Trending

Sunday, 13 March 2016

கோவை செழியன்

அதிமுக வில் எம்ஜிஆர் முதலாளி என்று அழைக்கும் அளவு மரியாதையும் தனிப்பட்ட அன்பையும் பெற்றவர் கோவை செழியன். நீங்கள் யாரை கைகாட்டுகிறீர்களோ அவரே சட்டமன்ற உறுப்பினர், அவரே எம்.பி, என்ற நிலையில் தேர்தல் நிர்வாக பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

பதவிக்காகவோ, செல்வாக்குக்காகவோ யார் காலிலும் விழுந்ததில்லை. அப்படிப்பட்டவர், அதிமுக தான் வெல்ல போகிறது என்று தெரிந்தும், தேர்தல் சமயத்தில் பச்சை குத்தும் விவகாரம் காரணமாக எம்ஜிஆருடன் சண்டை போட்டுவிட்டு ஒதுங்கிவிட்டார். தேர்தல் வெற்றிக்கு பின் எம்ஜிஆரே அவர் வீட்டுக்கு தேடி வந்து அவரை மீண்டும் அழைத்துக் கொண்டார். தன்மானம் சுயமரியாதை என்றால் என்ன என்பதை அமரர் கோவை செழியனைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.பல வருடங்களுக்கு முன்னால், சேலம் ஜங்க்ஷன் பயணிகள் அறையில் அமர்ந்திருந்தேன். கோவை எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக காத்திருந்ததாக நினைவு.
திமுதிமுவென்று உள்ளே நுழைந்த ஏழெட்டு பேர், அங்கிருந்தவர்களை எழுப்பி வெளியே போக சொன்னார்கள். கேட்டதற்கு, 'தலைவர்' வருகிறார் என்றார்கள்.
நான் மட்டும் எழுந்திருக்க மறுத்தேன். என்னுடன் காரசாரமாக அந்த கூட்டம் பேச துவங்கையில், அந்த 'தலைவர்' உள்ளே நுழைந்தார்.

' இங்கு என்ன பிரச்சினை..?'

அவரிடம் பிரச்சினையை சொன்னேன்.

சடாரென்று என் கையை பற்றிய அவர், தன்னுடைய ஆட்களின் செயலுக்காக மன்னிப்பை வேண்டினார். வெளியே அனுப்ப பட்டிருந்தவர்களை உடனடியாக அழைத்து வந்து உட்கார சொன்னவர், அவர்களிடமும் மன்னிப்பை வேண்டினார். பிறரிடம் தாழ்ந்து, தன்னுடைய சுய மரியாதையை உயர்த்தி கொண்ட அந்த மனிதரின் பெயர் கோவை செழியன்.

கவுண்டர் சமுதாய இட ஒதுக்கீடு போராட்டங்கள் துளிர் விட்ட சமயம். அமரர் கோவை செழியன் அப்போது காங்கயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வாக இருந்தார். பிற்படுத்தப்பட்டோர் மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. அப்போது எந்தெந்த சாதிக்கு எவ்வளவு பதவிகள் ஒதுக்கப்பட்டது என்று பெருமையோடு சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

கோவை செழியன் அவர்கள் எழுந்து, "கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் என்ன விதத்தில் முன்னேறி விட்டார்கள்? எங்க சாதிக்கு ஒரு பதவிகூட இல்லாதது முறையா?" என்று தனது சொந்த கட்சி முதல்வரைப் பார்த்து சட்டசபையில் அனைவர் முன்னிலையில் பொட்டில் அடித்தது போலக் கேட்டார்.

நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி என்ற மூத்த உறுப்பினர் "கட்சி கூட்டத்தில் பேச வேண்டியதை இங்கே ஏன் பேசுகிறீர்கள்?" என்று கேட்டார்.

"உன் சாதிக்கு எல்லா சலுகையும் கிடைச்சிருச்சு னு நீ பேசுற.. இதுபற்றி பேச கட்சி கூட்டத்தை கூட்டினார்களா?? உருது பேசும் முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு கொடுத்த முதல்வர் எங்கள் சாதியை ஏன் மறந்தார்?" என்று கொட்டு வைத்தார்.


பின்னாளில் காங்கயத்தில் கட்சி விரோதமாக, இட ஒதுக்கீட்டை ஆதரித்து முதல்வரை விமர்சித்து பேசினார் என்று கட்சியில் இருந்தும் விலக்கப்பட்டார்!
இறுதியாக இட ஒதுக்கீடு அறிவிக்கும் இறுதிகட்ட காலத்தில் மூத்த உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரன் கவுண்டர்களுக்கு இடஒதுக்கீடு வந்தால் அவரது சமூகத்தின் பங்கு குறையும் என்று ஆட்சேபித்தார். அந்த இடத்திலும் சுள்ளென்று பதிலடி கொடுத்தார். "உங்களுக்கு வேண்டுமானால் இன்னும் அதிகம் பெற்றுக் கொள்ளுங்கள், எங்கள் சமூக உரிமையை கேட்பதை தடுக்க வேண்டாம்" என்று கூறிவிட்டார்.

பல சூழல்களில் தனது பேர் வெளியில் வராவிட்டாலும் பரவாயில்லை, கவுண்டர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கவேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்று அதில் வழுவாமல் இருந்தார்.கட்சி தலைமை மட்டுமில்லை, கவுண்டர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்த்த தன் சொந்த சாதி பரம்பரை நிலசுவாந்தார்கள், பணக்காரர்கள், சமூக தலைவர்கள் என்று யாரையும் எதிர்க்க தயங்கியதில்லை.

தனது கட்சி, தனது அரசியல் எதிர்காலம், தனது தனிமனித உறவுகள் என்று பாராமல் கவுண்டர் சமுதாயத்துக்கு ஒரு தீங்கு என்றால் வெகுண்டெழுந்து யாரையும் எதிர்க்கும் துணிச்சலும் உத்தம குணமும் கொண்டவர்கள் சமுதாய தலைவர்களாக அன்று இருந்தனர். நமது சமுதாயமும் ஆரோக்கியமாக வளர்ந்தது.


இன்று உள்ள தலைவர்கள் தங்களை சீர்தூக்கி பார்க்க வேண்டும். உங்க கட்சித் தலைமையை எதிர்த்து பேசவேண்டாம். வாய திறந்து பேசுங்க பாப்போம். குறைந்தபட்சம் சட்டசபையில் உங்க தொகுதி பிரச்சனையையாவது சுயமாக பேசுங்க பாப்போம்.

இட ஒதுக்கீடு தேவையா என்று சில சொந்தங்கள் சொல்கிறார்கள். இன்றைய சூழலில் இருந்து இட ஒதுக்கீட்டை பார்த்தால் இப்படித்தான் நினைக்கத் தோன்றும். அன்றைய சூழலில் இருந்து பார்க்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறுவதற்கு முன்னர் மிகப்பெரும்பான்மையான கவுண்டர்களின் நில உடமை சராசரியாக இரண்டு ஏக்கர். பத்து ஏக்கர் வைத்திருந்தவர்கள் கூட மிக சொற்பமே. வெள்ளைக்காரர்களின் ஆதரவாளர்கள், ஜமீன்கள், பட்டக்காரர்கள், மேலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே பெரும் நிலங்களை வைத்திருந்தனர். அப்படியிருக்க விவசாயம் மட்டுமே சாத்தியமா?? 

அன்றைய காலத்தில் லைசன்ஸ்ராஜ் என்று தொட்டதற்கெல்லாம் லைசன்ஸ் என்று சிறு-குறு தொழில் எல்லாம் கடுமையான நடைமுறை சிக்கல்களால் வளரவில்லை. பின்னாளில் வந்த தாராளமய-உலகமய கொள்கைகளால் கெடுபிடிகள் தளர்ந்து எல்லாரும் தொழில் செய்ய வாய்ப்பு கிட்டியது. தொழில் என்பது அக்காலத்தில் மிகப் பெரும் பணக்காரர்களால் மட்டுமே செய்யக்கூடிய சாத்தியமாக இருந்தது. இதனாலே வேலையில்லா திண்டாட்டம் வறுமை அதிகமாயிருந்தது. காந்தி ஆசிரமம் போன்ற கிராம அமைப்புகள் வளர காரணமே அந்த சூழலில் கிராம வறுமை ஒழிக்கத்தான். 

அரசு துறை வேலை வாய்ப்பு, இன்று மொத்த வேலை வாய்ப்பில் மிக சொற்பமானது. அக்காலத்தில் வேலை வாய்ப்பென்றால் அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் வங்கிகள் போன்றவைதான். தனியார் துறை மிக சொற்பமான வேலை வாய்ப்பே வழங்கியது; அதிலும் தனியார் துறை வேலைக்கு சென்றால் வாய்க்கும் வயிற்றுக்கும் தான் சரியாக இருக்கும். இதனால்தான் அக்காலத்தில் சர்க்கார் உத்தியோகத்திற்கு தனி மரியாதை இருந்தது.

சமூகத்துக்கு அதிகாரம் என்றால் ஒன்று அரசியல் மூலம் மற்றொன்று அரசு உத்தியோகம் மூலம். அரசு உத்தியோகத்தில் நமது பங்கு கிட்டத்தட்ட ஜீரோ என்ற நிலை இருந்தது அக்காலத்தில். இட ஒதுக்கீட்டால் அரசு உத்தியோகம் மட்டுமென்றில்லை; இன்று இருக்கும் கல்வி உதவித் தொகை, தொழில் மானியங்கள், லைசன்ஸ் உள்ள தொழில் ஒதுக்கீடுகள் (பங்க் போன்றவை) என்று பல விஷயங்களில் இட ஒதுக்கீடு பயனளிக்கும்.

சில தெலுங்கு சமூகங்கள் நம்மைப் போலவே தமிழகம் முழுதும் பரவலாக பாளையக்காரர்களாக, ஜமீங்களாக, நில சுவாந்தார்களாக இருந்தவர்கள் தான். ஆனால் அவர்களின் இன்றைய நிலை என்ன..? அவர்கள் தங்கள் பாரம்பரிய நிர்வாகத்தையும், விவசாயத்தையும் இறுகப் பற்றி கைவிடாத போதும் அவர்கள் நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிற சமூகத்து கைகளுக்கு செல்வதும், அவர்கள் தோட்ட கூலி வேலைக்கு செல்வதும் ஏன், எப்படி நடந்தது?? அவர்கள் வேலை, கல்வி, தொழில் போன்றவற்றில் போதிய கவனம் செலுத்தாமையால் இன்றைய விலைவாசி உயர்வோடு சமாளிக்க இயலாமையால். நாம் சர்க்காரை எதிர்த்து, கல்வி, மறுத்தும், உணவு, சமூக பாதுகாப்பு போன்றவற்றில் தற்சார்பு பெற்றிருந்தால் அல்லது பெறுவதற்கான நல்ல தலைமை இருந்திருந்தால் நாம் அவசியம் உயிரைக் கொடுத்தாவது போராடியிருக்கலாம். ஆனால் எதார்த்தம் என்ன?? 

சரி, நம் சமூக பெரிய மனிதர்களைக் கொண்டு நாமே நம்மை காத்துக் கொள்ள திட்டம் தீட்டியிருக்கலாமே என்று கூறலாம். அக்காலத்திய நம் சமூக பெரும்பணக்காரர்கள், மிட்டாதாரர்கள் எல்லாம் எப்படிப்பட்டவர்கள் என்றால் கோவை செழியன் இட ஒதுக்கீடு கேட்க ஆதரவு கேட்ட போது "கவுண்டனேல்லாம் படிக்கவும், சர்க்கார் உத்தியோகத்துக்கும் போய்ட்டா எங்க தோட்டத்துல வேலை செய்யறது யாரு?" என்று கேட்டவர்கள் தான். மாநாடு போட்டு கொங்கு கவுண்டர்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை நாங்க முன்னேறிய சமூகம் என்று தீர்மானம் போட்டவர்கள். கூட்டத்தில் அனைவர் முன்னிலையில் "கோவை செழியன் அரசியலுக்காக இட ஒதுக்கீடு பேசுறார்; இந்த அரசியல்வாதிகளை நம்பாதீங்க" என்று குழப்பம் உண்டாக்கியவர்கள். தன் சமூக மக்களின் நலனை சிறிதும் சிந்தித்துப் பார்க்காத இவர்களை வைத்தா நம் சமூகத்தை நிர்வகிப்பது?? 


இன்று கோவை செழியனையும், இட ஒதுக்கீட்டையும் விமர்சிப்பவர்கள் கவுண்டர்களை மீண்டும் மேற்படி உத்தமர்களிடமும், வெள்ளைகார அபிமானிகளிடமும் சிக்க வைக்க நினைப்பவர்கள் தான். முதலில் அவர்களின் பிடியில் இருந்து வெளிவர நமக்கு அந்த சமயத்தில் இட ஒதுக்கீடு பெரிதும் தேவைப்பட்டது.

"அரசு உத்தியோகம் நமக்கு தேவையா அதை வைத்தா நம்ம பாட்டன் பூட்டன பொழச்சாங்க?" என்று கேட்கும் உத்தமர்களிடம் கேளுங்கள்.. அக்காலத்தில் பட்டக்காரர்கள் சேர, சோழ, பாண்டியன் படைப்பிரிவில் சாதாரண போர் வீரர்களாகவும், அமைச்சர்களாகவும் இருந்ததையும், துளுக்கர்களிடம் வேலை, நாயக்கர்களிடம் மாசக்கணக்கில் காத்திருந்து அரச பதவிகள் பெற்றதையும், தீரன் சின்னமலையைக் கொன்ற வெள்ளைக்காரனிடம் கைகட்டி வாய்பொத்தி கெஞ்சி கூத்தாடியதற்கும், மணியகாரர் பதவிக்கும், ICS போன்ற பதவிகளுக்கும் வெள்ளைக்காரனிடம் தேர்வெழுதி போயிருக்கிறார்கள். இதற்கு ஆதாரங்கள் உள்ளது, அதைப்பற்றி எல்லாம் உங்க கருத்தென்ன, அவையெல்லாம் மாட்டுக்கு உணி புடுங்குற வேலையா?? என்று கேட்டால் ஓடி விடுவார்கள்.  

இப்படி கொங்கு சமுதாயத்தின் பரம்பரைத் தலைவர்கள், ஜமீன்கள் எல்லாம் சமூக நலனுக்கு எதிராக இருக்கவேதான், இனி தலைவர்களை நம்பி பலனில்லை மக்களை திரட்டுவதுதான் ஒரே வழி என்ற முடிவில் ஊர் ஊராக சென்று ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தி, சின்ன சின்ன சங்கங்களை எல்லாம் ஒன்று திரட்டி, ஒரு மாபெரும் இயக்கமாக கொங்கு வேளாள கவுண்டர் பேரவையை வளர்த்தெடுத்தார். இதற்காக அவர் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல.

நமக்கான சமூக நிர்வாகம் நாமே அமைத்துக் கொள்வதுதான் சிறந்தது; ஆனால் வெள்ளைக்காரர்களின் கைக்கூலிகள் தலைமையில் இல்லை. நம் சமுதாயத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்தும் நம் மக்களால் "தேர்ந்தெடுக்கப்படும்" நல்லவர்கள் தலைமையில். இவற்றையெல்லாம் நினைத்து பார்க்க வேண்டும்.


நமக்கு நன்மை செய்த பறையர் முதல் முஸ்லிம்கள் வரை கோயில் கட்டி கும்பிட்டு நன்றி செலுத்தும் முன்னோர்கள் கொண்ட நன்றியுடைய சமூகம் கொங்கு சமூகம். கோவை செழியன் சேர்ந்திருந்த கட்சி அதன் கொள்கைகள் அவரது தொழில் பற்றி நாம் ஆயிரம் விமர்சனம் சொல்லலாம். ஆனால் அவரது இனப்பற்று, தன்மானம், இனத்துக்காக அவர் எடுத்த ரிஸ்க்கள், அவரது உழைப்பு போன்றவற்றை விமர்சிக்க இன்று நம்மில் ஒருவருக்கும் தகுதியில்லை. நன்றி மறக்கலாகாது.

"என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய்நன்றி கொன்ற மகற்கு"

கோவை செழியன் அவர்கள் எழுதிய முடிவில்லாத கதை என்னும் நூல் அனைவராலும் படிக்கப்பட வேண்டிய நூலாகும்.


4 comments:

 1. அந்த நூலின் பிரதி பகிரவம்.

  ReplyDelete
 2. அய்யாவில் வழி எம் வழி

  ReplyDelete
 3. கொங்கனுக்கோர் சங்கம் அமைத்த கோவை செழியன் ஐயாவின் புகழ் வாழ்க

  ReplyDelete
 4. கொங்கனுக்கோர் சங்கம் அமைத்த கோவை செழியன் ஐயாவின் புகழ் வாழ்க

  ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates