Trending

Friday, 12 May 2017

அன்னதாதா - கொங்குமக்களின் விருந்தோம்பும் பண்பு

ஊட்டுக்கு ஊடு திண்ண.. ஊருக்கு ஊர் சாவடி.. பட்டணத்துல சத்திரம். கொங்க தேசத்துல, நம்ப ஊர் வழியா பயணம் போறவங்க கூட கஷ்ட பட கூடாதுன்னு கட்டி வச்சதுதான் திண்ண, சாவடி, சத்திரம் எல்லாம். ஊர் சாவடில யாராவது வெளியூர்க்காரன் இருக்கானா னு பார்த்து, அவனுக்கும் சோறு போட்டுட்டு தான் குடியானவங்க சாப்புடுவாங்க. தன்னோட எல்லைல ஒருத்தனும் பசியோட தூங்கக்கூடாதுன்னு நெனைக்கற புண்ணியவான் தான் குடியானவன். வயிற்றுக்கு சோறு கேட்கும் பிச்சைக்காரன் முதல் நாட்டை ஆளும் பட்டக்காரன் வரை அனைவருக்கும் வரிசையாகப் படியளக்கும் பரமசிவன், கொழுமுனை பிடித்து உழுதுண்டு வாழும் காராள வம்ச குடியானவன். ஏர் எழுபது.


Image may contain: 2 people, text


Image may contain: people standing, sky, stripes and outdoor
சாவடியும் ஊர்க்கிணறும்

உலகில் மக்கள் பசிப்பிணியால் துன்புறவே அவர்கள் இறைவனை வேண்ட சிவபெருமான் விஷ்ணுவிடம் மக்களை அனுப்பி வைக்கிறார். மகாவிஷ்ணு தனது ஆத்மசக்தியிலிருந்து மரபாளனைப் படைத்து உலகிற்கு ஏர்முனையால் உணவளிக்கச் சொல்கிறார். அந்த இறைவனின் கட்டளையை ஏற்று குல தர்மமென உலகிற்கு சோறிடுவதை ஆதிகாலம் முதல் கங்கா குல காராள வம்ச வெள்ளாளர்கள் செய்து வருகிறோம்.

ஸ்ரீ கிருஷ்ணரால் வணங்கப்படுபவர் - நித்யன்ன தாதா:
ஒருநாள் இரவில் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா யாரையோ பிரார்த்தித்துக் கொண்டிருப்பதைக் கண்டு ருக்மணி தேவியார், உலகே உங்களை வணங்க நீங்கள் யாரை வணங்குகிறீர்கள் என்று கேட்கிறார். தான் வணங்கும் நபர்களை வரிசையிட்டு சொல்வதில் முதல் ஆளாக ஸ்ரீ கிருஷ்ணர் சொல்வது "நித்ய அன்ன தாதா"

நித்யான்ன தாதா தருணாக்னிஹோத்ரி
வேதாந்தவித் சந்திர சஹஸ்ர தர்சீ
மாஸோபாவாசீச பதிவ்ரதா ச
ஷட் வந்தனீயா மம ஜீவ லோகே

(பொருள்: இந்த மனிதர்கள் வாழும் பூமியில் நான் ஆறு வகையான மக்களை வணங்குகிறேன்: தினமும் அன்னதானம் செய்வோர், தினமும் அக்னிஹோத்ரம் செய்வோர், வேதம் அறிந்தவர்கள், சஹஸ்ர சந்திர தரிசனம் செய்து—சதாபிஷேகம் செய்துகொண்டோர் – மாதா மாதம் உபவாசம் இருப்போர், பதிவ்ரதையான பெண்கள்.)

அனுதினமும்.. ஆயுள் முழுக்கவும்.. தனது வம்சம் முழுக்கவும்.. அன்னதானம் செய்வதை குலதர்மமாக செய்பவன் வெள்ளாளக் குடியானவன் தானே! ஸ்ரீ கிருஷ்ணரால் வணங்கப்படும் நிலையை விடவும் உயர்ந்த ஸ்தானம் உண்டோ?

ஸ்ரீ கிருஷணர் மட்டுமின்றி, ஏராளமான பெரியவர்கள், யோகிகள், ஞானிகள் அன்ன தர்மத்தைப் புகழ்ந்துள்ளனர். தானத்திலே சிறந்த தானங்களை அதிதானம் என்பார்கள். அவற்றிலும் சிறந்தது அன்னதானம். அன்னதானத்தைப் புகழாத சாஸ்திரங்கள், நூல்கள் இல்லை. விருந்தோம்பல் பற்றி வள்ளுவர் ஒரு அதிகாரமே கூறியுள்ளார். அதனால்தான் பண்டிதர்கள் கூட தங்கள் உணவருந்தி முடித்த பின் வாயும் வயிறும் 'அன்னதாதா சுகீ பவ' (அன்னமளித்தவர் சுகமாக வாழ வேண்டும்) என்று பிரார்த்திப்பதை வழக்கமாக கொண்டிருப்பதால் காலம் காலமாக நம் கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள் வம்சமே ஆசி மழையில் திளைத்த குடி எனலாம்.

வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் என்று நம் சாதிக்கு அடிப்படையான விளக்கமாகவே  விருந்தோம்பலைக் கூறுகிறது திரிகடுகம். அதிதி தேவோ பவா என்று வீட்டுக்கு வரும் விருந்தினர்களை தெய்வத்தோடு ஒப்பாக கூறுகிறது நம் தேச மரபு.

கொங்கு வரலாற்று சம்பவங்கள் சில..


சோழன் அவைக்கு சென்றிருந்த கம்பர் அங்கே வெள்ளாளர்கள் பெருமையினை விட்டுத்தாராது சோழனை விடவும் வெள்ளாளர் உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு வந்தார். அப்போது சோழன் தன நாட்டில் பாயும் காவேரி பற்றி பெருமை பேசியபோது காவேரியின் வெள்ளம் கொங்கதேசத்தில் கவுண்டர்கள் வீட்டில் மக்கள் விருந்துண்டு வாய் கொப்பளித்து துப்பிய நீர்தான் என்று நிறைந்த அவையில் கூறி, அதை நிரூபிக்காவிட்டால் சிரச்சேதம் என்று சோழன் சொல்ல, காவேரியில் எச்சில் இலைகள் மிதந்துவருவதைக் கொண்டு நிரூபித்தும் காட்டினார். அக்காலம் தொட்டு அன்னமிடும் தர்மமே நம் குலப்பெருமையை நிலைநாட்டி வருகிறது.

தாமரை நாச்சியார் சொல்:

அண்ணமார் வரலாற்றில் வெகுகாலமாக பிள்ளையில்லாமல் இருந்த தாமரை நாச்சியார் தனக்குப் பிள்ளையில்லாமல் போன காரணமென்ன என்று புலம்புகையில் "பிச்சைக்கு வந்தவரை பின்னே வரச்சொன்னோமா? அன்னமென்று வந்தவரை அடித்துத் துரத்தினோமா?" என்று பாடுவார். இதன்மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டியது, வீடு தேடி வந்தவர்களுக்கு அன்னமிடுவது புண்ணியம் என எண்ணாமல் அன்னமிடாவிட்டால் வம்சமழிந்துபோகும் பாவம் என்றும் எண்ணுமளவு இந்தத் தர்மத்தை சிரத்தையாக பின்பற்றியுள்ளார்கள் என்பதே.

குடிசாதிகளுக்கு உணவு
குடிசாதிகளுக்கு இந்நாள் வரையுமே வீட்டுக்கு வந்தால் உணவிடாமல் அனுப்பமாட்டார்கள். அறுவடை முடிந்தால் எல்லா ஜாதிகளுக்கும், கோயில் தர்மங்கள், தேவதாசிகள், முடவாண்டி சத்திரம், பறையன் முதல் பட்டக்காரன் வரை அனைவருக்கும்  படியளப்பது குடியானாவர்கள் வழக்கம். குடிஜாதிகளுக்கு கொடுப்பது கூலிதானே என எண்ணலாம்; ஆனால் பணம் என்றும் தனியாக கொடுத்துவிட்டு உணவுத் தானியமும் அளக்கப்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டியுள்ளது.

தாது வருஷ பஞ்சகாலம்

தாது வருஷ பஞ்ச காலத்தில் வெள்ளைக்காரர்கள் ரொட்டி கொடுத்து குடிசாதிகளை மதம் மாற்றிக் கொண்டிருக்க, கொங்கு வெள்ளாள கவுண்டர்களோ தங்கள் விதைக்காக வைத்திருந்த விதை நெல், விதைசோளம், விதைக்கம்பு போன்றவற்றையும் குத்தி கஞ்சி கூழ் காய்ச்சி ஊற்றி குடிகள் உயிரைக் காத்தனர். இதை இன்றளவும் அந்த குடிசாதி மூத்தவர்கள் சொல்லக் கேட்கலாம்.

அன்னத்தியாகி
கன்னிவாடியில் இருந்து வந்த ஆதிகன்னன் கூட்ட பிரிவில் வந்த அம்மையப்பன் பிள்ளைபெருமாள் போன்ற குடியானவர்கள் பாண்டியர் ஆட்சியில் மொளசியில் நாட்டார் பதவி பெற்றனர்.  கீழ்க்கரை பூந்துறை நாட்டு மொளசி காணிக்குட்பட்ட வேலப்ப கவுண்டர் என்ற கன்ன கூட்ட பெரியவர் வசம் பாண்டியன் பஞ்ச காலத்தின்போது தனது படைக்கு அன்னமிட்டு போஷித்து காத்துத் தருமாறு வேண்டுகோள் விடுக்க, அவர் காப்பாற்றி பஞ்சம் தீர்ந்து ஊர் திரும்பிய காவலர்கள் வேலப்பகவுண்டரது உபசரிப்பைப் புகழ்ந்து கூறவே அவருக்கு அன்னத்தியாகி என்ற பட்டமளித்தார்.

பன்னப் படாதருந் தப்புன லற்றிடோர் பஞ்சமுற்றுங்
கன்னித் துறைப்பாண் டியன்படைக் கெல்லாங்
களித்தமுதிட் டன்னத்தியாகி யெனவச் செழிய னழைக்க வுயர்
வன்னப் பரிவேன் முளசையுஞ் சூழ்கொங்கு மண்டலமே.

-கொங்கு மண்டல சதகப்பாடல்

(க-ரை) உண்ணுதற்குத் தண்ணீரு மகப்படாத பஞ்சகாலத்திற்
பாண்டியன் சேனைக்கு அமுதூட்டி அன்னத்தியாகி என்று புகழ்ப்
பெயர்பெற்ற வேலன் என்பவனது முளசை நகருங் கொங்கு மண்டலம்
என்பதாம்.

வள்ளல் சடையப்ப கவுண்டர்
சிறு வயது முதலே சடையப்ப பூபதிக்கு தன்னியல்பிலேயே  கொடைக்குணம் வாய்க்கப்பட்டிருந்தது. இல்லாதொருக்கும் பசித்தோருக்கும் வயிறும், மனதும் வாழ்த்தும் வரை ஈவதை தர்மமென கொண்டிருந்தார். வள்ளலின் அன்னமிடும் இயல்பை கம்பரின் பாடல்கள் மூலம் மிக நன்றாகவே அறியலாம். 

ஆன்பாலும் தேனும் அரம்பைமுதல் முக்கனியும்
தேன்பாய உண்டு தெவிட்டுமனம் - தீம்பாய்
மறக்குமோ வெண்ணை வருசடையா கம்பன்
இறக்கும்போ தேனும் இனி

Image result for வள்ளல் சடையப்ப கவுண்டர்

பரராஜசிங்கன் என்ற இலங்கை அரசன் அந்நாட்டை ஆண்டு வந்த காலத்தில் கடுமையான பஞ்சம் வந்துற்றது. பசியின் கொடுமையால் குடிகள் படாத பாடு பட்டனர். மன்னன் மனம் பதைத்து வாடினான்; தடையின்றிக் கொடுக்கும் தகைமை வாய்ந்த சடையப்ப வள்ளலின் உதவியை நாடினான். உடனே அவர் களஞ்சியத்திலிருந்த நெல் கப்பலேறியது; ஆயிரம் கப்பல்களில் யாழ்ப்பாணத் துறையில் வந்து நெல் மலைபோற் குவிந்தது.

சிறுகுடி வேளாளர் பண்ணன் பசிப்பிணி மருத்துவன்:

பல சங்கப்புலவர்களால் பாடப்பட்டவர் சிறுகுடி கிழான் பண்ணன் என்ற சோழ நாட்டு வெள்ளாளர். "யான் வாழும் நாளும் பண்ணன் வாழி" (நான் வாழும் நாள் வரையிலும் பண்ணன் வாழ வேண்டும்) என்றும், பசிப்பிணி மருத்துவன் என்றும் புலவர்களால் போற்றிப் பாடப்பட்டவன். பண்ணனின் இல்லத்தில் உணவு பரிமாறும் ஒலி கேட்டுக் கொண்டே இருக்குமாம். அங்கிருந்து எறும்பு வரிசையாக ஊர்ந்து செல்வதுபோல சோற்றுக் கையோடு சிறுவர்களும் பாணர்களும் சென்று கொண்டிருப்பார்களாம். எளிய விவசாயியான பண்ணனிடம் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பெரிதும் நட்பும் மரியாதையும் கொண்டவன். சோழன், பண்ணன் மீது பாணர் பாடுவதுபோல எழுதிய சங்கப்பாடல் கீழே,

யான்வாழு நாளும் பண்ணன் வாழிய
பாணர் காண்கிவன் கடும்பின திடும்பை
யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்ந் தன்ன
ஊணொலி யரவந் தானுங் கேட்கும்
பொய்யா வெழிலி பெய்விட நோக்கி
முட்டை கொண்டு வற்புலஞ் சேரும்
சிறுநுண் ணெறும்பின் சில்லொழுக் கேய்ப்பச்
சோறுடைக் கையர் வீறுவீ றியங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டுங் கண்டும்
மற்று மற்றும் வினவுதுந் தெற்றெனப்
பசிப்பிணி மருத்துவ னில்லம்
அணித்தோ சேய்த்தோ கூறுமி னெமக்கே. (173)
- சிறுகுடி கிழான் பண்ணனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பாடியது

முளைவாரி அன்னமிட்டோர்:
வெள்ளாளரின் தொண்ணூற்றாறு மெய்க்கீர்த்திகளில் ஒன்றானதும் எங்கெங்கும் நம் புகழ் பற்றிப் பேசும்போதும் குறிப்பிடப்படுவதுமான நிகழ்வு முளைவாரி அன்னமிட்ட சான்றோர் என்பதாகும். அடர கூட்டம் னு ஒரு கூட்டம்.. அதில் காலிங்க நல்லன்ணன் னு ஒருவர். வெள்ளாளர்கள் பிறவிக் குணமான விருந்தோம்பும் பண்பை குறைவின்றி பெற்றவர். போறாத காலத்துல ஒரு புலவர் அவரிடம் வந்து சேர்ந்தார். தனது வறுமை நிலையை சொல்லி பொருள் கேட்டார். கையில் இருந்த தானியம், பணமெல்லாம் கொடுத்தது போக, அந்த புலவருக்கு சோறு போட வீட்டில் தானியமில்லை. உடனே அன்றுதான் வயலில் நெல் நாத்துக்கு விதைநெல் பாவியது நினைவுக்கு வந்தது. உடனே சென்று விதைத்த நெல்லை அரித்து வடித்து கழுவி அதை சோறு சமைத்து போட்டாராம். வறுமை நிலையில் முளைக்கப் போட்ட தனது விதை நெல்லையும் பொறுக்கி வந்து அன்னமிட்டதை அறிந்த புலவர் மனம் நெகிழ்ந்து விட்டாராம். அந்த பெருமகனை புலவர் வாயார மனதார வாழ்த்தி சென்றாராம். இதைத்தான் முளைவாரி அன்னமிட்ட சான்றோர் என்று குடியானவர்களை புலவர்கள் போற்றி பாடுவார்கள். போதும் என்று சொல்லக்கூடியதும், வஞ்சகமின்றி தின்ற சோற்றுக்கு வாழ்த்து சொல்வதும் வயிறு ஒன்றுதான். நம்மை நாடி வருபவர்களுக்கு சோறு போட தயங்காதீர்கள் கணக்கு பார்க்காதீர்கள் சொந்தங்களே. இது நம் குல கடமைகளில் ஒன்று. இன்றளவும் நம் பெருமையை எல்லா சாதியையும் பேச வைத்த காரணங்களில் முக்கியமானதும் ஆகும். 

Image may contain: text


புதுசத்திரம்
ராசிபுரத்தை அடுத்த புதுச்சத்திரம் என்னும் ஊரே தூரன் கூட்டத்து குமாரமங்கலம் ஜமீன் குடும்பத்தாரால் உருவாக்கப்பட்ட ஒரு அன்ன சத்திரத்தின் பேரால் உருவானதாகும்.

அன்னதானப்பந்தல் மண்டபகட்டளை தண்ணீர்பந்தல்:
ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் சிறு கோயில்கள் முதல் காசி, சிதம்பரம்,  பழநி, ஸ்ரீரங்கம், திருவானைக்கா உள்ளிட்ட பெரும் கோயில்கள் வரை அன்னதான தர்ம சத்திரங்களை கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் உருவாக்கி வைத்திருந்தனர். தண்ணீர்பந்தல் தர்மங்கள் புண்ணிய காலம், வெப்ப காலங்களில் செயல்படும். தண்ணீர் பந்தல் என்றால் வெறும் தண்ணீர் என்றில்லாமல், நீராகாரம், மோர், பானகம், உப்பு-ஊறுகாய் முதலியவை வழங்கப்படும். திருசெங்கோட்டு செல்லன் கூட்டத்து மடத்துச் செப்பேடு தெளிவாக இதைக் கூறும். இன்றும் கவுண்டர்கள் எங்கே சென்று குடியமர்ந்தாலும் அங்கே அன்னதானம் செய்வதைப் பெருமையாகச் செய்துவருகிறார்கள்.

No automatic alt text available.


அன்னதானம் பெறாமல் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அன்னதானம் கொடுத்து சிறப்படைய வேண்டும். நம் முன்னோர்கள் எங்கேயும் யாரிடமும் கையேந்தமாட்டார்கள்.

சொந்தங்களே.. எங்கே இருந்தாலும் சென்றாலும் நாம் பிறருக்கு அன்னமிடுவதை மறக்கக் கூடாது. நம் வம்சம் இவ்வளவு தழைத்து புகழோடு இருக்கக் காரணமே தெய்வத்தின் கட்டளையாகவும், முன்னோர் தர்மமாகவும் குலமரபாகவும் உள்ள அன்னமிடும் தர்மத்தைத் தொடர்ந்து கடைபிடிப்பதால் தான்.

குடியானவர்களைப் படியளக்கும் பரமேஸ்வரனாக புலவர்கள் பாடியது:
தேரோடும் வேதியர் மன்னவர் சீர்வசிகர் மூன்றினில்
கூறிடும் பின்னோர் முதலான சாதி குலங்களுக்கு
நீரிடு மேழிச் சிவனாக வந்து நிலம்உழுதும்
சோறிடு மேழியன் வேளாளச் சாதி துணைநமக்கே!

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates