்பனார் ஸத்யநெறி பேசுகிறார்; தாயும் அப்படியே. அதனால் தான் அந்தணர்கள் அவனுக்கு ஸத்யவான் என்று பெயரிட்டார்கள். இப்படியான ஸத்யவான் பொலிவும் அறிவும் பொறுமையும் வீரசூரமும் கொண்டு விளங்குகிறான். த்யுமத்ஸேனருடைய அந்த வீரமைந்தன் சூரியனைப்போல் ஒளிபொருந்தியவன். தேவகுருவுக்கு நிகரான அறிவு படைத்தவன்" இவ்வாறு நாரதர் பலவிதமாக ஸத்யவானது பண்புகளை விளக்கிக் கூறினார். 

அசுவபதி கூறினார் "எல்லா நற்குணங்களும் நிரம்பியவன் என்று தாங்களே சொல்கிறிர்கள். பெறவு ஏன் அவனிடம் ஏதேனும் குறைகள் இருக்குமானால் இப்போதே எனக்குத் தெரிவியுங்கள்" என்றார். 

நாரதர் கூறினார் "அவனிடம் ஒரே குறைதான் இருக்கிறது. அதனால் அவனுடைய நற்குணங்களெல்லாம் அமுங்கிப் போகின்றன. எவ்வளவு முயன்றாலும் அந்தக்குறையை நீக்கிவிட முடியாது. அதைத்தவிர அவனிடம் வேறு குறை எதுவுமில்லை" என்றார்.

மன்னர் அது என்னவென்று கேட்க, நாரதர் "ஸத்யவான் இன்றிலிருந்து ஓர் ஆண்டுக்குப் பிறகு ஆயுள் முடிந்து அவன் உடலைவிட்டு விடுவான்" என்பதே அந்தக்குறை" 

அப்போது மன்னர் ஸாவித்ரியிடம் கூறினார், "ஸாவித்ரி, இங்கு வா! பார் நீ மறுபடி சென்று வேறொரு வரனைத் தேடக் கிளம்பு! தேவரிஷி நாரதர் ஸத்யவான் குறைந்த ஆயுள் உள்ளவன் என்று கூறுகிறார். அவன் ஒரு வருஷத்துக்கு பின்னால் உயிரைவிட்டு விடுவானாம்" 

ஸாவித்ரி உரைத்தாள் "தந்தையே மரம் கல் ஆகியவற்றின் துண்டுகள் ஒருதடவைதான் அவற்றிலிருந்து தனியே போகின்றன. கன்னிகாதானம் ஒரு தடவைதான் செய்யப்படுகிறது. நான் கொடுத்து விட்டேன் என்ற சங்கல்பமும் ஒரு தடவைதான் கூறப்படுகிறது. இந்தமூன்று விஷயங்களுமே ஒரு தடவை மட்டுமே நிகழ்கின்றன. எவரை என் கணவராக ஒரு தடவை நான் என் மனத்தால் நிச்சயித்து விட்டேனோ, அவர் நீண்ட ஆயுள் பெற்றிருந்தாலும், குறைந்த ஆயுள் பெற்றிருந்தாலும், குணங்கள் பொருந்தியவரோ, அல்லது அற்றவரோ, அவரே என் கணவர் ஆவார். இனிநான் வேறு எந்த ஆடவனையும் கணவனாக ஏற்க உடன்படமாட்டேன். எந்த ஒரு செயலும் முதலில் மனத்தால் நிச்சயிக்கப்படுகிறது. பின்னர் வாய்மொழியால் கூறப்படுகிறது. அதற்கு பிறகு செயலாற்றுவதன் மூலம் நிறைவு பெறுகிறது. ஆகவே என்னைப் பொறுத்தமட்டில் என் மனமே சான்று என்றாள்" அந்த மனோபவி.

பிறகு நாரதரே குருவாக இருந்து கன்னிகாதான விஸியத்தை சிரமேற் கொண்டு ஏற்பாட்டை தொடங்கினார்கள். காட்டில் த்யுமத்ஸேனரை சந்தித்து மேலான விபரங்களைக் கூறி நாரதரும் அசுவபதியும் கன்னிகாதானம் செய்துமுடித்தார்கள். விவாஹம் முடிந்தபின்னர் ஸாவித்ரி நாடு இழந்த தன் மாமனார்- மாமியார் கணவர் ஆகியோர் காட்டில் தபஸ்வாழ்க்கை வாழும் தான் மட்டும் தனது பெற்றொர் கொடுத்த சீதனத்துடன் சுகபோக வாழ்க்கை வாழ்வதா? என நினைத்து ஸாவித்ரி எல்லா நகைகளையும் கழற்றி வைத்தாள். அதை ஒரு துணியில் மூட்டையாக முடிந்துவைத்து, மரவுரியையும் காவியும் அணிந்து மாமனார்-மாமியர் கணவன் ஆகியோருக்கு அணுசரணையாக பணிவிடை செய்துவந்தாள். அவளுடைய பணிவிடை, குணம், வினயம், அடக்கம், எல்லாருக்கும் இசைந்த வண்ணம் காரியம் செய்தல், ஆகியவற்றால் அங்கிருந்தோர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இவ்வாறாக பதிஸேவா, பெற்றோர் போன்ற மாமனார்-மாமியாருக்கு பணிவிடை என தவம் இயற்றிக் கொண்டிருந்த நிலையில் காலம் கழிந்து கொண்டிருந்தது.

ஸாவித்திரியின் முயற்சியால் ஸத்யவான் உயிர் பிழைத்தல்:
பலநாட்கள் சென்றன, ஸத்யவான் மரணமடைய வேண்டிய அந்த நேரமும் இறுதியாக வந்தது. ஸாவித்ரி ஒவ்வொரு நாளாக எண்ணிக் கொண்டே வந்தாள். அவள் உள்ளத்தில் நாரதரின் சொற்கள் நிலைத்திருந்தன. அன்றைய தினத்திலிருந்து நாலாவது நாளில் அவன் இறக்கவேண்டும், என்பது தெரிந்தவுடன் அவள் மூன்று நாள் நோன்பினை மேற்கொண்டு இரவு பகலாக அசையாமல் உட்கார்ந்திருந்தாள். நாளைய தினம் அன்புக் கணவரின் உயிர் இறுதியாத்திரையைத் தொடங்கப் போகிறது. இந்தக் கவலையுடன் உட்கார்ந்திருந்தபடியே ஸாவித்ரி இரவைக் கழித்தாள். மறுநாள் அந்த நாள் இன்று தான் என்று எண்ணி சூரியதேவனின் கிரணகணங்கள் பரவும்போதே தன்னுடையே தினசரிக் கடமைகளை முடித்துவிட்டு சுடர்விடும் அக்னியில் ஆஹுதிகள் அளித்தாள். பின்னர் அந்தணர் பெரியோர் வயோதிக சான்றோர் மாமனார் மாமியாரை வரிசையாக வணங்கி புலன்களை அடக்கி கைகூப்பி நின்றாள். அந்தத் தவச்சாலையில் வசித்துக் கொண்டிருந்த எல்லாத் தவசிகளும் கைம்மை அடையாத் தன்மையைக் குறிப்பிடும் நல்லாசிகள் அளீத்தார்கள். ஸாவித்ரியும் தவசிகளின் அந்தச்சொற்களைக் கேட்டு தியானயோகத்தில் நிலைபெற்று அவ்விதமே ஆகுக என்று எண்ணியபடி ஏற்றுக் கொண்டாள். இந்த நேரத்தில் ஸத்யவான் தோளில் கோடாரியை வைத்துக் கொண்டு காட்டிலிருந்து சுள்ளிகளை கொண்டு வருவதற்குத் தயாரானான். அப்போது ஸாவித்ரி "தாங்கள் தனியாக போகவேண்டாம் நானும் தங்களுடன் வருகிறேன்" என்றாள்.

ஸத்யவான் கூறினான் "அன்பே! இதற்கு முன் ஒருபொழுதும் நீ காட்டுக்குள் சென்றதில்லை. காட்டுக்குச் செல்லும் பாதை மிகவும் கடினமானது. நீ காட்டுக்குள் சென்றதில்லை. காட்டுக்குச் செல்லும் பாதை மிகவும் கடினமானது. உண்ணாநோன்பு இருந்ததால், நீ மிகவும் பலம் குறைந்திருக்கிறாய், அப்படியிருக்கையில், இந்த மோசமான பாதையில் எவ்வாறு கால்நடையாய் வருவாய்?" 

ஸாவித்ரி கூறினாள். "உபவாஸம் இருந்ததால் என்னிடம் எவ்விதத் தொய்வோ, களைப்போ இல்லை; செல்வதற்கு மனம் மிகவும் துடிப்புடன் இருக்கிறது. ஆகவே, தாங்கள் தடுக்காதீர்கள்." ஸத்யவான் கூறினான்- "காட்டுக்குப் போவதில் உனக்கு ஆர்வமிருந்தால், உனக்கு எது நல்லதாகப் படுகிறதோ அதைச் செய்வதற்கு நான் தயார். ஆனால், தாய்-தந்தையரின் அனுமதியையும் பெற்றுக் கொள்"

ஸாவித்ரி தன்னுடைய மாமனார்- மாமியாரை வணங்கிச் சொன்னாள் "என்னுடைய யஜமானர் பழம் முதலியன கொண்டு வருவதற்குக் காட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார். நீங்கள் இருவரும் எனக்கு அனுமதி அளிப்பீர்களேயானால் இன்று நானும் அவருடன் செல்ல விரும்புகிறேன்" 

இதைக் கேட்டதும் த்யுமத்ஸேனர் கூறினார் "தகப்பனாரால் கன்னிகாதானம் செய்யப்பட்டு நமது மருமகளாக இந்த ஆசிரமத்தில் வசிக்க ஆரம்பித்த நாளிலிருந்து எந்த ஒரு விஸியத்துக்காகவும் ஸாவித்ரி என்னை வேண்டிக் கேட்டுக் கொண்டதாக நினைவே இல்லை. ஆகவே இன்றைக்கு இவளது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். நல்லது குழந்தாய்! நீ சென்று வா போகிற வழியில் ஸத்யவானை கவனித்துக்கொள்!" இவ்விதமாகத் தனது மாமனார் மாமியாரின் அனுமதியைப் பெற்று புகழ்ச்சிக்குரிய ஸாவித்ரி தனது பதிதேவருடன் புறப்பட்டுச் சென்றாள் மேற்பார்வைக்கு அவள் சிரித்துக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றினாலும் அவளுடைய உள்ளத்தில் துக்கத்தின் ஜ்வாலை கனன்று கொண்டிருந்தது. வீர ஸத்யவான் முதலில் தன் மனைவியோடு கூடப்பழங்களைப் பறித்து ஒரு கூடையை நிரப்பினான்; பிறகு அவன் விறகு வெட்டத் தொடங்கினான். மரத்தை வெட்டிக் கொண்டேயிருந்ததால் கடினமாக வேலை காரணமாக அவனுக்கு வியர்வை தோன்றியது அதனால் தலைவலியும் ஏற்பட்டது. இங்ஙனம் வலி எற்பட்டதும் அவன் ஸாவித்ரியிடம் சென்று கூறினான், "அன்பே, இன்றைக்கு விறகு வெட்டும் சிரமத்தால் என்னுடைய தலையில் வலி ஆரம்பித்திருக்கிறது. எல்லா அங்கங்களிலும் இருதயத்திலும் சூடு உண்டாகியிருக்கிறது. எனக்கு உடம்பு சரியில்லை என்று படுகிறது. என் தலையில் யாரோ ஈட்டியினால் துளைப்பது போல் வலி ஏற்படுகிறது. மங்களமானவே! இப்போது நான் உறங்க விரும்புகிறேன். ஆனால் உட்காருவதற்குக்கூட என்னிடம் சக்தியில்லை" 

இதைக் கேட்டதும் ஸாவித்ரி தன்கணவனை நெருங்கி வந்தாள். அவன் தலையை தன் மடியில் வைத்துக் கொண்டு தரையில் அமர்ந்தாள். நாரதருடைய சொற்களை நினைவுகூர்ந்து, அந்த நாழிகை விநாடி நாள் குறித்து சிந்திக்கத் தொடங்கினாள். இவ்வளவில் அங்கே அவளுக்கு ஓர் ஆண் தென்பட்டான் அவன் செந்நிற ஆடை அணிருந்தான். தலையில் மகுடம் இருந்தது மிகவும் ஒளியுடன் பளிச்சிட்டதால் சூரியனே உருவெடுத்து வந்தாற்போல் தோன்றியது. அவனுடைய சரீரம் கருமையாகவும் அழகாகவும் இருந்தது கண்கள் செக்கச்செவேலேன்று இருந்தன. கையில் பாசக்கயிறு இருந்தது. பார்ப்பதற்கு மிகவும் அச்சம் ஊட்டுபவனாக இருந்தான். அவன் ஸத்யவான் அருகில் வந்து நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனைக் கண்டதுமே ஸாவித்ரி தன் கணவரின் தலையை மெதுவாகத் தரையில் வைத்துவிட்டு விரைவாக எழுந்து நின்றாள். 

அவளுடைய நெஞ்சம் படபடக்க ஆரம்பித்தது. அவள் மிகவும் துயரமடைந்து கைகளைக் கூப்பிக் கொண்டு கூறினாள் "தாங்கள் ஏதோ ஒரு தேவதை என்று எனக்குத் தோன்றுகிறது ஏனென்றால் தங்களுடைய சரீரம் மனிதர்களுடையதைப் போல் இல்லை. தாங்கள் விரும்பினால் தாங்கள் யார் என்பதையும் என்ன செய்ய விரும்புகீறிர்கள் என்பதையும் கூறுங்கள்" யமராஜன் கூறினார் "ஸாவித்ரி நீ கற்புடையவள்; உண்டி சுருங்கல் முதலான் தவம் இயற்றுபவள்; அதனால் நான் உன்னுடன் பேசுகிறேன்; உன் கண்களுக்கு புலப்படுகிறேன்; நீ என்னை யமராஜன் என்று அறிவாய். உன்னுடைய கணவன் அரசகுமாரனான ஸத்யவானின் ஆயுள் முடிந்துவிட்டது. இப்பொழுது இவனை பாசக்கயிற்றால் கட்டி எடுத்துச் செல்லப் போகிறேன். இதைத்தான் நான்செய்ய விரும்புகிறேன்" 

ஸாவித்ரி கூறினாள் "பகவான் மனிதர்களை எடுத்துச் செல்வதற்கு தங்களுடைய தூதர்கள் வருவது வழக்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் இங்கு தாங்களே நேரில் எழுந்தருளியுள்ளீர்களே?"

யமராஜன் கூறினார் "ஸத்யவான் அறநெறியாளன் இனிய வடிவினன் குணக்கடல் இவன் உயிரை கவர்ந்து வர என் தூதர்களுக்கு அருகதையில்லை. அதனால் நானே நேரில் வந்திருக்கிறேன்"இதைத் தொடர்ந்து யமராஜன் பலவந்தமாக ஸத்யவானின் உடம்பிலிருந்து கட்டைவிரல் அறவுள்ள ஜீவனை பாஸத்தால் பிணைத்து வெளியே எடுத்தார் அதை எடுத்துக் கொண்டு அவர் தெற்குத் திசையை நோக்கிச் செல்லத் தொடங்கினார். உடனே துக்கத்தால் பீடிக்கப்பட்ட ஸாவித்ரியும் யமராஜனுக்கு பின்னால் சென்றாள். இதைக் கண்டு யமராஜன் கூறினார், "ஸாவித்ரி! நீ திரும்பிச் செல். இவனுக்கு உடலிலிருந்து உயிர் நீங்கியபின் செய்யவேண்டிய இறுதிச் சடங்குகளைச் செய். நீ பதிஸேவை என்னும் கடனிலிருந்து விடுபட்டுவிட்டாய். கணவனைத் தொடர்ந்து நீ எவ்வளவு தூரம் வரலாமோ அவ்வளவு தொலைவு வந்துவிட்டாய்"

ஸாவித்ரி கூறினாள், "என் கணவருடைய உயிர் எங்கு எடுத்துச் செல்லப்படுமோ, அல்லது அவர் தானாகவே எங்கு செல்கிறாரோ அங்கு நானும் போகத்தான் வேண்டும். இதுவே ஸனாதன தர்மம். தவம், குருபக்தி, பதிபக்தி, நோன்பு இருப்பது அத்துடன் தங்களது அருள் காரணமாக என்னுடைய பிரவேஸம் எங்கும் தடை செய்யப்பட முடியாதது"

யமராஜன் கூறினார், "ஸாவித்ரி! உன்னுடைய குரல் பேச்சு மெய்ப்பாடு மற்றும் தர்க்கபூர்வமான சொற்களைக் கேட்டு நான் மிகவும் மகிழ்கிறேன். ஸத்யவானின் உயிர் நீங்கலாக வேறு எந்த வரம் வேண்டுமானாலும் கேள் உனக்கு எல்லாவிதமான வரங்களையும் கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்". ஸாவித்ரி சொன்னாள், "என்னுடைய மாமனார் அரசை இழந்து காட்டில் வஸித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய கண்களும் போய்விட்டன. தங்கள் அருளால் அவருக்குப் பார்வை கிடைக்க வேண்டும். வலிமையுள்ளவராகவும் அக்னியையும் சூரியனையும் போல ஒளிமிக்கவராகவும் அவர் திகழவேண்டும்". 

யமராஜன் கூறினார், "நற்குணம் கொண்டவளே! நான் உனக்கு இந்த வரத்தை அளிக்கிறேன். நீ சொன்னபடியே நடக்கும். வழிநடையால் நீ தளர்ந்து விட்டாய் என்று தோன்றுகிறது. இப்போதே நீ திரும்பிச் செல். இல்லையென்றால் நீ மேலும் களைத்துவிடுவாய்". 

ஸாவித்ரி சொன்னாள், "கணவருக்கு அருகில் இருக்கும்போது எனக்கு எப்படித் தளர்ச்சி ஏற்படும்? உயிரினும் உயர்ந்த என்கணவர் எங்கு இருக்கிறாரோ அதுவே எனக்கும் நிரந்தரமான உறைவிடம் தேவேஸ்வரனே! தங்கள் என் கணவரை எந்த இடத்திற்கு எடுத்துச் செல்கீறிர்களோ, அங்கே எனக்கும் இடம் கிடைக்க வேண்டும். இதைத் தவிர இன்னொரு விஸியம் கேளுங்கள், பெரியோர்களை ஒருமுறை சந்திப்பது கூட மிகவும் விரும்பத் தக்கது; அதைக்காட்டிலும் சிறந்தது அவர்களுடன் நட்புக் கொள்வது. நல்லோர் இணக்கம் ஒருபோதும் பயன் தராமல் போகாது. ஆகவே எப்போது மேன்மக்களுடனயே இருக்க வேண்டும்" 

யமராஜன் கூறினார், "ஸாவித்ரி! நீ சொல்லிய நன்மொழிகள் என் மனத்திற்கு மிகவும் உகந்தவையாக உள்ளன. அவை அறிவாளிகளின் அறிவைக்கூட வளரச்செய்யும். ஆகவே ஸத்யவானின் உயிர் நீங்கலாக, உனக்கு வேறொரு வரத்தையும் அளிக்கிறேன், கேள். 

ஸாவித்ரி கூறினாள் "அறிவு படைத்த என் மாமனாரிடமிருந்து முன்பு பறித்து செல்லப்பட்ட அரசு தானாகவே அவருக்குக் கிடைக்க வேண்டும். அவர் தன் அறக்கடமைகளை விட்டுவிடக்கூடாது. இதுவே நான் தங்களிடம் வேண்டும் இரண்டாவது வரம். யமராஜன் கூறினார் "மன்னர் த்யுமத்ஸேனர் விரைவிலேயே தானாகவே அரசைப் பெறுவார். தன்னுடைய கடமைகளையும் விட்டுவிட மாட்டார். சரி, உன்னுடைய ஆசை நிறைவேறி விட்டது. நீ திரும்பிச் செல். வீணாக உன் உடல் நலத்தை கெடுத்துக் கொள்ளாதே. ஸாவித்ரி கூறினாள், "தேவனே! தாங்கள் எல்லா மக்களையும் நியமத்துடன் அடக்கி வைத்துள்ளீர்கள். அவர்களை நியமனம் செய்து கட்டுப்பாட்டுக்குள் வைத்து அவர்கள் விரும்பும் பயனையும் அளிக்கீறிர்கள். அதனால்தான் தாங்கள் யமன் கட்டுப்படுத்துபவர் என்ற பெயரால் புகழ் பெற்றுள்ளீர்கள். ஆகவே, நான் சொல்வதைக் கேளுங்கள். மனம், மொழி, செயல்களால் அனைத்து உயிர்களிடத்தும் வஞ்சகம் இல்லாமை அன்பு செய்தல், தானம் கொடுத்தல் இது மேலோர்களின் தொன்மையான அறம். அநேகமாக எல்லா மக்களும் இப்படித்தான் இருக்கிறார்கள். எல்லா மனிதர்களும் தம்மால் முடிந்த அளவுக்கு இனிமையாக பழகுகிறார்கள். ஆனால் மேலோர்கள் தம்மிடம் வரும் எதிரியிடம் கூட கருணை காட்டுகிறார்கள்" 

யமராஜன் புகன்றார் "மங்களமானவளே! தாகம் கொண்டவன் தண்ணீர் கிடைத்தால் எப்படி மகிழ்ச்சியடைவானோ அப்படியே உன் பேச்சு மகிழ்ச்சியைக் கொடுப்பதாக இருக்கிறது. ஸத்யவானின் உயிர் நீங்கலாக உனக்கு விருப்பமான இன்னொரு வரத்தைப் பெற்றுக் கொள். ஸாவித்ரி கூறினாள் "என்னுடைய தந்தை அசுவபதி மன்னருக்குப் புதல்வர்கள் இல்லை. அவருடைய குலம் ஓங்கச் செய்யும் முறைப்படி நூறு பிள்ளைகள் உண்டாக வேண்டும். இதனை எனது மூன்றாவது வரமாகக் கேட்கிறேன்" 

யமராஜன் புகன்றார், "அரசகுமாரியே! உனது தந்தையின் குலத்தை வளரச் செய்யும்வண்ணம் ஒளி பொருத்திய நூறு மக்கள் உண்டாவார்கள். சரி உன்னுடைய விருப்பம் நிறைவெறியது அல்லவா? நீ திரும்பிப் போ. அதிக தூரம் வந்துவிட்டாய். ஸாவித்ரி கூறினாள், "கணவரின் அருகில் இருப்பதால் இது ஒன்றும் தொலைவாகவே படவில்லை. என் மனம் தான் வெகுதூரத்திற்கு ஓடிக் கொண்டிருக்கிறது. நான் இப்போது கூறப் போவதை தயவு செய்து கேட்டருள வேண்டும். தாங்கள் விவஸ்வான் எனப்படும் சூரியதேவரின் குமாரராதலால் சான்றோர்கள் தங்களை வைவஸ்வதன் என்று அழைக்கிறார்கள். தாங்கள் வேண்டியவர் வேண்டாதவர் என்ற வேற்றுமையின்றி, அனைவருக்கும் ஒரே மாதிரியாக நீதி வழங்குகிறிர்கள். அதனாலேயே அனைத்து மக்களும் அறத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். எனவே தாங்கள் தர்மராஜன் என்று அழைக்கப்படுகிறிர்கள். மேலும் மனுஷ்யன் மஹான்களிடம் அதிக நம்பிக்கை வைக்கும் அளவிக்குத் தன் மேலும் நம்பிக்கை வைப்பதில்லை. ஆகவே அனைவரிலும் மஹான்களிடமே அதிக அன்பு செலுத்த விரும்புகிறான். எல்லா ஜீவன்களும் நல்இதயம் காரணமாகவே நம்பிக்கை உண்டாகிறது. மஹாத்மாக்களிடம் அதிகமான நற்பண்புகள் இருப்பதாலேயே அனைத்து மக்களும் மஹாத்மாக்களிடம் விஸேஸமான நம்பிக்கை வைத்துள்ளார்கள்" 

யமராஜன் கூறினார், "பெண்ணே, நீ கூறிய விஷயங்களை உன்னைத் தவிர வேறு எவரிடமிருந்தும் நான் கேட்டதில்லை. அதனால் நான் மிகவும் மகிழ்கிறேன் ஸத்யவானின் உயிர் நீங்கலாக வேறு எதையேனும் நாலாவது வரமாகக் கேள், இங்கிருந்து திரும்பி போ". ஸாவித்ரி கூறினாள், "எனக்கு ஸத்யவான் மூலமாக வளர்க்கிறவர்களும் பெருவலிமை பெற்றவர்களும் வீரம் நிரம்பியவர்களுமான சொந்தப் பிள்ளைகள் நூறுபேர் உண்டாக வேண்டும். இதுவே எனது நாலாவது வரம்" 

யமராஜன் கூறினார், "பெண்ணே! உனக்கு உடல்வலிமையும் பேராற்றலும் நிறைந்த நூறு புதல்வர்கள் உண்டாவார்கள். உனக்கு மிகவும் ஆனந்தம் உண்டாகும். சரி, இப்போது நீ திரும்பிப் போ" 

ஸாவித்ரி கூறினாள், "மஹான்களின் சிந்தனை செயல்பாடுகள் எப்போதும் அறத்திலேயே நிலைபெற்றுள்ளதால் அவர்கள் ஒருபோதும் துன்பமோ துயரமோ கொள்வதில்லை. நல்லோர்களுடன் நல்லோர் சந்திப்பு வீண் போவதில்லை மஹான்களிடமிருந்து மஹான்களுக்கு ஒருபோதும் அச்சம் ஏற்படுவதில்லை. நல்லோர்கள் தமது வாய்மையின் ஆற்றலால் சூரியனைக்கூடத் தம் அருகே அழைக்க வல்லவர் ஆவார்கள். தமது தவத்தின் சக்தியாலே மண்ணுலகைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். மஹான்கள் சென்றுவிட்ட வரப்போகிறவைகளின் நிலைக்களன் மஹான்களோடு கூடியிருக்கும் மஹான்கள் துயரப்படுவதில்லை. நித்யமான இந்த நல்ல பழக்க வழக்கங்கள் மஹான்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு புரிந்து கொண்டு மஹான்கள் பரோபகாரம் செய்கிறார்கள். அதற்கு மாறாக எந்த உதவியையும் எதிர்ப்பார்பதில்லை. 

யமராஜன் கூறினார், "கற்புச்செல்வி! பொருள் பொதிந்ததும் உள்ளம் கவர்வதும் அறம் சார்ந்ததுமான மொழிகளை நீ கூறி வருகிறாயே அதைக் கேட்கக் கேட்க உன்னிடம் எனக்குள்ள ஆர்வம் மேன்மேலும் பெருகுகிறது. இணையில்லாத ஒரு வரத்தை, இப்போது என்னிடம் கேட்பாயாக".

ஸாவித்ரி கூறினாள், "மதிப்பிற்குரியவரே! எனக்குப் பிள்ளைகள் பிறப்பார்கள் என்று வரம் கொடுத்திருக்கிறீர்களே, அது கணவனோடு சேர்ந்து குடும்பம் நடத்தாவிட்டால் எப்படி சாத்தியமாகும்? ஆதலால் இப்போது நான் கேட்கும் வரம் இதுதான். இவர் ஸத்யவான் உயிர் பிழைக்கட்டும். அவ்விதம் நேர்ந்தால்தான் தங்கள் வாக்கு சத்தியமாகும். ஏனென்றால் கணவர் இல்லாமல் நான் இப்போது மரணத்தின் வாயில் வீழ்ந்து கிடக்கிறேன். கணவர் இல்லாமல் எனக்கு எப்படி செளக்கியம் கிடைக்கும் நான் அதற்கு ஆசைப்படவில்லை. கணவர் இல்லாமல் நான் தேவலோகத்தையும் விரும்பவில்லை. கணவர் இல்லாமல் பெரும் செல்வம் கிடைத்தாலும் அது எனக்குத் தேவையில்லை. கணவர் இல்லாமல் நான் உயிர் வாழவும் விரும்பவில்லை. தாங்கள் தான் எனக்கு நூறு புதல்வர்கள் உண்டாகும் வரத்தை அளித்துள்ளீர்கள். அப்படியும் என் கணவரை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறீர்கள். ஆகவே இப்போது நான் கேட்கும் இவர் ஸத்யவான் உயிர் பிழைக்கட்டும் என்ற வரத்தைக் கொடுத்தால் தங்கள் வாக்கும் சத்தியமாகும்" 

இதைக்கேட்டு சூரிய குமாரரான யமன் மிகவும் மகிழ்ந்து "அப்படியே ஆகுக!" என்று சொல்லியபடி ஸத்யவானை பாசப் பிணைப்பிலிருந்து விடுவித்தார். பின்னர் அவர் ஸாவித்ரியிடம் கூறினார் "குலம் விளங்க வந்த நல்லாளே !எடுத்துக் கொள் உன் கணவனை நான் விட்டுவிடுகிறேன். இனிமேல் இவன் எப்போதுமே நோயற்றவனாக இருப்பான். நீ இவனை வீட்டுக்கு அழைத்துச் செல். இவனுடைய எல்லா ஆசையும் நிறைவேறும் இவன் உன்னோடு நானூறு ஆண்டுகள் வாழ்க்கை நடத்துவான். அறநூல்களில் விதிக்கப்பட்டுள்ள வேள்விகளைச் செய்து உலகத்தில் புகழ் பெறுவான். இவன் மூலமாக உன் வயிற்றில் நூறு பிள்ளைகள் பிறப்பார்கள்" இவ்விதம் ஸாவித்ரிக்கு வரம் கொடுத்து அவளைத் திருப்பி அனுப்பிவிட்டுப் பேராற்றல் கொண்ட தர்மராஜன் தன் யமலோகத்துக்குச் சென்றார்.யமராஜன் சென்றதும் தன் கணவரை அடைந்த ஸாவித்ரி ஸத்யவானின் உயிரற்ற உடல் கிடந்த இடத்துக்கு வந்தாள் கணவர் தரையில் இருப்பதைக் கண்டு அவரருகில் அமர்ந்து அவருடைய தலையை எடுத்துத் தன் மடிமீது வைத்துக் கொண்டாள். சிறிது நேரத்திற்குப்பின் ஸத்யவானின் உடலில் உயிர்த்துடிப்பு ஏற்பட்டது. பல நாட்கள் வெளியூரில் தங்கிவிட்டு அப்போதுதான் திரும்பி வந்தவனைப்போல, அன்போடு ஸாவித்ரியைப் பார்த்துப் பார்த்து பேசத் தொடங்கினான். அவன் கூறினான், "நான் ரொம்ப நேரமாகத் தூங்கி  கொண்டிருந்திருக்கிறேனோ? என்னை ஏன் எழுப்பவில்லை. என்னைப் பிடித்து இழுத்துக் கொண்டு போன அந்தக் கறுப்பு மனிதன் யார்?" 

ஸாவித்ரி கூறினாள், "ஆண்களிற் சிறந்தவரே! தாங்கள் வெகுநேரம் என் மடியில் தூங்கியிருக்கிறீர்கள். அந்தக் கறுப்புதான் மக்களுக்குத் தண்டனை வழக்குகிற தேவசிரேஷ்டராகிய பகவான் யமன் அவர் தன் உலகுக்குப் போய்விட்டார். பாருங்கள் சூரியன் மறைந்துவிட்டது. இருள் கனத்துக் கொண்டிருக்கிறது. அதனால் என்னென்ன நடந்ததோ அனைத்தையும் நாளை சொல்கிறேன். இப்போது நீங்கள் எழுந்து தாய்தந்தையரைப் பார்கப்ப புறப்படுங்கள். 

ஸத்யவான் கூறினான் "அது சரி. கிளம்பு. இங்கு பார் இப்போது எனக்குத் தலவலியும் இல்லை; உடலின் எப்பகுதியிலும் வேதனையும் இல்லை. என்னுடைய உடம்பு முழுவதும் நன்றாக ஆனது போல் இருக்கிறது. உன்னுடைய உதவியால் என் தாய்தந்தையரை விரைவிலேயே பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். அன்பே, நான் என்றைக்குமே தாமதமாக ஆசிரமத்துக்குப் போனதில்லை. சூரியன் மறைவதற்கு முன்பிருந்தே நான் வெளியே செல்வதை அம்மா தடுத்துவிடுவார். பகல் வேளையிலும் கூட ஆசிரமத்தைவிட்டு நான் வெளியே போனால் என் தாய் தந்தையர் கவலையில் மூழ்கிவிடுவார்கள். நெஞ்சம் துடிக்க ஆசிரமவாஸிகளை உடன் அழைத்துக் கொண்டு என்னைத் தேடி வந்துவிடுவார்கள். அதனாலே மங்களமானவளே, பார்வையற்ற என் தந்தை அவருடைய பணிவிடையில் ஆழ்ந்துள்ள பலம் குறைந்த சரீரம் படைத்து என்னுடைய தாய் குறித்து நான் கவலைப்படும் அளவுக்கு என் உடலைப் பற்றிக்கூடக்க கவலைப்படவில்லை. மதிப்பிற்குரியவர்களும், மிக்க பவித்ரமானவர்களுமான என்னுடைய தாய்தந்தை என் பொருட்டு இன்று எவ்வளவு தவித்துப் போயிருப்பார்கள்? என் தாய்தந்தை உயிருடன் உள்ளவரை நானும் உயிரை வைத்துக் கொண்டிருப்பேன்". 

கணவரின் சொற்களைக் கேட்டபடியே ஸாவித்ரி எழுந்து நின்றாள். ஸத்யவானைத் தூக்கி நிறுத்தி தனது இடது தோளில் அவனது கையை வைத்து தனது வலதுகையால் அவனுடைய இடுப்பை அணைத்தவாறு அவனோடு நடந்தாள். ஸத்யவான் கூறினான், "அச்சம் கொண்டவளே, நான் இந்தப் பாதையில் தான் தினமும் போய் வருவது வழக்கமாதலால் இந்த வழியை நன்றாக அறிவேன். மரங்களுக்கிடையில் இப்போது நிலவொளியும் வீசுகிறது. காலையில் நாம் எந்த வழியாகப் பழங்கள் பறித்துக் கொண்டு வந்தோமோ அதுவும் வந்துவிட்டது. இப்படி இந்த வழியிலேயே போகலாம். வேறு கவலை எதுவும் வேண்டாம். நானும் இப்போது நன்றாகிவிட்டேன். பலமும் வந்துவிட்டது. தாய் தந்தையை உடனே பார்க வேண்டும் போலிருக்கிறது" இப்படி ஸாவித்ரியீடம் சொல்லிக் கொண்டே அவன் ஆசிரமத்தை நோக்கி விரைவாகச் செல்லத்தொடங்கினான்

த்யுமத்ஸேனரின் மனக்கவலை:

த்யுமத்ஸேனருக்கு பார்வை வந்துவிட்டது. அவரால் எல்லாப் பொருட்களையும் பார்கக் முடிந்தது. அருமை மகன் வராததால் அவருக்கு மிகவும் கவலை ஏற்பட்டது. அரசி சைப்யாவுடன் அந்தச் தவச்சாலை முழுவதும் சுற்றித்தேடினார். அங்கு குடில்களில் இருந்த எல்லா அந்தணப் பெரியோர்களும் வந்து அவர்களுக்குத் தைரியம் கூறி அவரது ஆசிரமத்தில் விட்டுச் சென்றனர். அங்கே மிகவும் முதிய அந்தணர்கள் பண்டைக் காலத்திய மன்னர்களின் பலவகைப்பட்ட கதைகளைக் கூறி தைரியம் அளித்தார்கள். அவர்களில் ஸுவர்ணன் என்ற பெயருடைய அந்தணர் இருந்தார். அவர் உண்மையே பேசுபவார். அவர் கூறினார், ஸத்யவானின் மனைவி ஸாவித்ரி தவம், புலனடக்கம், நல்லொழுக்கம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பவள். அதனால், அவள் நிச்சியமாக உயிரோடிருப்பான். இன்னோர் அந்தணர் கெளதமர் கூறினார்- "அங்கங்களோடு வேதங்களை நான் பயின்றிருக்கிறேன்; கடுமையான தவங்களும் செய்திருக்கிறேன்; அத்துடன், வாலிபப் பருவத்தில் பிரம்மசரியம் காத்திருக்கிறேன்; குருதேவரையும், அக்னி தேவரையும் திருப்தி செய்வித்திருக்கிறேன். இத்தகைய தவத்தின் சக்தியால், மற்றவர்களின் மனத்தில் உள்ள விஸியங்களை நான் அறிந்து கொள்ள முடியும். அதனால், என் பேச்சை சத்தியமாகக் கொள்ளுங்கள். ஸத்யவான் நிச்சயம் உயிரோடிருக்கிறான்." தொடர்ந்து மற்ற முனிவர்களும் கூறினர்- "ஸத்யவானின் மனைவி ஸாவித்ரியிடம் கைம்மை எய்தாத் தன்மையைக் குறிக்கும் எல்லா மங்கள லட்சணங்களும் விளங்குகின்றன; அதனால் ஸத்யவான் உயிரோடிருக்கிறான்." தால்ப்யர் கூறினார்- "பாருங்கள்! உங்களுக்குப் பார்வை கிடைத்துவிட்டது; நோன்பு காத்த ஸாவித்ரி அதனை முடித்துவிட்டதற்கு அறிகுறியான பாரணை செய்யாமலே ஸத்யவானுடன் சென்றிருக்கிறாள். அதனால் அவன் கட்டாயம் உயிருடன் இருக்கத்தான் வேண்டும்.

ஸாவித்ரி-ஸத்யவான் ஆசிரமம் அடைதல்

ஸத்யம் பேசுகிற முனிவர்கள் த்யுமத்ஸேனருக்கு இவ்வாறு கூறியதும் அவர்களுடைய உரைகளை ஏற்று அவர் உறுதி பெற்றார். சிறிது நேரத்துக்குள்ளாகவே ஸத்யவானுடன் கூட ஸாவித்ரி வந்து சேர்ந்தாள். அவர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் ஆசிரமத்துக்குள் நுழைந்தார்கள். அவர்களைக் கண்டதும் அந்தணர்கள் கூறினார்கள், "ஓ மன்னரே! உங்களுக்குப் பையன் கிடைத்துவிட்டான். கண்களும் கிடைத்துவிட்டன". ஸத்யவானிடம், "நீ மனைவியோடு போனாய்; ஏன் விரைவில் திரும்பி வரவில்லை; ஏன் இவ்வளவு தாமதம்; அப்படி என்ன இடைஞ்சல் வந்துவிட்டது; அரசகுமாரனே இன்றைய தினம் நீ எங்களையும் உன் பெற்றோரையும் மிகவும் கவலையில் ஆழ்த்திவிட்டாய்; என்ன காரணம் என்றே எங்களுக்குத் தெரியவில்லை. அனைத்தையும் விபரமாகச் சொல்" என்று வினவினார்கள். 

ஸத்யவான் கூறினான், "தந்தையின் அனுமதியைப் பெற்று நான் ஸாவித்ரியுடன் சென்றேன். காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருக்கும்போது தலைவலி உண்டாயிற்று. அந்த தேரத்தில் அந்த வேதனையால் நான் வெகு நேரம் தூங்கி விட்டேன் போலிருக்கிறது. அவ்வளவு நேரம் அதற்குமுன் நான் தூங்கியதே இல்லை. இப்போது உங்களுக்கெல்லாம் எந்தக் கவலையும் வேண்டாம். இதன் காரணமாகத்தான் நாங்கள் வருவதில் தாமதமாகிவிட்டது; வேறோன்றுமில்லை".

கெளதமர் புகன்றார், "ஸத்யவான், உன்னுடைய தந்தை த்யுமத்ஸேனருக்கு திடீரென்று இன்று பார்வை கிடைத்து விட்டது. இவற்றுக்கான உண்மையான காரணத்தை நீ அறியாய். ஸாவித்ரியால் கூற முடியும். ஸாவித்ரி! நாங்கள் உன்னை உன்னுடைய தனிப்பண்புகள் காரணமாக, ஸாட்ஸாத் ஸாவித்ரி பிரம்மமாணி பிரம்மசக்திக்கு இணையாகவே கருதுகிறோம். உனக்கு, கடந்தகால- எதிர்கால விஸியங்களைப் பற்றிய ஞானம் உண்டு. நீ இதற்கான காரணத்தை நிச்ஸியமாக அறிவாய். எங்களுக்கு அதைக் கேட்கும் விருப்பம் இருக்கிறது. ரகசியம் இல்லை என்றால், எங்களுக்கும் கொஞ்சம் சொல்" 

ஸாவித்ரி கூறினாள், "நீங்க என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அது மெய்தான். தங்களுடைய கருத்துக்கள் பொய்யாகப் போகமாட்டா. என்னைப் பற்றிய விஸியமும் தங்களிடமிருந்து ஒளிக்கப்படவில்லை. அதனால் எது உண்மையோ அதனைச் சொல்கிறேன்; செவிசாய்த்தருளுங்கள். ஒரு குறிப்பிட்ட நாளில் என் கணவரின் மரணம் நேரும் என்று நாரத முனிவர் என்னிடம் கூறியிருந்தார். இன்றைய தினம்தான் அந்த நாள். அதனால்தான் இவரைத் தனியாகக் காட்டுக்குச் செல்ல விடவில்லை. இவர் தூங்கிக் கொண்டிருந்தபோது யமராஜனே நேரில் வந்து இவரைக் கட்டி எடுத்துக் கொண்டு தெற்கு திசையை நோக்கிச் சென்றார். நான் மெய் நிறைந்த மொழிகளால், அந்த தேவசிரேஷ்டரைத் துதித்தேன். அதனால் மனம் மகிழ்ந்த அவர் எனக்கு ஐந்து வரங்கள் கொடுத்தார். அவற்றைக் கேளுங்க, மாமனாருக்குக் கண்பார்வையும் அரசும் கிடைக்கவேண்டும் என்று இரண்டு வரங்கள், என் தந்தைக்கு நூறு பிள்ளைகள்  பிறக்க வேண்டும் எனக்கு நூறு பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்று இரண்டு வரங்கள், ஐந்தாவது வரத்தினால் என் கணவர் ஸ்த்யவானுக்கு நானூறு ஆண்டு ஆயுள் கிடைத்திருக்கிறது. கணவர் உயிர் வாழ வேண்டும் என்பதற்காகவே நான் இந்த நோன்பை அனுஷ்டித்தேன் விளக்கமான காரணத்தை இப்போது தங்களிடம் தெரிவித்துவிட்டேன். 

ரிஷிகள் கூறினார்கள், "நங்காய் நீ நல்லொழுக்கமும், விரதங்களில், பற்றும் புனிதமான பழக்கங்களும், உள்ளவள். நீ நற்குடியில் பிறந்துள்ளாய். மன்னர் த்யுமத்ஸேனரின் துன்புற்ற குடும்பம் இருள்சூழ்ந்த பள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருந்த வேளையில், நீ அதைக் காப்பாற்றிவிட்டாய்". 

இவ்வாறு யுதிஷ்டிரனிடம் மாமுனிவர் மார்க்கண்டேயர்,  கூறலுற்றார். "அரசே, அங்கு கூடியிருந்த முனிவர்கள்  எல்லோரும் பெண்குலத்தின் மணியான ஸாவித்ரியை இவ்வாறெல்லாம் பாராட்டிவிட்டு அரசர் அரசகுமாரர் அனுமதியைப் பெற்று உற்சாகம் நிரம்பிய மனத்துடன் தத்தம் குடில்களுக்குச் சென்றார்கள்". 

த்யுமத்ஸேனரின் அரசைப் பெறுதல்:
மறுநாள், சால்வ நாட்டின் அரசுப் பணியாளர்கள் எல்லோரும் வந்து "அங்கே மன்னனாக இருத்தவனை அவனுடைய அமைச்சர்கள் கொன்றுவிட்டார்கள். அவனுடைய உதவியாளர்கள் உறவினர்களையும் உயிருடன் விட்டுவைக்கவில்லை" என்று த்யுமதஸேனரிடம் கூறினார்கள். "விரோதிகளின் படை முழுவதும் ஓடிப்போய்விட்டது. எல்லாக் குடிமக்களும் இந்த விஸியத்தில் ஒரு மனதாக இருக்கிறார்கள். அவருக்குப் பார்வை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அவரே நமது மன்னர். அரசே! இவ்வாறு உறுதி ஏற்பட்ட பின்னரே எங்களை இங்கே அனுப்பியிருக்கிறார்கள். நாங்கள் தங்களுக்காக ரதங்களையும், நால்வகைப் படைகளையும் கொண்டு வந்திருக்கிறோம். தங்களுக்கு மங்களம் உண்டாகுக. நகரத்தில் தங்களது வெற்றியும், வருகையும் அறிவிக்கப்பட்டுவிட்டது. தாங்கள், தங்கள் முன்னோர்களின் அரியணையில் நெடுங்காலம் நிலைபெறுவீர்களாக." 

பார்வையைப் பெற்று, நலமான உடலுடன் விளங்கும் த்யுமத்ஸேனரைக் கண்டு, அவர்களனைவரது கண்களும் வியப்பால் மலர்ந்தன; எல்லோரும் அவருக்குத் தலைவணங்கி மரியாதை செலுத்தினார்கள். அரசர், ஆசிமரத்திலுள்ள வயோதிக அந்தணர்களை நமஸ்கரித்து, அவர்களால உரியவண்ணனம் பதில் மரியாதை செய்யப் பெற்றுத் தனது தலைநகரை நோக்கிச் செல்லலானார். அங்கு போய்ச் சேர்ந்ததும, புரோகிதர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் அவருக்கு முடிசூட்டினார்கள்; ஸத்யவானை இளவரசராக்கினார்கள். பின்னர், வெகுகாலம் சென்று, போரில் புறமுதுகு காட்டாத வீரசூர்களான நூறு பிள்ளைகள் ஸாவித்ரியிடம் உண்டானார்கள். இவ்விதமே மத்ர நாட்டு மன்னரான அசுவபதியின் அரசி மாளவியின் வயிற்றில் நூறு புதல்வர்கள் தோன்றினார்கள். இவ்வாறாக, தன்னுடைய தாய்-தந்தையர், மாமனார்-மாமியார், கணவர் ஆகியோரின் குலத்தை இக்கட்டிலிருந்து மீட்டுவிட்டாள். 

(குலம்காக்க வேண்டிய கொங்கு பெண்களுக்கு இக்கதைகள் பாடமாக புகட்டபட வேண்டும்.)

இதுபோலவே, ஸாவித்ரியைப் போன்று நல்லொழுக்கம, உற்றோரால் விரும்பத்தக்க இயல்பு, மங்களப் பண்புகள் படைத்துள்ள த்ரெளபதி உங்கள் அனைவரையும் கைதுக்கி விடுவாள் என மார்கண்டேயேர் ஸத்யவான் ஸாவித்ரியின் புண்ணியஸரிதத்தை யுதிஷ்டிரரான தர்மரிடம் சொல்லிமுடித்தார். இவ்வாறு மார்க்கண்டேயரால் அறிவுறுத்தப்பட்ட மாமன்னர் யுதிஷ்டிரர் சோக- தாபங்களிலிருந்து விடுபட்டு காம்யகவனத்தில் வசிக்கத் தொடங்கினார். மிகப் பவித்ரமான ஸாவித்ரியின் வரலாற்றை மிகவும் ஆர்வத்துடன் கேட்பவர், தமது எல்லா விருப்பங்களும் நிறைவேறப் பெற்று மகிழ்வர்; ஒருபோதும் துயருர மாட்டார்.

-குழாயர் கூட்ட நஞ்சப்ப காமிண்டர் 

சிற்சில வேறுபாடுகளுடன் சத்யவான் சாவித்திரி புண்ய வரலாறு பாரத தேசத்தின் பல பகுதிகளிலும் பாராயணம் செய்யப்படுகிறது. தமிழில் வந்த சத்யவான் சாவித்திரி படத்தின் லிங்க் கீழே.காரடையான் நோன்பு
மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்தி, குடும்ப சௌபாக்கியம், சர்வமங்களம் முதலியவற்றுக்கு காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும். காரடையான் நோன்பின்போது சத்யவான் சாவித்திரி புண்யசரிதம் படிப்பது மிக விசேஷம்.

விரதமுறை: விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளை காமாட்சியாக அல்லது சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும். அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். மாசிக்கயிறு பாசி படியும் என்று, பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக் கொள்வது விசேஷமானதாகக் கருதப்படுகிறது.


No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates