Trending

Thursday, 17 November 2016

கொங்கு விஷநீர் பிரச்னை - தீவிரமும் தீர்வும்

முன்பெல்லாம் கான்சர் என்பது சினிமாவில் மட்டுமே கேள்விப்பட்ட வியாதி. குழந்தையின்மை என்பது மிக அரிதாக இருந்த விஷயம். இப்போது கொஞ்சம் யோசித்து பாருங்கள், உங்கள் உறவினர் ஊர்-வட்டத்திலேயே நிச்சயம் நான்கு பேராவது கேன்சர் நோயாளிகளோ, குழந்தயின்மையாள் பாதிக்கப்பட்டவர்களோ இருப்பார்கள். செய்தி என்று பெருமூச்சு விடவேண்டாம். நீங்கள் ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் வசிக்கிறீர்கள் என்றால் உங்கள் வாழ்நாளுக்குள் உங்கள் குடும்பத்தில் மகன்-மகளோ அல்லது பேரன் பேத்தியோ நிச்சயம் ஒருவரையாவது நோயாளியாகப் பார்க்கத்தான் போகிறீர்கள். காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
பவானி நொய்யல் என்று ஆறுகள் எல்லாம் விஷம் கலக்கிறோம். ஆறுகள் சங்கமிக்கும் காவேரி நதியும் குளிக்கக் கூட முடியாதவாறு விஷம் கலக்கப்படுகிறது. ஓடைகள் எல்லாம் விஷம். இவை போதாது என்று போர் போட்டு நிலத்தடி நீருக்குள் நேரடியாக விஷத்தைக் கலக்கிறார்கள் பாதகர்கள். இந்த விஷ நீரைக் குடித்து குடித்து காவேரி பாயும் மாவட்ட மக்கள் குறிப்பாக ஈரோடு நாமக்கல், திருப்பூர், கரூர் மக்கள் கணக்கற்ற நோய்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இதில் பெரும் பாதிப்பு ஈரோட்டுக்குத்தான். ஈரோடு மாநகரைச் சுற்றி இருக்கும் விஷ வளையம் பல்வேறுவிதமான கான்சர்கள், கர்ப்பப்பை நீக்கம், குழந்தையின்மை போன்றவை சாதரணமாக மேற்கண்ட மாவட்டங்களில் நடந்தேறுகிறது. நாட்டின் கான்சர் கேப்பிடல் என்று சொல்லுமளவு ஈரோட்டில் கான்சர் மிகுந்துவிட்டது. ஒரு நாளைக்கு முப்பது நாற்பது டெஸ்ட் டியூப் குழந்தைகள் பிறக்கின்றன. இயற்கையாக குழந்தை பெறஇயலாமல். இவைமட்டுமின்றி ஹார்மோன் பிரச்சனைகள், பாலியல் பிரச்சனைகள், கருப்பை பிரச்சனைகள் என்று பல்வேறு வியாதிகள்; இதனால் கொடிகட்டி பறக்கும் மருத்துவ வியாபாரம் கொள்ளைபோகும் மக்கள் சொத்துக்கள். உளவியல் பிரச்சனைகள், விவாகரத்துக்கள், தற்கொலைகள் என்று மக்கள் ஆரோக்கியம், குடும்பம், பொருளாதாரம் என்று அனைத்தும் சீர்கெட்டுக் கிடக்கிறது. ஈரோடு மாநகரத்துக்கு பெண் கொடுக்க எடுக்க வேண்டாம் என்று எண்ணுமளவு நிலை மோசமாகியுள்ளது. ஈரோடு மாநகருக்கு வெண்டிபாளையம் பேரேஜில் இருந்து நீர் எடுக்கப்படுகிறது. அங்கேயேதான் ஈரோடு நகருக்குள் உள்ள சாய, தோல் ஆலைகள் மற்றும் அனைத்து சாக்கடை கழிவுகளையும் சுமந்து வரும் நாற்றம் பிடித்த நீறும் கலக்கிறது. பம்பிங் செய்யப்படும் நீரின் தரம் என்னவென்று நடுநிலை அறிக்கைகள் இல்லை. நீரில் அவ்வப்போது கடும் துர்நாற்றமடிக்கிறது. சாய நிறங்கள் தென்படுகிறது. பள்ளிபாளையம் பகுதியில் காகித ஆலை கழிவு நீர் விவசாயத்துக்கு விடப்படுகிறது. சுத்திகரிப்பு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் வெளியேறும் கழிவு நீர் பால் கலக்காத காப்பி போல உள்ளது. அந்த நீரை காகித ஆலை நிர்வாகிகள் குடிக்கப் பயன்படுத்துவார்களா? அந்த நீர் பாய்ந்த நிலங்களில் மட்டுமல்ல சுற்றுவட்டார பகுதி கிணறுகளில் எல்லாம் நீரின் சுவை போன இருபது வருஷங்களில் சுத்தமாக கெட்டுவிட்டது. 

இப்படி மேற்கண்ட மாவட்டங்களில் தண்ணீரே விஷம் கலந்ததாக இருப்பதால் இயற்கை விவசாயம் என்பது ஏமாற்று வார்த்தைதான். நீரும் உணவுமே விஷமாகி தாய்ப்பாலில் கூட விஷ கூறுகள் இருப்பதை அறிவியலாளர்கள் உறுதிசெய்கிறார்கள். கிருஷ்ணனுக்கு விஷப்பால் கொடுத்த பூதகி போல இப்போது நம் கொங்குத் தாய்மார்களே தங்கள் குழந்தைகளுக்கு விஷப்பால் கொடுக்கும் நிலையாகிவிட்டது. 

 மக்கள் என்னவோ வாட்டர் பில்டர் பயன்படுத்தினால் சாய கழிவுகள் எல்லாம் வடிகட்டப்பட்டு சுத்தமான நீரை மட்டும் குடிக்கலாம் என்று தவறாக கர்பிக்கப்பட்டுள்ளார்கள். வாட்டர் பில்டர் என்பது ஒரு வடிகட்டி மட்டுமே. அதில் எதை ஊற்றினாலும் அவற்றில் உள்ள நுண் அழுக்குகளை வடிகட்டி கொடுக்குமே தவிர ஒரு திரவத்தை மற்றொரு திரவமாக மாற்றாது. சாயத்தையும் தண்ணீரையும் பிரிக்காது. உண்மையில் வாட்டர் பில்டர் மெசின்களால் உடல் உபாதைகள் நாட்பட பெருகும். 


   


 முன்பெல்லாம் ஊருக்குள் ஒன்றிரண்டு பேர் இறந்துபோனாலே மர்ம நோய் என்றும், பேய் பிசாசு நடமாட்டம் என்றும் தீர்வு தேடுவார்கள். ஆறு மாசத்தில் 66 பேர் மரணம் 2008. மாதம் புது கான்சர் நோயாளிகள் 150, 2016 ல். இன்று சாயவிஷநீர் பிரச்னையால நடந்த கான்சர் மரணங்கள் பற்றிய தகவல்கள் இல்லை; எப்படியும் மாதம் நூறு மரணங்களுக்கு குறையாது என்கின்றனர் வல்லுனர்கள். கான்சர் ஸ்பெஷலிட்டி மருத்துவமனைகளும், செயற்கை கருவூட்டல் மையங்களும் ஈரோட்டில் தான் அதிகமுள்ளன. சென்னை கான்சர் இன்ஸ்டிடியூட்டில் அதிக கான்சர் பேஷண்டுகள் ஈரோடு, நாமக்கல், கரூர் திருப்பூர் மாவட்டம் தான். 

இதுபோன்ற பெரும்பிரச்சனைகள், வாழ்வாதாரப் பிரச்சனைகளை கண்டு தீர்வு காணவேண்டியது சர்க்காரின் கடமை. சாமானியர்களால் இயலாத காரியம். இவ்வளவு தூரம் நிலை சீர்கெட்டும் அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. கடலில் கொண்டு கலப்பது என்பது கடலை விஷமாக்கச் செய்யும் வேலை. தவறானது. சீரோ டிஸ்சார்ஜ் என்பது சாத்தியமானதாகப்படவில்லை. அவ்வப்போது சாய ஆலைகள் இடிக்கப்படுவதுபோல காட்டினாலும் மீண்டும் துவக்கிக் கொள்கிறார்கள். கண்துடைப்பா என்று தெரியவில்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கைகள் கட்டப்பட்டுள்ளதா, அல்லது கைநிறைந்துள்ளதா தெரியவில்லை ஆனால் நடவடிக்கையில்லை என்பது எதார்த்தம். முன்பு கலக்டர் ஆனந்த் இந்த தோல்-சாய விஷ கம்பெனிகள் மீது நடவடிக்கைகள் எடுத்தபோது அந்த கலக்டரே மாற்றப்பட்டார்; அதிகாரிகள் எம்மாத்திரம்?. தோல், பீப், டெக்ஸ்டைல் ஏற்றுமதியால் கிடைக்கும் கோடிக்கணக்கான டாலர்களைக் கண்டுகொண்டு மத்திய அரசும் வாய்மூடி இருக்கிறது. முறையாக சுத்திகரித்தாலே கூட வெளிநாட்டு வணிகர்கள் வாங்குமளவு இந்திய துணிகள் விலை குறைவாகத்தான் இருக்கும், விலை அதிகமென்லும் வெளிநாட்டுக்காரன் அவன் நாட்டில் இப்படி விஷம் கலக்க விட மாட்டான் எனவே நம்மூர் டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்கு பாதிப்பு வராது என்பது எதார்த்தம். ஆயினும் இங்கே லாப நோக்கம் தான் முன்னால் நிற்கிறது. 

 தண்டனை கடுமையாக வேண்டும். தோல்-சாய ஆலைகாரர்கள் நீரில் விஷம் கலந்தால் , ஆலை சீல் வைப்பதோடு அவர்கள் சொத்துக்கள், மற்றும் அவர்கள் குடும்ப சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். கொலை முயற்சி (விஷம் கலந்து மக்களைக் கொல்ல திட்டமிட்டது), தேசத்துரோகம், பொதுசொத்துகள் (நீராதாரங்கள்) அழிப்பு போன்ற பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிய வேண்டும். குறைந்தபட்சம் இருபதாண்டுகள் சிறைவாசம் விதிக்க வேண்டும். இங்கே பொதுமக்களின் அக்கறையும் மிகக் குறைவாக உள்ளது. எங்கேனும் இப்படி ஆலை நீரில் விஷம்கலப்பது தெரிந்தால் மக்களே புகாரளிக்க முன்வர வேண்டும். நியாமாகப் பார்த்தால் மக்கள் நுழைந்து அந்த ஆலையை அடித்து நொறுக்க வேண்டும். ஆனால் "மக்களை காக்கும்" சட்டத்தை நாம் மதிக்க வேண்டாமா?? ஈரோட்டின் ஏரி குளங்கள் மீட்கப்பட்டால் நிலத்தடி நீரில் நன்னீர் இறங்க வழி செய்யும். அதனால் நிலத்தடி நீர் மீண்டும் சுகாதாரமாக மாற வாய்ப்பிருக்கும். 

தமிழகத்தின் பிரபல இயற்கை செயல்பாட்டாளர் ஒருவர் கூறுகிறார், "சில நாட்கள் முன்ன ஈரோட்டின் பெரும்பணக்காரர்கள்லாம் சேர்ந்து ஒரு இயக்கத்தை துவக்கினாங்க. ஈரோட்டை பசுமையாக்குறோம், தூய்மையாக்குறோம்னுட்டு டிவியிலும், பேப்பரிலும் பெரிய பெரிய நடிகரை எல்லாம் வச்சு வெளம்பரம் செஞ்சாங்க. அந்த இயக்கத்துல இருந்தவங்க யாருன்னு பார்த்தீங்கனா அவங்கதான் ஈரோட்டோட மிகப்பெரிய தோல் தொழிற்சாலையும், சாய ஆலைகளும் வச்சு நடத்தரவங்களா இருக்காங்க. இவங்க விளம்பரத்துக்கு செலவு பண்ணின தொகைய செலவு செஞ்சிருந்தாலே ஈரோடு பசுமையாகி இருக்கும். இல்ல, முறையா அவங்க தொழில் செஞ்சாலே ஈரோடு பசுமையாகிரும். பெரிய புண்ணியமா போகும். இதெல்லாம் பெரிய கம்பெனிங்க அவங்க "கார்பரேட் சோசியல் ரேஸ்பான்சிபிளிடி" காக செலவு செய்யவேண்டிய தொகைய அவங்க விரும்பின விதத்துல செஞ்சுக்க பயன்படுத்தற வித்த.. மக்களும் அதை நம்பிட்டு இருக்காங்க.. மக்கள் இப்படித்தா ஏமாத்தப் படுறாங்க.." 

சரி நம்மளவில் இப்போ உடனடியா என்ன செய்யலாம்.. 

 ஆற்று நீர் விஷமாச்சு, நிலத்தடியிலும் விஷம் பரவிருச்சு.. போதாக்குறைக்கு நிலத்துக்குள் விஷத்தை விடுறாங்க.. இனி நமக்கு இருக்கற ஒரே போக்கிடம் மழைநீர்தான். மழை பெய்யும்போது அதை முறையா சேகரிச்சு வடிகட்டி வச்சிட்டு அதையே குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்தணும். மழைத்தண்ணீர் இயல்பிலேயே மிகவும் சுத்தமானது, நோய்களைத் தீர்க்கக் கூடியது. அதுதான் இப்போதைக்கு இந்த மாவட்ட மக்கள் நோய் பாதிப்புகளில் இருந்து விடுபட இருக்கற ஒரே வழி. நீரை சேமிக்கவும், சேமித்த நீரை பாதுகாக்கவும், குறிப்பாக மிகையான நீரை மீண்டும் நிலத்தடிக்குள் விடவும் வேண்டும். இதைக் கூட செய்ய நோகுமென்றால் நம்மை ஆண்டவனாலும் காப்பாற்ற இயலாது. இந்த மழைநீரை சேகரித்து வீட்டுப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்துவதை தன் வாழ்நாள் முழுதும் பல ஊர்களில் செயல்படுத்தி வருகிறார் பொறியாளர் திரு வரதராஜன் அவர்கள். அவரது தொடர்பு எண், முகவரி, வலைத்தளம், அவரது தொழில்நுட்பம் மற்றும் அவரைப்பற்றிய சிறிய ஆவணப்படம் கீழே.  Malaineer Er. K. Varadarajan 
#7, G.D. Nagar, Thiruvarur - 610 001
 Phone : 04366 222675, Mobile : 9443152675 
EMail : malaineer@yahoo.co.in 
Website: http://malaineer.in/description.html 

 நீராதாரங்கள் பற்றி மேலும் அறிய: தமிழக நீராதார மேம்பாடு

3 comments:

 1. புற்றுநோய் தலைநகர் ஈரோடு: தனியாரால் 1.50 கோடி பேர் பாதிப்பு

  சாய, தோல் கழிவுகளை, காவிரியாற்றில் வெளியேற்றும் ஈரோடு மாநகரம், தமிழகத்தின் புற்றுநோய் பாதிப்பு தலைநகராக உருவெடுத்து வருகிறது. இப்பகுதியில் செயல்படும், 200 நிறுவனங்களால், 1.50 கோடி பேரை ஆட்சியாளர்கள் அழித்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஈரோடு சாய, சலவை, தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர், நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதால், ஈரோடு மட்டுமின்றி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட கரையோர மாவட்டங்களும், கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குறிப்பாக, ஈரோடு மாநகர மக்கள், புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி வருவது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக பெருநகரங்களில் உள்ள புற்றுநோய் சிறப்பு மருத்துவமனைகளில், நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் அனுமதிக்கப்பட்டால், 'நீங்கள் ஈரோட்டில் இருந்து வருகிறீர்களா' என, கேட்பது சாதாரணமாகி விட்டது. இம்மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஆலையிலும், சிப்காட் போன்ற இடங்களிலும், அகற்ற முடியாத தன்மை கொண்ட அடர்கழிவு மட்டும், பல லட்சம் டன் தேங்கி கிடக்கிறது.இதன் மீது, மீண்டும் மீண்டும் அடர்கழிவு கொட்டப்படுவதால், அந்த கழிவுநீர், மழை நீருடன் கலந்து, பூமிக்குள் இறங்கி, சுற்றுவட்டார நீராதாரங்களில் நஞ்சு கலந்து விடுகிறது. இந்த தண்ணீரை தான், இம்மாவட்ட மக்கள் அருந்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.பல ஆயிரம் மீட்டர் சாய துணிகளை, காவிரி ஆறு, காலிங்கராயன் வாய்க்காலில் அலசி, உலர்த்தி எடுத்துச் செல்கின்றனர்.அதேபோல், தோல் ஆலைகளில், தோலை பதப்படுத்தி மாற்றும் போது, அதில் சேர்க்கப்படும் உப்பை உதறி, அலசி எடுத்து செல்வர். பதனிடும் போது, அவற்றுடன் காரீயம் உட்பட பல வேதி பொருட்களை சேர்க்கின்றனர்.இக்கழிவுகள், தோலுடன் இருந்த உப்பு போன்றவற்றை லாரிகளில் கொண்டு வந்து, காவிரி உட்பட நீர் நிலைகளில் கொட்டிச் செல்கின்றனர் அல்லது குழி வெட்டி அவற்றில் கழிவு, உப்பை போட்டு செல்கின்றனர். அவை அப்படியே நிலத்தடி நீருடனும், நீர் நிலைகளிலும் கலக்கின்றன.

  ReplyDelete
 2. நொய்யலாக மாறும் காவிரி : சாதாரணமாக மனிதர்கள் குடிக்கும் நீரில், உப்பின் அளவு, 'டோட்டல் டிசால்வ்டு சால்ட்' எனும் டி.டி.எஸ்., 600 வரை, இருக்கலாம். ஆறு ஆண்டுகளில், ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட நீர் நிலை ஆய்வில், 3,000 டி.டி.எஸ்., அளவுக்கு, பல இடங்களில் உப்பின் அளவு உள்ளது. 'மும்பை, டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ்' உட்பட பல அமைப்புகள் சேர்ந்து, 2016 ஜூலை, 17ல் வெளியிட்ட அறிக்கையில், 'ஈரோட்டில் பல இடங்களில், 2,000 டி.டி.எஸ்.,சுக்கு மேல் தண்ணீரில் உப்பு தன்மை உள்ளது' என தெரிவித்துள்ளது. தவிர, 'கால்சியம், காரீயம், மெத்திலின், போரேட், போரோட் சல்பான், ஈத்தேன், என்டோசல்பான் சல்பேட் என பல வேதி பொருட்கள், 30 முதல், 100 மடங்கு அதிகமாக உள்ளன' எனவும் குறிப்பிட்டுள்ளது. இவை, புற்றுநோய் உட்பட பல கொடிய நோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. திருப்பூரில் இருந்து திறந்து விடப்பட்ட சாய ஆலை கழிவால், நொய்யல் ஆற்றில், 12 ஆயிரம், டி.டி.எஸ்., அளவுக்கு உப்பு தன்மை இருந்ததால், திருப்பூரில் உள்ள பல ஆலைகளை இடிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. அத்துடன், நொய்யல் ஆறு அடைக்கப்பட்டு, இன்று வரை பயனற்று போனது. அதே போல, காவிரி ஆறும், காலிங்கராயன் வாய்க்காலும், ஈரோடு பகுதியின் நிலத்தடி நீரும் மாறி வருவது, மக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
  விதிகளை மீறி : காலிங்கராயன் பாசன சபை தலைவர் வேலாயுதம் கூறியதாவது: கடந்த, 14 ஆண்டுகளாக, சாய, சலவை, தோல் கழிவுநீர் வெளியேற்றம் கட்டுக்கடங்காமல் உள்ளது. கழிவு நீரை திறந்தால், அனுமதி இன்றி செயல்பட்டால், ஆலையை இடிக்கின்றனர்; மின் இணைப்பை துண்டிக்கின்றனர். ஒரே வாரத்தில், அதே இடத்தில், அதே ஆலை, வேறு பெயரில் செயல்படுகிறது. அந்த அளவுக்கு இத்தொழிலில் முறைகேடாக செயல்பட்டால், லாபம் கிடைக்கிறது.தனி நபர்கள், பல கோடி ரூபாய் சம்பாதிப்பதற்காக, 1.50 கோடி மக்களின் குடிநீர், நிலத்தடி நீரை விஷமாக்குகின்றனர். உள்ளூர் அமைச்சர், கலெக்டரிடம் புகார் செய்தால், 'எங்கும் சாயக்கழிவு வெளியேறவில்லை' என்கின்றனர். அப்படியானால், எதற்காக ஊராட்சிகோட்டை கூட்டு குடிநீர் திட்டம், 75 லட்சம் ரூபாயில் சுத்திகரிப்பு நிலையம், 720 கோடி ரூபாயில், அரசு சார்பில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கின்றனர் என்பதை விளக்க வேண்டும்.விதிகளை மீறி சாயப் பட்டறைகளை இயக்குவோரை, குறைந்த பட்சம் குண்டர் தடுப்பு சட்டம் அல்லது 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கும்படி தண்டனையை கடுமையாக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள, 200 யூனிட்காரர்களை பார்க்காமல், பல கோடி மக்களை நினைத்தால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
  10 ஆண்டுகளில் 295 மருத்துவமனைகள் : மாவட்டத்தில், நிலத்தடி நீர், குடிநீர், காற்று ஆகியன மாசு பட்டுள்ளதால், நோயாளிகளின் எண்ணிக்கை, 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. ஈரோடு பகுதியில் மட்டும், பதிவு செய்யப்பட்ட, 295 மருத்துவமனைகள், 780 மருந்துக் கடைகள் செயல்படுகின்றன. குறிப்பாக, புற்றுநோய் மற்றும் தோல் நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  - தினமலர் பதிவு செய்த நாள் 13ஜன 2017 22:55

  ReplyDelete
 3. ஈரோட்டில் 2.5 கோடியில் புதிய இயந்திரம் பெரும்பள்ளம் ஓடை அருகே நிறுவியுள்ளார்கள். இதன்மூலம் தினமும் இரண்டு லட்சம் லிட் தண்ணீர் வடிகட்டப்பட்டு ஈரோடு மக்களுக்கு விநியோகிக்கப்ப்படுமாம். அந்த ஓடையில் ஓடுவது பெரும்பகுதி சாய விஷம்- தோல் விஷக்கழிவு. அந்த மெஷின் நூறு லிட் கழிவு நீரில் இருந்து 99 லிட் நன்னீராக வடிகட்டுமாம்!!. தண்ணியில் கழிவு-தூசு இருந்தா வடிகட்டி குடுக்கலாம், தோல்-சாயவிஷத்தை தண்ணியா மாற்றக்கூடிய மெஷின் இதுவரை உலகில் எங்கும் கண்டுபிடிக்கபப்டவில்லையே? எப்படியய்யா கொடுக்கப்போறீங்க? ஈரோடு மக்களே.. இவ்வளவு நாள் இந்த கசிவும் சாயவிஷமும் காவேரி ஆற்றில் கொஞ்சம் நல்ல தண்ணியோடு கலந்து அதை வடிகட்டி கொடுத்தாங்க.. இப்போ நேரடியா சாய கழிவையே வடிகட்டி தர்ராங்கலாம்.. இதெல்லாம் மற்ற மாவட்ட மக்கள் எதிர்ப்பை சமாளிக்கவும், ஈரோட்டு ஹாச்பத்திரிகளின் வருமானத்தைப் பெருக்கவும் நடக்குற சூது. பலியாக வேண்டாம்.. நிலத்தடி தண்ணிய பயன்படுத்திக்கலாம் னு எண்ண வேண்டாம். லண்டன் நீரியல் அறிஞர் சிவகுமார் போனவாரம் ஈரோட்டில் பல இடங்களில் நீர் மாதிரிகளை சோதித்துவிட்டு ஈரோட்டின் நிலத்தை நீரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கு என்று கூறியுள்ளார். நிலத்தடி நீரிலேயே நேரடியாக சாய விஷத்தை போர் போட்டு கலந்துள்ளார்கள். இனி நல்ல தண்ணி வேணும், நோயின்றி வாழனும் என்று நினைப்போர் ஊரை காலி செய்து போக வேண்டும்.. இல்லை வெளியூர் நீரை வரவைத்து குடிக்கவேண்டும் அல்லது மழைநீரை சேமித்து வைத்து குடிநீராக பயன்படுத்த வேண்டும்.

  ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates