Trending

Wednesday, 14 October 2015

கோவை பயணம்-சிறுகதை

நம்மை யாரென்று தெரியாதவர்கள், நம்மை மனதார ஆத்மார்த்தமாக வாழ்த்தும்போது அதன் இன்பமும் ஆற்றலும் தனிதான்.  இப்படியான வாழ்த்துக்கள் சிரமமான சூழல்களில் ஆழ்மனத்தின் ஆற்றலுக்கு புத்துணர்வூட்டி நமக்கு சக்தியளிக்கும். அது பல காலத்துக்கு நமக்கு ஆத்மபலத்தை தரும்.

அதுவே வயதில் மூத்தவர், வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் வாழ்த்தும்போது இரட்டிப்பாகிறது. சிறு சிறு உதவிகளே இந்த பெருஞ்செல்வத்தை ஈட்டித் தருகின்றன. நெடும்பயண பேருந்தில் நம் இருக்கையை விட்டுக் கொடுப்பது, பாரங்களை தூக்க இறக்க உதவுவது, நீரோ, உணவோ கொடுப்பது, கடைகளுக்கு சென்று ஏதேனும் பொருட்களோ, மருந்தோ வாங்கி தருதல், மருத்துவரை காண அழைத்து செல்லல், திருட்டு-ஏமாற்று போன்றவற்றில் அவர்களை காப்பது, அவர்கள் நடந்து செல்லுகையில் லிப்ட் கொடுப்பது போன்ற சிறு உதவிகளே. எனக்கு அப்படியான ஒரு அனுபவம்.. நெடுநாள் கழித்தும் இந்த சம்பவம் நினைவிருக்க இரண்டு காரணங்கள் உண்டு.. என்னவென்று இறுதியில் உங்களுக்கே தெரியும்..2007 ல் நான் பணிபுரிந்த நிறுவனத்தில் மாதத்தின் முதல் சனிக்கிழமை கோவையில் மீட்டிங் நடக்கும். ஈரோடு சார்பில் அம்மாதம் நான் மட்டுமே செல்லவேண்டியதால், ஈரோட்டில் இருந்து கோவை பேருந்தில் காலை ஏழு மணிக்கு ஏறி அமர்ந்திருந்தேன். பேருந்தின் முன்படிக்கு அல்லையிலேயே இருக்கும் மூணாள் சீட். அப்போது பேருந்தை நோக்கி பெருங்கூட்டு உடம்புடன் ஒரு முதிய பெண்மணி நடக்கமுடியாமல் நடந்து வந்தார். இரண்டு பேர் அகலம் இருப்பார். கொசுவம் வைத்து கட்டிய புடவை, பஞ்சு போல நரைத்த தலை, மஞ்சள் பூசிய வட்ட முகம், நெற்றியில் ஒர்ருவா காசளவு போட்டு, கொண்டையில் கதம்ப பூ. முழங்கை வரை பட்டை பட்டையா வரிவரியாக  பச்சை குத்திஇருந்தார். இடுப்பில் சுருக்குப்பை, கையில் ஏராளமான காய்கறி துணி பைகள். படியின் அருகே பைகளை வைத்துவிட்டு, ஒரு பையை மட்டும் தூக்கிக் கொண்டு பேருந்தில் ஏறினார். ஒவ்வொரு பையாக எடுத்து வைக்க எண்ணம் போல. பாவம் ஏறவே சிரமம்.உள்ளே அவர் ஏறியதும், பின் இருக்கைகளில் 'களுக்' என்று சில சிரிப்பு சத்தங்கள். பத்து நொடிகள் நின்று கொண்டிருப்பதை கண்டு திரும்பி பார்த்தேன், பெரும்பாலான சீட்டுகள் நிறைந்திருந்தன. அவருக்கு இரண்டு பேர் அமரும் அளவு  சீட் தேவை. இரண்டு எப்ர் மட்டும் அமர்ந்திருந்த சீட்களில் யாரும் இடம் கொடுப்பதாக தெரியவில்லை. என் அம்மாயி முகவெட்டை ஒத்திருந்த அவர்களைப் பார்த்ததும் உதவ தோணியது. என் அருகே அமர்ந்திருந்த சேலத்து சக ஊழியரை இரண்டாள் இருக்கையில் அமர சொல்லி கேட்டுக் கொண்டேன். அவர் நகர்ந்து கொண்டார், ஏனெனில் நான் வேறு சீட்டுக்கு போனால் அந்த ஆயா பக்கத்தில் அமர வேண்டுமே என்று அந்த மைனருக்கு கவலை. பிறகு அந்த ஆயாவை என் இருக்கைக்கு அழைத்தேன்.

அவர் பையை வாங்கி வைத்துவிட்டு, நானே கீழே இறங்கிப்போய் அவர்கள் பைகள் எல்லாத்தையும் ஒவ்வொன்றாக எடுத்து உள்ளே கொண்டு வந்து வைத்தேன்.  "அப்புடியே இங்க வச்சறாயா" "பாத்து மெதுவா.." என்று அவ்வப்போது கோளாறு சொன்னார்.

ஒருவழியாக சீட்டில் உக்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு, தனது பையில் இருந்த சுடுதண்ணீர் எடுத்து குடித்துவிட்டு பேசினார். சிநேகமாக சிரித்தார். வெற்றிலை புகையிலை தொடர்ச்சியாக போடுவது பல் காரையில் நன்றாக தெரிந்தது.

கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு வந்தோம். வண்டி குமலன்குட்டை, திண்டல் என்று தாண்டி போய்க்கொண்டிருந்தது. திண்டல் முருகனுக்கு கும்பிடு போட்டு இந்தப்புறம் நம்ம சொந்தங்கள் கட்டிய வெள்ளாளர் கல்லூரியை கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு நோட்டம் விடாட்டி கோவை செல்லும் பயணம் முழுசாகாது."நானும் எங்கூட்டுகாரரும் மார்க்கட்டுல இரவது வருசுத்திக்கு மேல யாவாரம் பன்னுரம்பொன்னு. ரண்டு புள்ளீவோ. ரண்டையும் கட்டி குடுத்தாச்சு. ஒன்னு அம்ரிக்காவுக்கு போயிட்டுது; அவங்கூட்டுகாரருக்கு சாப்டுவேர் வேல. ரண்டாவது புள்ள கோயமுத்தூருல. எங்கூரு இவத்த தான் சோலார்க்கு அந்தாண்ட லக்காவரம்"

"நாங் திருவகழிமங்களம்ங்க ஆயா, உங்கூருக்கு அக்கர"

"ஓ.. சேரி.. சேரி கண்ணு.. அந்த காலத்துல எங்க மாமனார் சாராயம் குடிக்க உங்கூரு ஆத்தோரம் பரசதொரைக்கு போவாரு; அங்க கவண்டமூடு நெறைய சிநேகிதம்"

நாமக்கல் மாவட்டத்தில் அந்த காலத்தில் சாராயம், ரவுடித்தனம் அனைத்துக்கும் எங்கூர் ரொம்ப பேமஸ். டாஸ்மாக் வரும்வரை கலவர ஏரியா என்று எங்க ஊருக்கு அரசு கள்ளுக்கடையோ, சாராய கடையோ, ஓய்ன் சாப்போ வரவேயில்லை. எங்கூருக்கு நல்ல அறிமுகம் னு அதுக்குமேல அதைப் பத்தி பேசல. பின்னர் தொடர்ந்து என் அறிமுகம் கோவை செல்லும் நோக்கம் னு அறிமுகப் படலம் முடிந்தது.

அதற்குள் ஏ.ஈ.டி. தாண்டி கொங்கு காலேஜ் தாண்டி பெருந்துறை வந்துவிட்டது. ஜன்னலோரத்தில் வெள்ரிக்கா யாவாரம் அந்த காலை நேரத்திலும் பறந்தது. நெடுந்தொலைவு பயணம் செல்வோருக்கு அதுதான் பிரேக்பாஸ்ட். இரண்டு கீத்து வாங்கினேன். சுருக்குப் பையை விரிக்க விடாமல் தடுத்துவிட்டேன். பெருந்துறை பஸ் ஸ்டாண்டு முனியப்பனுக்கு ஒரு கும்பிடு."இப்ப ரண்டாவது மவ ஊட்டுக்குத்தான் போறங்கண்ணு. மவ மருமகன் ரண்டு பேருமே காலேஜீல லச்சர் வேலை. மவ பி.எஸ்.ஜி காலேஜ்ல வேல செய்யறா. பேர எட்டாவது படிக்கறான். போனமாசம் பரிச்சீல ரேங்கு கம்மியா போச்சாம். அவுங்கம்மா அவனோட பேச மாண்டீங்கரா னு நேத்து அழுதான். அதான் நேர்ல போயிட்டு வரலாம் னு போறாங்கன்னு" என்று சிரித்தார்.

"காயி, பலம், தேங்கா முட்டாயி எல்லாம் மவ ஊட்டுக்குத்தாங்கண்ணு. இந்தா நீ ரண்டு திண்ணு" என்று கொடுத்த பழத்தை உறுதியாக மறுத்துவிட்டேன்.

"நாங்க மொதலியாரூடுதாங்கண்ணு. சாப்படலாம் சாப்புடு" என்றார். நான் "அதுக்கில்லீங்காயா வெள்ரிக்காயே போதும்" என்று கொஞ்சம் தோரணையாக சொல்லிவிட்டேன். அந்த ஆயா அதோடு நிற்காமல், "நீ கன்ன கூட்டந்தான சாமி?" என்றார்.

எனக்கு பயங்கர ஆச்சரியம். ஒரே வட்டாரத்தில் வாழும் இரு வேறு சமூகங்கள் மாற்று சமூகத்தவரை அவர்கள் பேச்சு, உடலமைப்பு, குறியீடுகள் மூலம் சுலபமாக கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால் அடுத்த சமூகத்தின் உட்பிரிவை சரியா அனுமானிக்க எவ்வளவு நுட்பமான அறிவு தேவைப்படும்.

"எப்டீங்காயா கண்டுவுடுச்சீங்க"

"இரவது வருசமா மார்கட்டுல யாவாரம் பண்ணரன். அர மணிநேரம் பேசிகிட்டு வர்ரதுல தெரியாதா பொண்ணு" என்றார்.

"எங்கம்மோட்டு பக்கமெல்லாம் கன்னகூட்டத்துவீய தான் முச்சூடும் இருப்பாங்க கண்ணு. தண்ணி சேந்த போனாலுஞ்செரி கோயளுக்கு போனாலுஞ்செரி.. எப்பீமு ஒரு தோரண.. வாயத் தொறந்தா இன்னாரு னு இல்லாத தமாசு பலம.. எசிலி போட்டுக்கிட்டு ஆ ஊ ணா கட்டு புடிச்சிக்குவாங்க.. மரா நாள் சேந்ததுக்குவாங்க.. எதாவுது வேணுமுன்னு கேட்டா தொண்டகுளில இருக்கறத கூட கக்கி குடுத்துருவாங்க, அவ்வளவு பாசம்.. ஒலவா, ஏத்தமா, தாம்படிக்றதா, வேலீனாலும் வேல, அவீளாட்ட வேல ஆரும் செய்ய முடியாது.. கல்யாணமூச்சு எங்கூருக்கு போறப்பீலாம் தேங்காயி, பூ, பழம், காயி.. ஆளும் பாலும் னு.. ரண்டு பைய நப்பி தான் போவ உடுவாங்க. வார்த்தைக்கு வார்த்த, 'எங்கு ரச்சா, நம்பு ரச்சா ஊட்டுக்காறாரு' னு அப்பிடி பிரீமா இருப்பாங்க" என்றார்.

"அண்ணமார் கூத்துலீங்கோட, சின்னண்ணன் பெரியண்ணன் வேட்டைக்கு போன நேரம் பாத்து குப்பாயினு எங்க சனத்து பிள்ளைய வேட்டுவமூடு தூக்கிவோயிருவாங்க. அந்த பிள்ளைய காப்பாத்தி சின்னண்ணன் கூட்டியாந்தும் எங்கூட்டு சனம் இன்னொருத்தன் தூக்கிவோன பிள்ள எங்குளுக்கு வேண்டாமின்னு ஒதுக்கீட்டாங்க; அப்பவும் தங்காயிதான் தங்கோடையே இருக்கட்டும்னு காப்பாத்தி வச்சிருந்தது. அதுனாலையே ஏங்க சனம அண்ணமார்சாமிய கொலதெய்வமாட்ட கும்புடுவாங்க"

வண்டி விஜயமங்கலம் தாண்டியிருந்தது. அப்படியே அசந்து கொஞ்சம் தூங்க ஆரம்பித்தார். அவினாசியப்பருக்கு ஒரு கும்பிடு. அவினாசி, கருமத்தம்பட்டி  தாண்டி சின்னியம்பாளையம் வரவே அவரை எழுப்பிவிட்டேன்."நல்லவுடிக்கி எழுப்பியுட்ட போ, ரண்டு டாப்பிங்குல எறங்கோனும்" என்றார்.

"உங்க மக வீட்டுக்கு போன் போட்டு சொல்லீருங்க ஆயா. இவ்வளவு பையையும் தூக்கிட்டா போவீங்க? அவிய வந்து கூட்டிவோவாங்கல்ல" என்று போனை நீட்டினேன் (அப்போது இன்றளவு செல் பொது பயன்பாட்டுக்கு வரவில்லை). சுருக்குப்பையில் இருந்து ஒரு காகிதத்தில் எழுதியிருந்த நம்பரை கொடுத்து போட சொன்னார். பேசினார்.

"இப்ப என்னாயா சம்பாரிக்கர நீயி" என்றார். சொன்னேன். "மனசார சொல்றேன்.. நீ வேணா பாரு நாஞ்சொல்றது கண்டுசுனா நடக்கும்.. இப்பவுட இன்னம் பத்து மடங்கு நீ சம்பாரிப்ப. கைகால் சொகத்தோட தீர்க்காயிசா பிள்ள குட்டி காடு தோட்டம்னு சொத்து சொகத்தொட நல்லா பொழப்ப" என்றார்.

"லக்காவரம் வந்தா நால்றோட்டு பக்கம் மேக்கத்து ரச்சாயா ஊடு எதுன்னு கேட்டீனா ஊட்டுக்கே கொண்டாந்து உட்டுருவாங்க சாமி. கண்டுசுனா ஊட்டுக்கு வரோணும்" என்று சொன்னார்.

கோவை மெடிக்கல் கல்லூரி நிறுத்தம் வந்ததும், அவர் பைகளை இறக்கி வைத்துவிட்டு அவர் இறங்க கைகொடுத்து இறக்கிவிட்டுவிட்டு பஸ்சில் ஏறிக்கொண்டேன். "நா போயிட்டு வாரங்கன்னு" என்று கையசைத்தார்..

அகல்விளக்கு-சிறுகதை
ஊருக்கு ஒருவர் - சிறுகதை
அங்கப்பன் அருக்காணி கதைப்பாடல்

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates