Trending

Monday, 8 August 2016

பெருமைமிகு சங்கு

பல தேசங்களாக பாரதம் பிரிந்திருந்தாலும் சில விஷயங்கள் பாரதத்தின் அனைத்து தேசங்களிலும் பொதுவாக பின்பற்றப்பட்டு அவை அணைத்து தேசங்களையும் இணைக்கும் ஒரு கலாசார சரடாக செயல்படும். அப்படிப் பட்ட விஷயங்களில் ஒன்று சங்கு. கொங்கதேசம் கடல் எல்லைகள் இல்லாத பூமி, ஆயினும் கொங்கில் சங்கு பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதன் ஆன்மீக, மருத்துவ கலாசார காரணங்களே அதற்கு காரணமாகும். அவ்வாறான சில விஷயங்களை தொகுக்கிறோம்.
அடிப்படை செய்திகள்

சங்குகள் கடலாழ் ஒருவகை நத்தையினத்தின் ஓடு. நம் மரபில் சங்குகள் இடம்புரி, வலம்புரி, சலஞ்சலம், பாஞ்சசன்யம் என்று வகைப்படுத்துகிறார்கள். ஆயிரம் இடம்புரி (இடச்சுழியாக சங்கு வளைந்து வருவது) கிடைக்குமிடத்தில் ஒரு வலம்புரியும்,  ஆயிரம் வலம்புரி (வலச்சுழியாக சங்கு வளைந்து வருவது) கிடைக்குமிடத்தில் ஒரு சலஞ்சலமும் (வலம்புரியில் மூன்று கோடுகள் உள்ளது), ஆயிரம் சலஞ்சலம் கிடைக்குமிடத்தில் ஒரு பாஞ்சசந்யமும் கிடைக்குமாம். மேலும், வலம்புரியில் அதன் நிறம் கோடுகளைப் பொறுத்து கணேச சங்கு, தேவி சங்கு, விஷ்ணு சங்கு எனவும் உண்டு. இவையன்றி, மணிச்சங்கு, பால்சங்கு, முள்சங்கு, வரிச்சங்கு, வெண்சங்கு என பல வகைகளும் உள்ளன.

சங்குகள் தோற்றம் குறித்து பல செய்திகள் உள்ளன. பாற்கடல் கடைந்தபோது வெளிப்பட்ட பல மங்கள பொருட்களில் சங்கும் ஒன்றாகும். அதுபோலவே, சங்காசுரன் எனும் அரக்கன் கடலுக்கடியில் இருந்தவன், உலகை கொடுமை செய்து வந்தவனை அழித்த பொது அவன் காதுகளில் இருந்த சங்கை பூமிக்கு கொண்டுவந்தார் மத்சய அவதாரம் எடுத்த ஸ்ரீ மகாவிஷ்ணு. சங்கில இருந்து ஓம்கார நாதமும் அதன் மூலம் வேதங்களும் உலகிற்கு வெளிப்பட்டதாக செய்தியுண்டு.
 சங்கு பரீக்ஷை என்னும் புராதன நூல் சங்குகள் பற்றி விரிவாக விளக்கும். சங்குகளை சோதிப்பதற்கு சில வழிகள் உண்டு. பூஜைக்கு பயன்படுத்தும் சங்கில அந்த சோதனைகள் கூடாது. சுட்டு பார்ப்பது பொதுவாக பயன்படுத்துவது. தண்ணீரில் உப்பு அதிகமாக கலந்து அதில் சங்கை முழுகி வைத்து நிறம் கருப்பாக மாறுகிறதா என்பது வேறுவிதம். கருப்பானால் போலி. தற்காலத்தில் தென்னாப்பிரிக்காவில் கிடைக்கும் சிறப்பில்லா வேறு வகை சங்குகளை இங்கே கொண்டு வந்து ஏமாற்றி விற்கிறார்கள். அவற்றால் எந்த பலனும் இல்லை.

மருத்துவம்

மருத்துவத்தில் சங்கு பயன்பாடு பல காலமாக இருந்துவருகிறது. ஆயுர்வேதம், சித்தமருத்துவம், சீன மருத்துவம் போன்ற பல மருத்துவ முறைகள் சங்கைப் பயன்படுத்துகின்றன.

சித்தர் போகர் சங்கின் தோற்றம் குறித்தும், சங்கு சுத்தி, சங்கு பஸ்பம் செய்வது குறித்தும் விரிவாக தனது பாடல்களில் விளக்கியுள்ளார். தேரையரும் தனது பாடல்களில் சங்கு பஸ்பம் செய்முறை பற்றி விளக்கியுள்ளார்.
சங்கு பஸ்பம் பல கொடிய நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. காச நோய், எலும்புருக்கி, தைராய்டு போன்ற நோய்கள் குணமாகின்றன. சங்கில் நீரும் மூலிகைகளும் இட்டு அருந்துவதும் பல நல்ல விளைவுகளை உடலில் ஏற்படுத்தும். துளசி நீர் போன்றவை.

குழந்தைகளுக்கு சங்கில பால் வார்ப்பது நெடுங்கால நடைமுறை. சங்கில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் உள்ளது. ரிக்கட்ஸ் எனப்படும் எலும்பு நோய் சங்கு பால் புகட்டுவதால் வராமல் தடுக்கபடுவது நிரூபிக்கபப்ட்டுள்ளது. வெறும் தண்ணீரின் முன்பு ஓம் என்னும் ஒலி முறையாக கூறப்பட்டால் தண்ணீரின் அமைப்பு மாறி மிக நன்மையளிக்கும் விதமாக் மாறுகிறது. அதுவே ஓம்கார நாதத்தை எப்போதும் ஏற்படுத்தும் சங்கில் பால் வார்க்கும்போது பாலின் தன்மை மிக நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவது காரணமாக இருக்கலாம்.


ஆன்மிகம்

சங்கு மகாலட்சுமியின் அம்சம். சங்கிருக்கும் இடத்தில் மகாலட்சுமி வாசம் இருக்கும். அதனால்தான் பெரும்பணக்காரர்கள் வலம்புரி சங்கை பெரும் விலை கொடுத்தேனும் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். சங்கிலிருந்து தோன்றும் ஒலி ஓம்கார நாதத்தை ஒத்தது. அதிலிருந்து நம் காதுகளுக்கு கேட்காத அலைவரிசையில் ஓசை வெளிப்படுவதாகவும் அவ்வோசை அண்டத்தின் ஓசைக்கு ஒப்பானது என்றும் கூற்றுண்டு. அவ்வோசையால் வீட்டில் நல்லதிர்வுகளும் உணர்வுகளும் உண்டாகும் 

"சங்குல ஊத்துனா தீத்தம் சட்டில ஊத்துனா தண்ணி" என்பது பழமொழி சங்கின் மகத்துவத்தையும், சங்கு நீர், சங்கு அபிஷேகம் பற்றியும் பல புராணங்கள் சாஸ்திரங்கள் போற்றி புகழ்ந்துள்ளன. சங்கு தீர்த்தம் கொடிய பாவங்களை போக்கக்கூடியது. அதை இறைவனுக்கு அபிஷேகம் செய்தாலும் சரிதான்.

வைணவத்தில் சங்கைப் பற்றி சொல்லவே தேவையில்லை. பாஞ்சசண்யம் என்ற சங்கு மகாவிஷ்ணுவின் கரத்தில் எப்போதும் இருப்பது. வைஷ்ணவர்கள் சங்குக் குறியை தோளில் இட்டுக் கொள்வது மரபு.

சங்காபிஷேகம் - சிவபெருமானுக்கு கார்த்திகை மாத சோமவாரத்தில் சங்காபிஷேகம் செய்வது மரபு. சங்கில பால், கங்கை நீர் போன்றவை கொண்டு அபிஷேகம் செய்வது பெரும் புண்ணியமாகும். சங்கு சிவ வாத்தியம். சிவபெருமானுக்கு மிகப்பிரியமானது. பல கோயில்களில் பூஜை துவங்கும்போது சங்கூதி அர்ச்சனைகள் செய்யப்படுவது மரபாக இருந்தது. சங்காபிஷேக சங்குகளில் ஒன்றாக குபேரன் இருப்பார் என்பது ஐதீகம்.

சங்கிற்கு என்று தனி மந்திரங்களே உண்டு. சங்கிற்கு சங்கு பூஜை செய்வது சிறப்பானது. லட்சுமியின் அருள் சித்திக்கும். இதற்காகவே சங்கிற்கு வெள்ளி, தங்க காப்புகள் போட்டு பூஜையறையில் வைத்திருப்பார்கள்.சங்கு ஸ்தாபனம் - தென் மாவட்டங்களில் சங்கை வீட்டு முகப்பில் பாதி வெளியே தெரிவது போல புதைப்பர் சில கோயில்களிலும் கோயில் சக்தியை பெருக்க சங்கு ஸ்தாபனம் செய்யப்படும். 

வாஸ்து பிரச்சனைகள் உள்ள வீடுகளில், வெள்ளிக் கிழமை சங்கில் துளசி மற்றும் மஞ்சள் நீர் கலந்து சங்கில ஊற்றி பூஜை செய்து அதை வீட்டில் தெளிக்க வாஸ்து தோஷங்கள் விலகும் என்பது சாஸ்திரம். கோ மூத்திரம் போல சக்தியுடையது இந்த சங்கு தீர்த்தம். கண் திருஷ்டி போக்கவும் வாகனங்களிலும்,வீடுகளிலும் சங்கு பயன்படுத்தப்படுகிறது.

கொங்கில் சங்கு - மரபுகள்

நம் கொங்கு குடியானவர்கள் மரபில் சங்கு பல விஷயங்களில் பயன்படுத்தபப்ட்டு வருகிறது. அவற்றில் சிலவற்றை கீழே காணலாம்.

** அண்ணன்மார் - அண்ணன்மார் வரலாற்றில் சின்னண்ணனுக்கு மாயனுர் செல்லாண்டியம்மன் பேர் வைத்த விதம சொல்லப்படுகிறது. சங்கை உரைத்து பாலில் கலந்து ஊட்டி சங்கர் என்று பேர் வைத்தனராம்.

"..பொன்னொரச்சு பால் வார்த்து பொன்னரென்று பேர் வச்சு 
சங்கொரச்சு பால் வார்த்து சங்கரென்று பேர் வச்சு.." 

** மார்கழி சங்கு - மார்கழி மாதம் தினமும் அதிகாலையில் பண்டாரம் ஊர் முழுதும் சங்கூதிச் செல்வது மரபு. மார்கழி மாத வழிபாடு கொங்கில் பரவலாக பின்பற்றப்பட்டதை இதன்மூலம் அறியலாம். மேலும் மார்கழி நீராடல் என்னும் சடங்கு பல காலமாக புகழ்பெற்ற கோயில்களில் இருந்து வந்துள்ளது; பிரம்ம சமாஜ காலம் வந்த பின்னர் அது 'நவீன' சைவ சித்தாந்திகளால் தை நீராடலாக மாற்றினர் என்று கூற்றுண்டு. ஆண்டாள் பாசுரங்களிலும் மார்கழி அதிகாலை இப்படி சங்கூதிச் செல்லும் (சங்கிடுவான்) மரபு சொல்லப்பட்டுள்ளது. கொங்கில் சங்கு ஊதும் உரிமை பெற்றவர்கள் பண்டார சாதியினரே. தூய்மையும் லக்ஷ்மியின் அம்சமும் உடைய சங்கை புனிதமாக போற்றிக் காக்க, கோயில் கஜானாவை (பண்டாரம்) காக்கும் பொறுப்புடையவர்களும் ஆன்மீக சிந்தனை மிக்கோருமான ஆண்டிப் பண்டார சாதியினரே பொருத்தமானவர் என்று முன்னோர்கள கருதியுள்ளனர்.

"ஆண்டி மகன் ஆண்டியானால் நேரம் பார்த்து சங்கூதுவான்" என்று பழமொழியுண்டு ** பிறப்பு கல்யாணம் இறப்பு - சங்கு வளத்தின் அடையாளம். முற்காலத்தில் குழந்தை பிறந்ததும் சங்கொலி, கல்யாணத்தில் சங்கொலி, மரணத்தில் சங்கொலி, பூஜையில் சங்கொலி, போரில் சங்கொலி, வெற்றியில் சங்கொலி என்று இருந்துள்ளது. இன்று மரணத்தின் போது மட்டுமே அதுவும் சில இடங்களில் ஊதப்படுகிறது.** கவுண்டர்கள் கல்யாணத்திலும் சங்கு உண்டு. மாப்பிள்ளை அழைப்பு நடக்கும்போது விடுதிவீட்டில் இருந்து தாலிகட்ட பெண்வீடு வரும் மாப்பிள்ளையை வரவேற்கும் முகமாக பலவித வாத்தியங்கள் வாசிக்கப்படும், நடனங்கள் அரங்கேறும். அவற்றில் முக்கியமானது சங்கின் ஒலி. இதேபோன்று ஆண்டாள் பாடலில் மாயவர் மகாவிஷ்ணு வரும்போது ஆயிரம் சங்கு ஊதப்பட்டது என்று கூறுவர். (வாரணம் ஆயிரம் சூழ வலம்வந்து.. என்னும் பாடல் மேற்கோள், வாரணம் என்பதற்கு சங்கு என்ற பொருளும் உண்டு). அதுபோலவே கல்யாணமாகும் போது சங்கொலி முழங்கவே தாலி கட்டுவர். இந்த இரண்டுமே மங்கள வாழ்த்தில் கூறப்பட்டுள்ளது.

"சங்கூதாம தாலி கட்டுறதா" என்பது ஒரு பழமொழியாகவே வெள்ளையர் கால ஆவணங்களில் பதிவாகியுள்ளது.

மங்கள வாழ்த்து வரிகள்:

"" ...தாயாருடை பாதம் தலைகுனிந்து தண்டனிடப்
போய்வா மகனேஎன்றார் பூங்கொடிக்கு மாலையிடப்           140

பயணமென்று முரசுகொட்டப் பாரிலுள்ள மன்னவர்கள்
மதகரி அலங்கரித்து மன்னவர்கள் ஏறிவரத்
தந்தை யானவர் தண்டிகை மேல்வரத்
தமையன் ஆனவர் யானையின் மேல்வர
நாடியே வந்தவர்கள் நட்சத்திரம் போல்வரத்
தேடியே வந்தவர்கள் தேரரசர் போல்வரப்
பேரணி முழங்க பெரிய நகாரடிக்கப்
பூமிதான் அதிர புல்லாங்குழல் ஊத
எக்காளம் சின்னம் இடிமுரசு பெருமேளம்
கைத்தாளம் பம்பை கனக தப்பட்டை தான்முழங்கச்           150

துத்தாரி நாகசுரம் சோடிகொம்பு தானூத
சேகண்டி சங்கு திமிர்தாளம் பம்பையுமே
வலம்புரிச் சங்கநாதம் வகையாய் ஊதிவர
உருமேளம் பறமேளம் உரம்பை திடும்படிக்கப்
பலபல விதமான பக்கவாத்திய முழங்கப்
பல்லக்கு முன்னடக்கப் பரிசுகள் பறந்துவர
வெள்ளைக்குடை வெண்கவரி வீதியில் வீசிவரச்
சுருட்டி சூரியவாணம் தீவட்டி முன்னடக்க
இடக்கை வலக்கை இனத்தார்கள் சூழ்ந்துவரக்
குதிரையின் மீதமர்ந்து குணமுள்ள மாப்பிள்ளை...""           160

""..கணபதி தெய்வமுன் கட்டும்மங் கிலியம்வைத்து
அருமைப் பெரியவர் அன்புடன் பூஜைசெய்து
மாப்பிள்ளை பெண்ணை மணவறையில் எதிர்நிறுத்திக்
கெட்டிமேளம் சங்குநாதம் கிடுகிடென்று சப்திக்க
மாணிக்கம்போல் மாங்கல்யம் வைடூரியம்போல் திருப்பூட்டி..""

**சங்கு வளையல் - இடங்கை வலங்கைப் புராணம் சங்கு வளையலை வெள்ளாளர்கள் ஜாதி அடையாளமாகவே கூறியுள்ளது. சங்க இலக்கியங்கள் பல அரசியர் சங்கு வளையல்களை தங்கள் மாணிக்க ரத்தின வலையல்களோடு ஒன்றாக அணிந்திருந்த செய்தி குறிக்கப்பட்டுள்ளது. கங்கைச் சமவெளி மற்றும் வங்காள தேசத்தில் இன்றும் சங்கு வளையல்களும் சங்கு தாலியும் அணிவது வழக்கம். இந்த சங்கு வளையல் வெள்ளாளர் ஆதி முன்னோரான கங்கை மைந்தர் மரபாளனுக்கு குபேரன் தன் மகளை கல்யாணம் செய்து கொடுத்தபோது கொடுத்த சீதன அணிகலன்களில் ஒன்றாகும். அவ்வளவு மதிப்பு மிக்கது சங்கு வளையல், அதை மீண்டும் நம் கல்யாணங்களில் நம் பெண்களுக்கு அணிவிக்க வேண்டும்.** சங்கு ஒரு சுப சகுனமாகும். சங்கும் சங்கொலியும் ஒரு நல்ல சயனமாக கருதப்படுகிறது. அபிதான சிந்தாமணியும் அதை உறுதி செய்கிறது.

** கொங்கில் பெருமாள் மலை ஒவ்வொரு வட்டாரத்திற்கும் உண்டு. கோயில் தாசர்களும் உண்டு. காரமடை போன்ற புகழ்பெற்ற கோயில்களில் கோயில் தாசர்களுக்கு கடும் விரதங்கள் உண்டு. அவர்கள் தோள்களில் மூத்த தாசர்களினால் சங்கு சக்கரத்தை குறியிட்டுக் கொள்வார்கள். வைணவ தீக்சை போன்றது.

**சங்கடை பால் வார்த்தல் - குழந்தைகளுக்கு  சங்கில் பால் வார்ப்பது கொங்கு மரபுகளில் ஒன்று. ஒரு சங்கடை, இரண்டு சங்கடை என்பதே ஒரு அளவீடாக இன்றும் உள்ளது. பாலுக்கு மட்டுமல்ல, குழந்தை மருந்துகள் கூட சங்கடை அளவுகளில் குறிப்பிடப்படுவதுண்டு. 

இவ்வளவு மகத்துவமும் பாரம்பரியமும் பெற்ற சங்கை கூத்தாடி சக்திகள் தங்கள் சினிமா ஊடகங்கள் மூலம் இழிவு செய்துவிட்டனர். சங்கூதுதல் என்பதே எதோ இழப்பின் அடையாளம் போல சித்தரித்து விட்டனர். "சிக்குனோம், சங்குதான்!" என்பதுபோல அழிவுக்கு அடையாளமாக சங்கு வாய்மொழி வழக்காக்கப்படுகிறது. இது நம் மரபு பாரம்பரியம் மீது நாமே சேற்றை வாரி வீசுவது போலாகும். இன்று வெளிநாடுகளில் ஏராளமான வலம்புரி சங்குகள் உள்ளன. அவையெல்லாம் நம் நாட்டிலிருந்தும் கோயில்களிலிருந்தும் எடுத்துச் சென்றவை. 

சமீபத்தில் நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில் ராஜேஷ் ஷர்மா ஐஏஎஸ் சங்கொலி  மூலம் நாற்பதுக்கும் மேற்பட்ட தைராய்டு வியாதியஸ்தர்களை குணப்படுத்தியதாக கூறி இது அறிவியல் இல்லாவிட்டால் வேறு எது அறிவியல் என்று கேள்வி எழுப்பினார். அவரது உரை துவங்கும் முன்னர் இரண்டு நிமிஷம் சங்கொலி எழுப்பி, சங்கநாதம் பீடைகளை விரட்டும் என்றார். அவர் கூறியதுபோல சங்கநாதம் நம் தேசத்துக்கு வளம் சேர்க்கட்டும்; சங்கநாதம் உலகத்துக்கே பாரதத்தின் மேன்மையை உணர்த்தட்டும்!

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates